ஒன்பதாவது படிக்கையில் என்றுதான் நினைக்கிறேன்.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் படிக்கையில் ஒரு நாள் காலை ப்ரேயரின் போது தலைமையாசிரியர் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்த போது பின் வரிசைகளில் ஒரு பரபரப்பு. இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரைக் காண்பித்து மாணவர்கள் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் இயக்குனர் துரை. இன்னொருவர் இயக்குனரும் கதாசிரியருமான வியட்னாம் வீடு சுந்தரம். திருக்காட்டுப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வியட்னாம் வீடு சுந்தரம் என்பதால் அவரை நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. நான் காரைக்குடியிலிருந்து அப்போதுதான் திருக்காட்டுப்பள்ளி சேர்ந்திருந்ததால் எனக்கு தெரியவில்லை.
வகுப்பு தொடங்கிய பிறகு எல்லோருக்கும் ஒரே கேள்விதான். அவர்கள் எதற்கு ஸ்கூலுக்கு வந்தார்கள்?
மதியமே அதற்கான விடை கிடைத்து விட்டது. ஸ்ரீகாந்த், ஷோபா நடிக்கும் "ஒரு வீடு, ஒரு உலகம்" படத்தின் படப்பிடிப்பை பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி கேட்டுத்தான் அவர்கள் வந்திருந்தார்கள். ஆஹா, ஒரு திரைப்பட ஷூட்டிங்கை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சி கிடைத்தது. ஆனால் விடுமுறைக்கு ஊர் போய் விட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு அந்த படத்தின் முடிவு முற்போக்கான ஒன்றுதான். கணவனை இழந்த பெண்ணிற்கு (அதுவும் பிற்போக்குத்தனத்தில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த) அப்பெண்ணின் மாமனாரே மாற்று மதத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியருக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் கதை வசனம் சமீபத்தில் மறைந்த திரு வியட்னாம் வீடு சுந்தரம். அப்படத்தின் ஒரு அற்புதமான பாடலை இங்கே கேட்டு ரசியுங்கள்.
எங்கள் பள்ளி அத்திரைப்படத்தில் கல்லூரியாக மாறி இருக்கும். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கல்லூரி மாணவர்களாகி இருப்பார்கள்.
திரு வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களின் கதை வசனத்தில் வந்த இப்படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமானது .
தமிழ்ப்படங்களில் இந்த கோர்ட் சீனும் மிகவும் முக்கியமானது.
திரு வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களுக்கு எனது அஞ்சலி.
பின் குறிப்பு : நீண்ட நாட்களாக ட்ராப்டில் இருந்ததை இன்றுதான் வெளியிட முடிந்தது.
No comments:
Post a Comment