Monday, August 29, 2016

ஆள்தான் எளிமை. ஆனால்




பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வேலூர் நகரத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து வேலூர் கலை மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தோம். அந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக திரு கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.  திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவினர் வ்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடர்பாக கங்கை அமரன் அவர்களை சந்தித்த போது (அப்போது அவர் பி.ஜே.பிக்கு செல்லவில்லை)  கரிசல் குழு திருவுடையானையும் வரச் சொல்லி இருக்கிறேன் என்றார்.

அங்கிங்கு இசைக்குழுவை வரவேற்று அவர்களை தங்க வைக்கும் பொறுப்பு என்னுடையது. அவர்கள் அதிகாலை வருவதாக இருந்ததால் மண்டபத்திற்கு காலையில் நானும் சென்று விட்டேன். அவர்களுக்காக காத்திருந்த போது ஒல்லியான உருவத்தில் வேட்டி கதர் சட்டையோடு ஒருவர் அங்கே வந்தார். தன்னை திருவுடையான் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரது பாடல்களைக் கேட்டிருந்தாலும் அவரைப் பார்த்ததில்லை. அவரது தோற்றத்திற்கும் அவரது கணீர்க்குரலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது.

தொழில் முறை பாடகர்கள் பல பேர் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அன்று சிறப்பாக அமைந்தது தோழர் திருவுடையான் பாடிய பாடல்களே.  "ஆத்தா உன் சேலை" என்று அவர் பாடிய பாடலே அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது. 

நிகழ்ச்சி முடிந்ததும் ஊர் திரும்புவதற்கு முன்பாக அவருக்கான பயணப் படியை அளிக்கையில் "தோழர், இது அதிகம்" என்று சொல்லி நான் கொடுத்ததில் ஒரு தொகையை வலுக்கட்டாயமாக திருப்பிக் கொடுத்து விட்டார். டவுன் பஸ் பிடித்து பேருந்து நிலையம் செல்கிறேன் என்பவரை ஒரு தோழரது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அனுப்புவதே சிரமமாகி விட்டது.

தோழர் திருவுடையான் எளிய தோழராக இருந்தாலும் அவரது குரல் கம்பீரமானது. தமிழை அழுத்தம் திருத்தமாக பாடக் கூடியவர். "தமிழா, நீ பேசுவது தமிழா" என்பது அவரது பிரபலமான பாடல். அதை பாடுவதற்கான முழு தகுதியும் அவருக்கு உண்டு. கொள்கைகளிலும் அவர் உறுதியானவர் என்பதை தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், தனது முக நூல் பதிவில் குறிப்பிட்டதைப் படித்தால் உணர முடியும். 


ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தனது ஒரு நிறுவனத்தின் பாடகராகப் பொறுப்பேற்க அழைத்தார். மாதாமாதம் பெரியதொரு தொகை வழங்குவதாகக் கூறினார்.

“நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளர். இந்த இயக்கப் பணிகளைத் தொடரவே விருமபுகிறேன். உங்கள் அமைப்பில் இணைய முடியாது, மன்னியுங்கள்,” என்று பணிவோடு சொன்னார் தோழர். சொந்தப் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் செங்கொடி இயக்கத்தின் கானமாய் ஒலித்துவந்தார்.

 
தோழர் திருவுடையான் இன்று காலை வாடிப்பட்டி அருகே ஒரு விபத்தில் காலமாகி விட்டார். கலை இரவு மேடைகளுக்கு ஒர் பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் வாழும். 

தோழர் திருவுடையான் அவர்களுக்கு வீர வணக்கம்.

இந்தக் காணொளி மன அழுத்ததை  இப்போது அதிகரிக்கிறது. 

 

2 comments:

  1. We surely belong to almighty and to Him we shall return.May the soul rest in peace.

    ReplyDelete
  2. நல்ல ஒரு மனிதரை பற்றி படித்து கொண்டுவரும்போது இறுதியில் சோகம் அவர் மறைந்துவிட்டார் (:

    ReplyDelete