நேற்று எனது மகனின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. ஐந்தாண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு நேற்று பட்டம் பெற்று விட்டான். பட்டமளிப்பு விழாவிற்கான தேதியை அறிந்தவுடனேயே மனது பின்னோக்கிப் போய் விட்டது.
எங்கள் கல்லூரியிலும் பட்டமளிப்பு விழா நடத்தித்தான் பட்டம் கொடுப்பார்கள். தேர்வு முடிவெல்லாம் வந்து ஒரு வருடமெல்லாம் கூட கடந்த பின்பு நிதானமாகத்தான் கொடுப்பார்கள். கவுன் மாட்டிக் கொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு பட்டம் பெறும் அந்த தருணத்திற்காக ஆவலோடு காத்திருந்தேன்.
நான் எல்.ஐ.சி க்கு விண்ணப்பிக்கையில் மார்க் ஷீட் மட்டும்தான் வந்திருந்தது. ப்ரொவிஷனல் சர்டிபிகேட் வந்திருக்கவில்லை. அந்த காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் எல்.ஐ.சி யில் உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு முன்பாக மதுரைக்கு போய் ப்ரொவிஷனல் சர்ட்பிகேட் வாங்கி வந்தேன். அப்போது பட்டமளிப்பு விழா பற்றி விசாரித்த போது விலாசத்தைக் குறித்துக் கொண்டு கடிதம் அனுப்புவதாகச் சொன்னார்கள்.
எல்.ஐ.சி யில் சேர்ந்து ஆறு மாதத்திற்குப் பின்பு மதுரையில் ஒரு உறவினர் திருமணம். அப்போது மீண்டும் கல்லூரிக்குச் சென்ற போது விசாரித்தால், அதே பதில்தான். விலாசம் மாறியிருந்ததால் மாற்றிக் கொடுத்தேன். கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஸ்டாம்ப் ஒட்டிய கவர் வேறு கொடுத்து விட்டு வந்தேன்.
ஆனால் எந்த தகவலும் இல்லை. ஒரு கல்லூரி நண்பன் நெய்வேலியில் இருந்த அவனது அண்ணன் வீட்டிற்கு வந்தவன், என்னை அலுவலகத்தில் வந்து பார்த்தான். அப்போதுதான் அவன் அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான். பட்டமளிப்பு விழா முடிந்து ஒரு மாதமாகி விட்டதே, நீ ஏன் வரவில்லை என்று கேட்ட போது கோபம் கோபமாக வந்தது.
அத்தனை கோபத்தையும் ஒரு கடிதத்தில் காண்பித்தேன். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்ததால் பல புதிய ஆங்கில வார்த்தைகள் வேறு கற்றுக் கொண்டிருந்தேன். கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி காட்டமாக ஒரு கடிதத்தை கல்லூரி முதல்வருக்கு அனுப்பினேன்.
என் வாழ்க்கையில் நான் காத்திருந்த ஒரு உன்னதமான தருணத்தை பறித்தது நியாயமா என்று கேட்டு அக்கடிதத்தை முடித்தேன். அப்போது கிளைச் செயலாளராக இருந்த தோழர் விஸ்வேஸ்வரராவ், அக்கடிதத்தை தட்டச்சு வேறு செய்து கொடுத்தார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு பதிவுத்தபாலில் உங்களது பட்டச் சான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மொட்டையாக ஒரு கடிதம் வந்தது. என் உணர்வுகள் பற்றி ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
இப்படிப் பட்ட சிக்கல்கள் இல்லாமல் என் மகனது பட்டமளிப்பு விழா நடந்தது மகிழ்ச்சி.
All the best for your son.
ReplyDeleteThank You
Deleteபெருமைக்குரிய தருணம்.
ReplyDeleteஉங்க மகனுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
உங்களின் அன்பான வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றி
Deleteதங்களின் அன்புப் புதல்வருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் இனிய வாழ்த்திற்கு மிகவும் நன்றி நண்பரே
Delete