Tuesday, August 9, 2016

. . . . . . . . . . . . . . என்றே ஜெயமோகன் அறியப்படுவார்

ஆசான் ஜெயமோகனின் தடம் நேர்காணல் குறித்த முந்தைய பதிவின் தொடர்ச்சி

தெருவோர மாரியம்மனைக் கூட “பரபிரும்ம ரூபிணி” என்றுதான் சாதாரண மக்களும் அழைப்பார்களாம். அந்த அளவு மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ள வார்த்தையாம். நான் நிஜமாகவே முதல் முறையாக இந்த பேட்டி மூலமாகத்தான் கேள்விப்பட்டேன். இப்படித்தான் “அஹம் பிரும்மாஸ்மி” என்று சொல்லி பாலாவை குழப்பி கவிழ்த்து விட்டீர்கள்.

ஜெயமோகன் சாரே, தமிழகத்தில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் வார்த்தை என்னவென்று உங்களுக்கு தெரியுமோ? வேண்டாம். என் வலைப்பக்கத்தில் கெட்ட வார்த்தைகளுக்கு இடமில்லை.

தெலுங்கர்களுக்கு எதிராக வேறு அண்ணன் கிளம்பி விட்டார். அதிலே நில ஆக்கிரமிப்பு, பட்டா பறிப்பு என்று ஏராளமான புதிய கதைகள் வேறு.

தேசிய இனம் என்பதற்கும் ஜாதியம் என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் தானும் குழம்பி நம்மையும் குழப்பப்பார்க்கிறார். மாவட்டங்களுக்கு இடையேயான மோதல்கள் என புது ரூட் பிடிக்கிறார். இலங்கைப் பிரச்சினை குறித்து நேரடி விவாதம் நடத்துவோம் என்ற குணா.கவியழகன் பகிரங்கமாக சவால் விடுத்தும் ஆசான் பதுங்கி விட்டார். “அறம்” இருந்தால் விவாதிக்கலாமே

ஆசான் வேலை பார்த்த படங்களில் ஐந்து வெற்றிப்படங்களாம். பாபனாசம் ஏற்கனவே மலையாளத்தில் வெற்றி பெற்று கமலஹாசனோடு தமிழுக்கு வந்தது. அங்காடித் தெருவின் கதை வசந்த பாலனுடையது. நீர்ப்பறவையோ சீனு ராமசாமியின் கதை. வசனங்களுக்கு அவ்வளவு தளம் தேவைப்படாததால் கடைசி இரண்டும் தப்பித்தது.

நான் கடவுள், ஆறு மெழுகுவர்த்திகள் (ஆர்யா, ஷாமின் நடிப்பால் பேசப்பட்டாலும்) படங்கள் எல்லாம் எங்கள் சத்துவாச்சாரி ஸ்ரீனிவாசா தியேட்டருக்குக் கூட வரவில்லை என்கிற போதே அவற்றின் வெற்றி(?!?) உள்ளங்கை நெல்லிக்கனி. கடல் படத்தின் பிரம்மாண்டமான தோல்வியால் மணிரத்னம் அடுத்த படத்தில் சத்தமில்லாமல் இவரை கழட்டி விட்டு விட்டார்.

பெண் எழுத்தாளர்கள் மீது அவருக்குள்ள ஆணாதிக்க வன்மம் மீண்டும் ஆக்ரோஷமாக வெளிப்படுகிறது. நச்சுப் பற்களைக் கடித்துக் கொண்டே வன்மத்தை வெளியிடுகிறார். அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் மட்டுமே பெண் எழுத்தாளர்கள் ஈடுபடுகின்றனர் என்று அனைத்து பெண் படைப்பாளிகளையும் ஒரு சேர இழிவு படுத்துகிறார். பெண் எழுத்தாளர்களே சக பெண் எழுத்தாளரை “சுமாராகத்தான் எழுதுகிறார். ஆனால் அமெரிக்காவெல்லாம் போகிறார்” என்று கருதுவதாகச் சொல்லி சிண்டு முடிக்கிறார். ஜெயமோகன் தான் ஒரு மோசமான மனிதன் என்பதை இந்த பதிலில் மீண்டும் நிறுவிக் கொள்கிறார். பெண்கள் மீது கொண்டுள்ள இவ்வளவு மோசமான பார்வை கொண்ட ஒருவரை மனிதர் என்று சொல்வது கூட சரியில்லை.

ஈழப்பிரச்சினையோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள் தமிழ்நதியின் “பார்த்தினியம்” நாவல் யதார்த்தத்தை கூறுவதாக பாராட்டுகிறார்கள். ஆனால் இவரோ அதை புறங்கையால் தள்ளி எள்ளி நகையாடுகிறார். தமிழ்நதி பெண்ணாயிற்றே, ஆசானால் எப்படி ஏற்க முடியும்?

தோழர் ச.தமிழ்ச்செல்வனின் மூன்று, நான்கு கதைகளை மட்டும்தான் இவர் படித்திருப்பார் போல. அதனால்தான் மூன்று அல்லது நான்கு நல்ல கதைகளைத்தான் எழுதியுள்ளார் என்று சொல்லியுள்ளார். மன உணர்வுகளை தோழர் தமிழ்ச்செல்வன் போல உங்களால் நுட்பமாக ஒரு கதையிலாவது விவரிக்க முடியுமா என்று கேட்டால் அவராலும் அவரது தொண்டரடிப் பொடிகளாலும் பதில் சொல்ல முடியுமா? அறிவொளி இயக்கத்தில் செயல்பட்ட அனுபவங்களையும் தொழிற்சங்க அனுபவங்களையும் தோழர் தமிழ்ச்செல்வன் அருமையான நூல்களாக அளித்துள்ளார். அது போன்றதொரு மக்கள் மத்தியிலான கள அனுபவம் ஏதாவது ஆசானுக்கு உண்டோ?

சாத்தூர் லட்சணப்பெருமாளின் கதையை ஜெயமோகன் காப்பி அடித்ததை அம்பலப்படுத்திய காரணத்தால் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளரே அல்ல என்று காழ்ப்புணர்வை காண்பித்து விட்டார் ஜெமோ. அவருக்கு எழுத்தே வரவில்லையாம். ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு சவால். “சொல்லவே முடியாத கதைகளின் கதை” தொகுப்பில் வரும் ஒரே ஒரு கதை போலவாவது உங்களால் எழுத முடியுமா? ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, வேதனையை உங்களால் உணர முடியாததால், உங்களுக்கு அவர் எழுதுவதும் புரியவில்லை. கோளாறு உங்கள் புரிதலில்தான். அவர் எழுதுவதில் இல்லை. பாரதியும் கந்தர்வனும் எழுதியதும் கவிதை அல்ல என்று சொன்ன பவா.செல்லதுரை தான் எழுதியதை கதை அல்ல என்று ஜெமோ சொல்வார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். வியாசரும் வில்லிபுத்தூராரும் ஏற்கனவே எழுதி வைத்த மகாபாரதத்தை வைத்து இவரைப் போல யாரும் பிழைப்பு நடத்தவில்லை.

காவிக்கூட்டத்தின் சித்தாந்தங்களுக்கு எதிராக எழுதுபவர்கள் யாரையும் ஜெமோ எழுத்தாளராக ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதுதான் நிஜம். அவர் யாரை மறுக்கிறார்களோ, அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து விருதுகள் விஷயத்திற்கு வருகிறேன்.

இவர் யாரை பாராட்டி எழுதுகிறாரோ, அவருக்கு விருதுகள் தருவார்களாம். அதனால்தான் இவரால் ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளிகளுக்கெல்லாம் விருதுகள் கிடைக்கிறபோது வயிறு பற்றி எறிகிறது. அந்த பொசுங்கிய நாற்றம் எழுத்துக்களிலும் ஊறி துர்வாடை அடிக்கிறது.

பத்மஸ்ரீ விருதை. இவர் மறுத்து விட்டாராம். தேவா பிழைத்துக் கொள்வான் என்று தேவாவே சொன்ன தளபதி கதையாக பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதாக இவரே சொல்லிக் கொண்டிருக்கிறார். அறிவிக்கப்படாத விருதை மறுத்த முதல் மனிதர் இவர்தான். வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

“தம்பி டீ இன்னும் வரலை”

ஞான பீடமோ அல்லது இலக்கியத்திற்கான நோபல் பரிசோ, ஏதாவது ஒன்றை அவருக்கு கொடுத்துத் தொலையுங்கள். அதை “வாங்குவதற்கு” அவர் தயாராக உள்ளார். அதன் பின்பாவது அவரது இம்சை குறைகிறதா, உளருவது நிற்கிறதா என்று பார்ப்போம்.

நிராகரிப்பதுதான் அவர் மதிப்பீடு செய்ய பயன்படுத்தும் உத்தியாம். உங்களை முற்றிலுமாக நான் நிராகரிக்கிறேன்.

தான் எப்படி அறியப்பட வேண்டும் என்ற பிரகடன வாக்குமூலத்தோடு நேர்காணல் முடிகிறது.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல, தனது கருத்தோட்டத்துக்கு ஒத்து வராத அனைவரையும் காலில் போட்டு மிதிக்கிற, பெண்களுக்கு எதிரான இழி சிந்தனை கொண்ட, மோசமான இலக்கியப் போக்கை உருவாக்க நினைத்த வக்கிரமும் வன்மமும் கொண்ட அறமற்ற தமிழ் எதிரி என்றே ஜெயமோகன் வரலாற்றில் அறியப்படுவார்.

பின் குறிப்பு : அதே தடம் இதழில் “நாவல் வெளி” குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையும், கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய தனது அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட கவிஞர் அறிவுமதியின் கட்டுரையின் கடைசி வரியில் வேதனையோடு திடுக்கிட வைத்த கவிஞர் சுகிர்தராணியின் கவிதையும் மெல்லிசை மன்னரின் ஹார்மோனியம் பற்றிய கட்டுரையும் அபாரம். அவை இல்லையென்றால் ஐம்பது ரூபாய் விரயமாயிருக்கும்.

No comments:

Post a Comment