கேமரா இல்லாமல் மொபைல் போன் இல்லை என்று மாறிவிட்ட சூழலில் அழகாக படம்
எடுப்பது எப்படி என்பதுதான் பலருக்கும் உள்ள பிரச்சனை. டிஜிட்டல் கேமரா,
மொபைல் போன் கேமரா எதுவானாலும் அழகாக படம் எடுப்பது நம் கையில்தான்
இருக்கிறது. படம் தெளிவாகவும், பளிச்சென்றும் இருக்க அடிப்படையான 10
குறிப்புகளை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்சல் அதிகரிப்பது தெளிவைத் தருமா?
ஒரு
சதுர அங்குலத்தில் 120 புள்ளிகள் கொண்டது ஒரு பிக்சல். இது குறைந்த பட்ச
அளவுதான். பிக்சலின் அடர்த்தி அதிகமாக அதிகமாக படத்தின் தெளிவும்
அதிகரிக்கும். ஆனால், பிக்சல்களின் அடர்த்தி உயராமல் படத்தின் அளவை மட்டுமே
அதிகரித்து 0.3 ஆக்ஷ, 2 ஆக்ஷ, 5 ஆக்ஷ, 8 ஆக்ஷ, 16 ஆக்ஷ, 20 ஆக்ஷ என பல
அளவுகளில் மொபைல் கேமராக்கள் வந்துவிட்டன. இந்த பிக்சல் அதிகரிப்பு மட்டுமே
படத்தை தெளிவானதாக ஆக்கிவிடாது. எனவே, 5 மெகாபிக்சல் கொண்ட போனில் கூட
அழகிய படம் எடுக்கலாம்.
பிளாஷ் பயன்படுத்த வேண்டாம்
பிளாஷ்
போட்டு படம் எடுத்தால் படம் தெளிவாக தெரியாது. அதோடு மட்டுமல்லாமல்
துல்லியமாகவும் இருக்காது. உங்கள் புகைப்படம் அழகாக இருக்க வேண்டுமென்றால்
ப்ளாஷ் அம்சத்தை தவிர்த்து இயல்பான வெளிச்சத்தை கொடுத்து எடுக்கவும். ஆனால்
இருட்டான அறையில் இருந்தால் ப்ளாஷ் அம்சத்தை பயன்படுத்தலாம். அப்பொழுது
மிக அருகில் வைத்து படம் எடுக்காமல் தூரத்தில் வைத்து எடுத்தால் நன்றாக
இருக்கும்.
கேமரா லென்ஸ் சுத்தம்
மொபைல்
கேமராவின் லென்ஸில் தூசிகள் படிவதைத் தவிர்ப்பது கடினம். அதனை பஞ்சு போன்ற
துணியால் துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். தெளிவற்ற படம்
எடுக்கப்படுவதற்கு இந்த தூசிகளும் காரணம். ஆகவே போட்டோ எடுக்கும் முன்பு
லென்ஸ் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்த்து பின்பு படம் எடுக்கவும்.
பிரேமிற்குள் படம் இருக்கட்டும்
படம்
எடுக்கும்போது பிரேமிற்குள் காட்சி பொருந்தி வருகிறதா என்பதை கவனத்தில்
வைக்கவும். படம் எடுக்கும்போது பொருள் மையத்தில் இருக்கவேண்டும் என்று
நினைக்காமல், அழகாகத் தோன்ற ரூல் ஆப் தெர்ட்ஸ் (Rule of thirds)
விதிமுறையையும் பின்பற்றவேண்டும். ரூல் ஆப் தெர்ட்ஸ் என்பது கிடைமட்டம்
மற்றும் செங்குத்தாக பிரேமை ஒன்பது பகுதிகளாக பிரிக்கின்றது. பிரேமை
ஒன்பது பாகங்களாகப் பிரிக்கும் இந்தக் கோடுகளின் மீது எடுக்க விரும்பும்
பொருள் அமையும்படி படம் எடுத்தால் அது சிறந்த படமாக அமையும். இந்த பிரேம்
அமைக்கும் வசதி மொபைல் கேமரா செட்டிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஜூம் செய்வதைத் தவிர்க்கவும்
உயர்தரக்
கேமராக்களில் அதற்கென உள்ள ஜூம் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கலாம். ஆனால்,
மொபைல் போனில் உள்ள ஜூம் வசதியால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர
துல்லியமான படத்தை எடுக்க உதவாது. ஆகவே ஜூம் அவுட் (zoom out) மோடில்
படத்தை எடுத்து எடிட் செய்து கொள்ளவும்.
வெளிச்சம்
பிளாஷ்
பயன்படுத்தாமல் படம் எடுக்க இயற்கையான சுற்றுப்புற வெளிச்சத்தை சரியாகப்
பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ளவேண்டும். முதலில் வெளிச்சம் எங்கு
இருக்கின்றது என்பதை பார்த்து படத்தை ஃபோகஸ் செய்யவும். சில நேரத்தில்
இயல்பான மற்றும் போலியான வெளிச்சத்தை தெர்மாகோல், வெள்ளை அட்டை போன்ற
செயற்கையான எதிரொலிப்பான்களைப் பயன்படுத்தியும் படத்தை எடுக்கலாம்.
கேமரா அசையக்கூடாது
தெளிவற்ற
படங்கள் எடுக்கப்படுவதற்கு முதல் காரணம் கை நடுக்கம்தான். நல்ல படம்
எடுக்கக் கற்றுக் கொள்பவர்கள், மொபைலை இரண்டு கைகளாலும் அசையாமல்
கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.
ஷட்டர் வேகம்
கிளிக்
செய்யும்போது ஷட்டர் திறந்து மூடும்போது காட்சி பதிவாகிறது. இந்த ஷட்டர்
திறக்கும் வேகத்தைத் தேவைக்கேற்ப குறைப்பது நல்ல படத்தை எடுக்க உதவும்.
உதாரணமாக குறைந்த ஒளியுள்ள இடத்தில் ஷட்டரின் வேகத்தை குறைப்பது அந்தப்
பொருள் நன்றாக பதிவாவதற்கான அவகாசத்தை வழங்கும். அதுவே அதிக வெளிச்சம் உள்ள
இடத்தில் ஷட்டர் வேகத்தை அதிகரிக்கலாம். நகரும் படத்தை எடுக்க sport scene
என்பதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம்.
சரியான கோணம்
ரூல்
ஆஃப் தெர்ட்ஸ் போலவே சரியான கோணத்தில் படத்தை நிலை நிறுத்துவதும்
முக்கியமாகும். ஒரு படத்தை கூடுதல் அழகாக்க கேமராவின் கோணம் சரியாக
இருக்கவேண்டும்.இடத்திற்கு ஏற்ப கோணம் மாறுபடும். இது அனுபவத்தில்தான்
அறிந்து கொள்ள முடியும்.
போர்ட்ராயிட் லேண்ட்ஸ்கேப்
உயரவாக்கில்
எடுக்கப்படும் போர்ட்ராயிட் வகைக் காட்சிகள் அழகாக இருக்கும். அகலவாக்கான
லேண்ட்ஸ்கேப் வகையில் எடுக்கப்படும் படங்கள் போர்ட்ராயிடைவிட
சிறப்பானதாகவும் அழகாகவும் தோன்றும். பொதுவாக லேண்ட்ஸ்கேப் முறையில்
எடுப்பதே சிறந்தது.மேற்கண்ட அடிப்படைக் குறிப்புகள் மொபைல் கேமராவிற்கு
மட்டுமல்ல டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் படங்களுக்கும் பொருந்தக்
கூடியதே.
நன்றி - தீக்கதிர் 31.08.2016
No comments:
Post a Comment