Thursday, August 18, 2016

இந்தியா,பாகிஸ்தான் - ஒரு பைத்தியக்காரத்தன ஒப்பீடு





மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் அவரைப் போன்ற போலி தேசபக்தர்கள் அதிகமாகி விட்டனர். சுதந்திரத் தினத்தன்று இந்த போலி தேச பக்தர்களால் சுற்றுக்கு அனுப்பிக் கொண்டிருந்த ஒரு செய்தி பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக இருந்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில்தான் விடுதலை பெற்றது.

இந்தியர்கள் மைக்ரோ சாப்ட், பெப்சி, கூகிள் போன்ற நிறுவனங்களின் தலைவர்களாகி விட்டார்கள். பாகிஸ்தானியர்களோ பல தீவிரவாத அமைப்புக்களின் தலைவராகி விட்டார்கள்.

இந்தியா செவ்வாயில் நுழைந்து விட்டது. பாகிஸ்தானோ இந்தியாவிற்குள் நுழைய முயற்சிக்கிறது.

இதுதான் அச்செய்தி.

பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளின் தலைவர்களாக இந்தியர்கள் உள்ளார்கள். பெருமைதான். ஆனால் அவர்களால் இந்தியாவிற்கு என்ன ஆதாயம்? இந்திய மக்களுக்கு என்ன பலன்?

இந்தியரை தலைவராகக் கொண்ட மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்குகையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையை வாங்காமல் விட்டு அது மூடப்பட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுத்தெருவில் நின்றார்கள்.

இந்தியாவின் நீர் ஆதாரத்தை சூறையாடுவது தவிர, இந்திய உள்நாட்டு குளிர்பான நிறுவனங்கள் மூடப்பட்டதைத் தவிர பெப்சியால் என்ன பயன்? மோசமான உணவுக் கலாச்சாரத்தை உருவாக்குவதில் பெப்சிக்கும் கோக்கிற்கும் உள்ள பங்களிப்பை மறக்க முடியுமா?

சுந்தர் பிச்சையால் ஆண்ட்ராய்ட் புதிய வெர்ஷனுக்கு ஒரு இந்திய இனிப்பின் பெயரைக் கூட சூட்ட முடியவில்லை. நெய்யப்பம், நெய்யப்பம் என்று கனவு கண்டவர்களுக்கு கிடைத்தது என்னமோ அல்வா மட்டுமே.

ஆக இவர்களால் இந்தியாவிற்கு பெருமை என்பது வெறும் அற்ப திருப்திக்கு மட்டுமே.

சரி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் உள்ளது.

மனித வளர்ச்சி குறியீடு என்று உள்ளது. Human Development Index

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் தயாரிப்பது. 

குழந்தைகள் இறப்பு விகிதம், கல்வி, சுகாதாரம், தனி நபர் வருமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் படுவது. 

ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் மக்களுக்குப் போய் சேர்ந்துள்ளதா என்பதை சொல்கிற குறியீடு இது.

இதில் கடந்த ஆண்டு இந்தியா பிடித்துள்ள இடம் 130
பாகிஸ்தான் பிடித்துள்ள இடம் 147.

ஒன்றும் மிகப் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. சில புள்ளிகள்தான் வேறுபாடு. இந்தியா கீழிறங்கவோ, பாகிஸ்தான் மேலே செல்லவோ வாய்ப்பு அதிகமாக உண்டு. அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஒரே மாதிரிதான் உள்ளது. வறுமையிலோ, கல்வியிலோ, தனி நபர் வருமானத்திலோ இரண்டு நாடுகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 

ஒரு விஷயத்தில் பாகிஸ்தான் இந்தியாவை நெருங்க நீண்ட காலம் ஆகும் என்பது உண்மையே. டாலர் பில்லியனர் என்று சொல்லப்படுகிற ஆறாயிரத்து ஐநூறு கோடி அதிபர்கள் இந்தியாவில் 92 பேர் என்றால் பாகிஸ்தானில் வெறும் 44 பேர் மட்டுமே. மோடியின் சேவகம் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். என்ன அப்போது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகி மனித வளக் குறீயீட்டு எண் பாகிஸ்தானை விட பாதாளத்திற்குச் சென்று விடும்.

தேச பக்தி என்ற பெயரில் அபத்தமாக பேசுவதை, அண்டை நாட்டோடு பிடிவாதமாய் பகைமை பாராட்டுவதை நிறுத்திக் கொண்டால் அது இரண்டு நாடுகளுக்குமே நல்லது.  

2 comments: