Sunday, January 1, 2012

பாரத ரத்னா - ஒரு நியாயமான நீதிபதியின் வேதனை - சச்சின் ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம்

 பாரத ரத்னா விருது குறித்து நீதியரசர்  மார்கண்டேய கட்ஜு 

அவர்களின் அற்புதமான  உரை வண்ணக்கதிரில்  வெளியாகி

உள்ளது. சச்சின் டெண்டுல்கருக்காக பரிந்துரை செய்பவர்கள்

அவசியம் படிக்க வேண்டும். 


 

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும்?--மார்கண்டே கட்ஜூ

 

குடியரசு தினத்தன்று பாரத ரத்னா விருதுகள் வழங்கும் பிரச்சனை இப்போது செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது. உருது கவிஞர் மிர்சா காலிப், வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தபோது பலர் அதை எதிர்த்தனர். அவர்கள் உயிருடன் இல்லை என்பதும், உயிருடன் இல்லாதவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் அதற்குக் காரணம் கூறினார்கள்.

சரியான நபர்களாக இருந்தால் அவர்கள் இறந்திருந்தபோதிலும்கூட அவர்களுக்கு விருதுகள் வழங்குவதில் தவறேதுமில்லை என்பதே என் கருத்தாகும். பாரத ரத்னா விருதுகள் கடந்தகாலங்களில் அவ்வாறு சிலர் இறந்தபின்னரும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. இதற்கு இரு எடுத்துக்காட்டுகள்: சர்தார் பட்டேலும் டாக்டர் அம்பேத்காரும் ஆவார்கள்.
கவிஞர் மிர்சா காலிப் நம் காலத்தைச் சேர்ந்த கவிஞர். ராமரைப் போன்று புராண புருஷர் அல்ல. அதேபோன்று கௌதம புத்தர் போன்று பழங்காலத்தவருமல்ல. நிலப்பிரபுத்துவ பாரம்பர்ய பழக்க வழக்கங்களினூடே அவர் வளர்க்கப் பட்டிருந்தபோதிலும், நவீனகால நாகரிகத்தின் அனுகூலங்களை உற்றுநோக்கி உள்வாங்கியிருந்ததன் மூலம் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்தவர்.

அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:

‘‘இமான் முஜே ரோக் ஹே, ஜோ கெஞ்சே ஹே முஜே குஃபர்
கபா மேரே பீச்சே ஹே, கலேசா மேரே ஆகே’’

‘கலேசா’ என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தேவாலயம். ஆனால் இங்கே அவர் நவீன நாகரிகத்தைக் குறிப்பிடுகிறார். அதேபோன்று, ‘கபா’ என்றால் மெக்காவின் புனித இடத்தைக் குறிக்கிறது. ஆனால் இங்கே அவர் நிலப்பிரபுத்துவத்தைக் குறிப்பிடுகிறார். எனவே இக்கவிதையின் உண்மையான பொருள்:

‘‘மத நம்பிக்கை என்னைப் பின்னே இழுக்கிறது, ஆனால் கடவுள் இருக்கிறாரா என்கிற ஐயம் என்னை முன்னே தள்ளுகிறது,
நிலப்பிரபுத்துவம் என் பின்னே இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னே இருக்கிறது’’
கலிப் இவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை நிராகரித்து, நவீனகால நாகரிகத்தை வரவேற்கிறார். எப்போது? 19ஆம் நூற்றாண்டின் மத்தியகால வாக்கில், இந்தியா நிலப்பிரபுத்துவத்தின் கீழ் முழுமையாக மூழ்கி இருந்த காலத்தில்.

உருது கவிதைகள் என்பவை இந்தியக் கலாச்சாரத்தின் பொக்கிஷத்திற்குள் ஒளிவீசும் ரத்தினக்கற்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. (இணையதளம் www.kgfindia.com-இல் காணப்படும் ‘உருது என்றால் என்ன’ என்கிற என் கட்டுரையைப் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.) மாபெரும் மொழியான உருதுக்கு மிகப்பெருமளவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 1947க்கு முன்னர், இந்தியாவில் உள்ள பெருவாரியான பகுதிகளில் படித்த வர்க்கத்தினரின் பொது மொழியாக உருது விளங்கியது. அவர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோ, சீக்கியர்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ - எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆயினும், 1947க்குப் பின்னர் சில சுயநல சக்திகள் உருது ஓர் அந்நிய மொழி என்றும், அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான மொழி என்றும் பொய்ப் பிரச்சாரத்தை உருவாக்கின.

மிர்சா காலிப் உருது மொழியின் உன்னதக் கவிஞர். நம் பல்வகைக் கலாச்சாரத்தின் சிறந்த பிரதிநிதி. அவர் ஒரு முஸ்லீமாக இருந்தபோதிலும், முழுமையான அளவில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர். அவருக்கு இந்து நண்பர்கள் ஏராளமாக உண்டு. அவர் இறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் நம் கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாததொரு பகுதியாக உருது இன்றும் விளங்குவதால் அவர் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2011 ஏப்ரல் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜாஷன்-இ-பஹார் முஷைரா என்னும் சிறப்புக் கூட்டத்தில்தான் கலிப் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்கிற என் வேண்டுகோளை நான் முதலில் முன்வைத்தேன். என் வேண்டுகோள் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட்டது. அவர்களில் இன்றைய மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆயினும், ஒரு முன்னணி இதழ் என்னுடைய வேண்டுகோளை ‘வெறிபிடித்த உணர்ச்சி’(‘ளநவேiஅநவேயடளைஅ படிநே நெசளநசம’) என்று விவரித்திருந்தது.
சரத் சந்திரர் சட்டோபாத்யாயா

அதேபோன்று சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். சரத் சந்திரர் தன் கதைகளில் சாதிய முறை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, மூடப் பழக்க வழக்கங்கள், (அவரது ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ரஹீன், தேவதாஸ், பிராமணனின் மகள், கிராமின் சமாஜ் கதைகளைப் பார்க்க) போன்று இன்றளவும் இந்தியாவைப் பீடித்துள்ள கொடிய சமூகக் கேடுகள் மீது மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்திருந்தார்.

கல்கத்தா டவுன் ஹாலில் 1933இல் சரத் சந்திரரைக் கௌரவிக்கும் வண்ணம் நடைபெற்றதொரு கூட்டத்தில் சரத் சந்திரர் கூறியதாவது:
‘‘நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். இவ்வாறு நான் கடன்பட்டிருப்பது எனக்கு முன் இத்துறையில் தடம் பதித்துள்ள முன்னோர்களுக்கு மட்டும் அல்ல. இந்த உலகத்தைச் சிருஷ்டித்து, அதற்குப் பிரதிபலனாக எதுவுமே பெறாத, தங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லாத சாமானிய மக்களுக்கும், யாரும் கேட்பாரற்றுக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வரும் நலிவடைந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்படியும், தங்களுக்காக சமூகத்தில் குரல் கொடுக்கும்படியும் அவர்கள்தான் எனக்கு உத்வேகத்தை அளித்தார்கள். இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொண்ணாக் கொடுமைகளை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஒவ்வோராண்டும் வசந்தம் வருவது என்னவோ உண்மைதான். ஆனால் அதன் அழகை, புதிதாகப் பூக்கும் மலர்களின் இனிய நறுமணத்தைச் சுவாசித்திட, குயில்களின் பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் பார்க்க முடியாத வண்ணம் என் பார்வை சிறைப்படுத்தப்பட்டிருந்தது.’’

நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சராசரியாக ஒவ்வொரு நாளும் 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சுகாதாரக் கவனிப்பின்மை, வீட்டுவசதியின்மை, கல்வியின்மை போன்று பிரச்சனைகள் பல்வேறு ரூபங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சரத் சந்திரரின் இந்த உரையானது எழுத்தாளர்கள் பலரை இன்றளவும் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளது.

சுப்பிரமணிய பாரதியார்
அதேபோன்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், முழுமையான தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய மாபெரும் தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

பெண்கள் விடுதலைக்கு ஆதரவாக பாரதி எழுதிய சக்திவாய்ந்த கவிதையை இங்கே தருகிறேன். நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சமயத்தில் ‘ஹின்சா விரோதாக் சங் (எதிர்) மிர்சாபூர் மோட்டி குரேஷ் ஜமாத் மற்றும் பலர்’ வழக்கில் 2008 மார்ச் 14 அன்று அளித்திட்ட தீர்ப்பில் இதனை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன் றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்.

பாரதியின் மற்றொரு கவிதை:

கும்மியடி தமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி.

ஏட்டையும் பெண்கள் தொழுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் கலிபையும், சரத் சந்திரரையும் சுப்பிரமணிய பாரதியையும் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாம் எந்த அளவிற்குமிகவும் கீழ்த்தரமான கலாச்சார மட்டத்தில் சிக்கிக்கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம் என்பதனையே இது காட்டுகிறது. நாம் நம் உண்மையான வீரர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்கிறோம், மாறாக மேலெழுந்தவாரியானவர்களை உயர்த்திப் பிடிக்கிறோம். இந்தியாவில் இன்றைய தலைமுறை அநேகமாக முற்றிலும் பண்பாடிழந்து விட்டது என்று கூறுவதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நடிகர்கள்-நடிகைகள், கிரிக்கெட் மற்றும் மேலெழுந்தவாரியான விஷயங்கள் என்றாகிவிட்டன.
இன்றைய இந்தியா எந்தத் திசையில் செல்வதென்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு நல்ல திசைவழியைக்காட்டி நாட்டு மக்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்பவர்களே இப்போது நமக்குத் தேவை. அத்தகையோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இல்லை. கிரிக்கெட் விளையாடுபவர்கள், திரைப்பட நடிகர்கள் போன்று எவ்வித சமூகப் பிரக்ஞையுமற்றவர்களுக்கு கொடுப்பது என்பது விருதினையே கேலிக்குரியதாக ஆக்கிவிடும்.

(மார்கண்டே கட்ஜூ,
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும்,
இந்திய பிரஸ் கவுன்சில் இன்னாள் தலைவருமாவார்.)
நன்றி: தி இந்து நாளிதழ், 21.12.11
தமிழில்: ச.வீரமணி 

6 comments:

 1. இடது சாரி சிந்தனை உள்ளவர்களுக்கு என்றுமே அங்கீகாரம் கிடைக்காது, அது இடது சாரி அரசாக இல்லாவிடில்

  ReplyDelete
 2. மிக அற்புதமான இடுகை ராமன் அவர்களே! சில வருடங்களுக்கு முன்னால் எம்.ஜி.ஆருக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. சச்சினுக்கு கொடுக்கத்தான் பொகிறார்கள். ஏன் கலஞர் , புரட்சிதலைவி அவர்களுக்கும் கொடுக்க வாய்ப்பு உண்டு. மறைந்த மாமேதை இ.எம்.எஸ் அவர்களுக்கு கொடுப்பதாக இருந்ததாகவும் அரசு விருது எதையுமே அவர் வாங்குவதில்லை என்பதால் அவருக்கு அளிக்கப்படவில்லை என்றும் சொல்வார்கள்.---காஸ்யபன்

  ReplyDelete
 3. மிகச்சரியான உண்மை நன்றி

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மிக சிறப்பான சிந்திக்கவைக்கும் பதிவு இது
  கவிஞர் மிர்சா காலிப் இவரை இப்பொழுதான் கேள்விபடுகிறேன்(வெட்கமும்படுகிறேன் )
  இந்த பதிவின் இவரையும் தெரியபடுத்தியதற்கு நன்றி .

  ReplyDelete
 6. தோழர் காஸ்யபன் அவர்களே, எம்.ஜி.ஆருக்கு ரிக்‌ஷாக்காரன் படத்திற்கு பாரத் பட்டம் கொடுத்ததே ஒரு அரசியல் அயோக்கியத்தனம் என்று இப்போதும் திட்டிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு பாரத ரத்னா பட்டமும் வழங்கப்பட்டது. ஆனாலும் அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு தோற்றுப்போனது.

  ReplyDelete