Saturday, January 28, 2012

தோட்டாக்களுக்கு உயிரே பரிசாய்





இந்தியாவில்  மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க
தோட்டாக்களுக்கு தனது உயிரையே பரிசளித்த மகாத்மாவின் 
நினைவு நாளை மத நல்லிணக்க பாதுகாப்பு தினமாக அனுசரிப்பது
என்று  எங்கள் வேலூர் கோட்டத்தில் முடிவெடுத்தோம். 
அத்தனை பேருக்கும் செல்ல வேண்டிய செய்தி அல்லவா, அதனால்
எங்கள் சுற்றறிக்கை  உங்கள் பார்வைக்கு

 
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/ என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 9/12                            27.01.2012
அனைத்து  உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழர்களே,

ஜனவரி முப்பது அன்று மத நல்லிணக்க பாதுகாப்பு தினம் அனுசரிப்போம்

ஜனவரி முப்பது – இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடுபட்டதற்காக துப்பாக்கிக் குண்டுகளை பரிசாகப் பெற்றவர். மத வெறியர்களால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அவரது மரணத்தையும் மதக் கலவரமாக மாற்ற வேண்டும் என்பதால் அவர் உயிரைப் பறிக்க துப்பாக்கியோடு புறப்பட்ட நாதுராம் கோட்சே வின் கையிலே இஸ்மாயில் என்று பச்சை குத்தி அனுப்பினார்கள் அடிப்படைவாதிகள்.

அவர்களின் தீய முயற்சிகள் இன்னும் ஓயவில்லை. ஆட்சியைப் பிடிக்க ரத்த யாத்திரை புறப்பட்டார்கள், கடப்பாறை பயணம் மேற்கொண்டு மசூதியை இடித்தார்கள். அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்னும் அணையவில்லை. வினை, எதிர் வினை என்று கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள் என தேசம் பல மோசமான நிகழ்வுகள் ஆங்காங்கே இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரின் பனிமலைகளில் ரோஜாக்கள் அழகுடன் மலர்ந்த காலம் மாறி ரத்தம் இன்று கசிந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலே ஆயிரக்கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த நர வேட்டை நரேந்திர மோடிக்கு இப்போது பிரதமர் கனவு. இதனை நனவாக்க எத்தனை லட்சம் உயிர்களை பறிப்பார்களோ என்று அச்சம் கொள்ளாமல் யாரும் இருக்க முடியாது.

பல்வேறு இனம், மொழி, மதம், மாநிலங்கள் அடங்கிய நாடாக இந்தியா திகழ்கின்ற போதும் அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பது மத்ச்சார்பின்மை, மத நல்லிணக்கம் என்ற மெல்லிய இழைதான். அதனை சிதைக்க மத அடிப்படைவாதிகள் முயல்கின்றனர். உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டிய உழைக்கும் மக்களையும் பிரிக்கப் பார்க்கிறார்கள்.

அதனை அனுமதிக்க மாட்டோம், இந்தியாவின் அடிப்படை கொள்கையான மத்ச் சார்பின்மையை பாதுகாப்போம் என்று உரக்கச்சொல்கிற இயக்கமாக, மக்கள் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தி அமரரான ஜனவரி முப்பது அன்று மத நல்லிணக்க பாதுகாப்பு தினம் அனுசரிப்பது என சிதம்பரத்தில் நடைபெற்ற கோட்டச்சங்கத்தின் இருபத்தி நான்காவது பொது மாநாடு முடிவு செய்தது.

ஜனவரி முப்பது அன்று கோரிக்கை அட்டை அணிந்து, அனைத்து கிளைகளிலும் மதச்சார்பின்மையை, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக வாயிற்கூட்டம் நடத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது உழைக்கும் மக்களின் கடமையும் கூட.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் . . எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment