மேலே உள்ள புகைப்படத்தைப் பார்த்தீர்களா?
ஆறு அழகாக உள்ளதா? கண்ணைக் கவரும் காட்சியாய் உள்ளதா?
சுமார் இருநூறு குடும்பங்களின் சோகத்திற்கு இந்த ஆறுதான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நினைப்பது போல இந்த ஆறில் அவ்வப்போது வெள்ளம் வரும், அதனால் மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்பதல்ல காரணம்.
இந்திய சமூகத்தின் மிகப் பெரிய அவமானமாக இன்றும் திகழ்கின்ற தீண்டாமைக் கொடுமைதான் இதற்குக் காரணம்.
இந்த புகைப்படம் எடுத்த இடம் புதுவை யூனியன் பிரதேசத்தில் வில்லியனூர் அருகில் உள்ள திருக்காஞ்சி என்ற ஊர். அங்கே ஓடுகின்றது சங்கராபரணி ஆறு. திருக்காஞ்சியில் உள்ள தலித் மக்களுக்கான சுடுகாடு ஆற்றின் மறு பக்கத்தில்தான் ஒதுக்கப் பட்டுள்ளது.
ஆற்றைக் கடந்துதான் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கமோ எரியூட்டலோ செய்திட வேண்டும். ஆற்றில் தண்ணீர் ஓடினால் சிக்கல். ஒன்று ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு மறு பக்கத்தை அடைய வேண்டும். அல்லது பஸ் டயர் ட்யூப்பில் தெப்பம் போல் கட்டி நீச்சல் தெரிந்தவர்கள் மூலம் எடுத்துச்செல்ல வேண்டும்.
வாழும் போது ஒடுக்குமுறையை அனுபவிப்பவர்களுக்கு இறந்த பின்பும் நிம்மதி கிடையாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? எவ்வளவு பெரிய சோகம்?
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலிமையான ஒரு போராட்டம் நடத்திய பின்பு ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்ட ஒப்புக் கொண்டு விட்டது. ஆனால் இன்னும் பணிகள் துவங்கவில்லை.
“தானே” புயலால் பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்கு, அம்மக்களுக்கு எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவியாக சில பொருட்கள் வழங்க நேற்று சென்றிருந்தோம்.
அப்போது அம்மக்கள் தங்கள் அவல நிலையை பகிர்ந்து கொண்டார்கள். ஆற்றிலே தண்ணீர் அதிகமாக ஓடும் போது இந்த சமயத்தில் யாரும் இறந்து விடக்கூடாதே என்பதுதான் எங்களின் பிரார்த்தனையாக இருக்கும் என்று சொன்ன போது இதயம் வலித்தது.
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ரங்கசாமி அரசு காண்பிக்கும் அக்கறையின்மையையும் ஆமை வேகப் பணிகளையும் பார்க்கும்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இன்னொரு போராட்டம் நடத்தினால்தான் பாலம் கட்டும் பணிகள் துவங்கும் போல தோன்றுகின்றது. அவர்களும் அதே சிந்தனையில்தான் உள்ளனர்.
பாலம் வந்து விடலாம். மறு பக்கத்திற்கு எளிதாய் போய் விடலாம்.
இறுகிப் போன இதயங்களுக்கிடையே என்று பாலம் அமைப்பது?
மனது வேதனைப் படுகிறது. கிராமங்களில் மக்கள் அனைத்துக்கும் சிரமப் படுகிறார்கள்.
ReplyDeleteஇந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.