Friday, January 27, 2012

ஊழல்களின் ஊர்வலம் - சாலையோரத்து குழாய்கள்


எங்கள் மாத இதழ் சங்கசுடருக்காக  எழுதியது


சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணம் செய்பவர்கள் கண்களில் ஒரு காட்சி தவிர்க்க முடியாமல் இருந்தது. மீன்சுருட்டி தொடங்கி பண்ருட்டி வரையுள்ள சாலையின் ஒரு பக்கத்தில் பிரம்மாண்டமான குழாய்கள் காட்சியளிக்கும். அரசியல் விளம்பரங்கள் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது என்று மட்டுமல்லாமல் பல ஏழை மக்களின் கௌரவமான வீடுகளாகக் கூட அந்த குழாய்கள் காட்சியளித்தன.

தி.மு.க வின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சென்னையின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வீராணம் ஏரியிலிருந்து பெரிய சிமெண்ட் குழாய்கள் வாயிலாக தண்ணீரை சென்னைக்கு எடுத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டது. சத்யநாராயணா என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

பிரம்மாண்டமான குழாய்களும் தயாரிக்கப்பட்டது. அவற்றை பூமியில் புதைக்கும் பணிகள் தொடங்கும் நேரத்தில்தான் அவற்றின் தரம் சரியல்ல என்பதும் அவற்றால் தண்ணீரின் அழுத்ததை தாங்க முடியாது என்பதும் கண்டறியப்பட்டது.

முதல்வர் கலைஞர் உள்ளிட்டவர்களுக்கு ஒப்பந்த தொகையில் பெரும் பகுதியை அளித்து விட்டதால்தான் தரமற்ற குழாய்கள் தயாரிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டது. வீராணம் திட்டம் கைவிடப்பட்டது. அவசரநிலைக் காலத்தில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது பிரதானமாக விசாரிக்கப்பட்டது இந்த ஊழல். சி.பி.ஐ வழக்கும் பதிவு செய்தது.

ஆனால் 1980 ல் ஜனதா ஆட்சி கலைந்து திமுக “ நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’” என்று காங்கிரஸ் கட்சியோடு லட்சிய உறவு வைத்தபோது சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது. சி.பி.ஐ பதிவு செய்த வழக்குகளும் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யும் முன்னரே திரும்பப் பெறப்பட்டது.

சிமெண்ட் குழாய்கள் அப்படியே இருந்தால் அவை மக்களுக்கு கருணாநிதி செய்த ஊழலை நினைவுபடுத்தும் என்பதால் அதனை அகற்ற வேண்டாம் என எம்.ஜி.ஆர் சொன்னதாகவும் தகவல் உண்டு. 1989 ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திடீரென ஒரு நாள் அத்தனை குழாய்களும் மாயமாய் மறைந்தது. அது என்னவானது என்பது அரசுக்கே வெளிச்சம். தன் ஆட்சியின் ஊழல் சின்னத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதை கலைஞரும் விரும்ப மாட்டாரல்லவா?   

கூடுதல் தகவல்கள் : 2001 ல் வீராணம் ஊழல் வழக்கை மீண்டும் நடத்தப் போவதாக ஜெயலலிதா கூற அது ஒரு பரபரப்புச் செய்தியாக ஊடகங்களுக்கு உணவாக அமைந்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் புதிய வீராணம் திட்டம் என்று தொடங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் நாவலில் கடல் போல காட்சியளித்த வீராணம் ஏரியில் இப்போது நீர் இல்லாததால் ஐம்பத்தி எட்டு ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் உறிஞ்சப் பட்டு சென்னைக்கு செல்கிறது.

No comments:

Post a Comment