முற்போக்கு நாடகாசிரியர், திரைப்பட இயக்குனர் மறைந்த தோழர் ஹபீப் தன்வர் அவர்களின் புகழ்பெற்ற ஒரு நாடகம் சரண்தாஸ் சோர். சத்திஸ்கரி மொழியில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகத்தை பிரபல இயக்குனர் ஹிந்தியில் திரைப்படமாக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிதா பட்டீல் நடித்துள்ளார். இந்த நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற போது கிடைத்தது.
ஒரு நாணயமான திருடன், தன் குருநாதருக்கு தான் பொய் பேச மாட்டேன் என்று அளித்த வாக்குறுதியை காப்பாற்ற இறுதியில் மரணத்தை தழுவும் கதை அது. எங்கள் மாநாட்டு வரவேற்புக்குழுவின் தலைவராக இருந்த தோழர் ஹபீப் தன்வர் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்காக அந்த மாநாட்டை தனது குழுவுடன் நடத்தினார். மொழி புரியாவிட்டாலும் கதையை முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடிந்தது. ஒரு நாடோடிக் கதையை தழுவி நாடகமாக்கப்பட்டது அது.
திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரிப் பேராசிரியர் திரு பார்த்திபராஜா அதை தமிழில் சரண்தாஸ் திருடன் என்ற பெயரில் உருவாக்க, நேற்று அதனை வேலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தியது. மூலத்தின் ஜீவனை சிதைக்காமல் தமிழ்ப் பாடல்களோடு நன்றாகவே படைத்திருந்தார்கள். ஹிந்தியில் அதனை பார்த்தவன் என்ற ஒரே காரணத்தாலேயே, நாடகம் துவங்கும் முன் அதனை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு நல்ல நாடகம் பார்த்த நிறைவு கிடைத்தது.
இப்போதுதான் தலைப்பிற்கே வரவுள்ளேன்.
தோழர் ஹபீப் தன்வர் மறைந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக சத்திஸ்கர் மாநில பாஜக அரசு இந்த நாடகத்தை தடை செய்தது. நாடக நூலும் அனைத்து நூலகங்களிலிருந்தும் அகற்றப்பட்டது. தடை செய்ய என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வசனங்களில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று கூட சிந்தித்தேன். நேற்று தமிழில் நாடகம் பார்த்த பிறகு அது காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட போய்விட்டது.
பிறகு என்னவாக இருக்க முடியும்?
பொய் பேசாமல் உண்மையே பேசுவது என்பதுதான் நாடகத்தின் அடிப்படைக் கருத்து.
அதுதான் தடைக்கான காரணமாக இருக்கலாம்!
ஏனென்றால் உண்மை பேசுவது என்பதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமே கிடையாதே!
தோழர் ராமன் அவர்களே!" சரண்தாஸ் சோர் " நாடகத்தை நானும் பார்த்திருக்கிறேன் .டெல்லியில் நடந்த விழாவிலா, கொச்சியில் நடந்த விழாவிலா என்பது நினவில்லை. அதன் திரைப்பட வடிவத்தையும் பார்த்துள்ளேன். ஹபீப் ஹன்வீர் அவர்களொடு பேசிபழகும் வாய்ப்பு 1981ம் ஆண்டு கிடைத்தது.சப்தர் ஹஷ்மி நினவு விழாவில் "மோடி ராம்" என்ற பிரேம்சந்த் நாடகத்தில் ஹபீப் அவர்களும் மாலா ஹஷ்மி அவர்களும் நடித்தார்கள்.அற்புதமான அனுபவம். "மோடி ராம் " நாடகத்தை பிரளயனின் சென்னைக்கலைக் குழு நெல்லை த .மு.எ.ச மாநாட்டில் அரங்கேற்றியது. முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன.---காஸ்யபன்.
ReplyDelete