Wednesday, August 17, 2022

உலகம் உறங்கும் போது இந்தியா




 *நாளொரு கேள்வி: 16.08.2022*


தொடர் எண்: *808*

இன்று நம்மோடு இந்தியாவின் முதல் பிரதமர் *ஜவகர்லால் நேரு*
#########################

*உலகம் உறங்கும் போது இந்தியா விழித்துக் கொள்கிறது*

கேள்வி: 

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தந்த செய்தி என்ன? 

*ஜவகர்லால் நேரு*

(உலகின் மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்றான A Tryst With Destinyஐ இங்கே தமிழில்) 

"பல ஆண்டுகளுக்கு முன் விதியுடன் ஒரு சந்திப்புக்கு நாம் காலம் குறித்திருந்தோம். இப்போது நமது உறுதிமொழியை நிறைவேற்றும் காலம் வந்திருக்கிறது... *நள்ளிரவுக்கான மணியடிக்கும் இந்த நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில் இந்தியா வாழ்வோடும் விடுதலையோடும் விழித்தெழுகிறது.*

வரலாற்றில் இப்படிப்பட்ட தருணங்கள் அரிதாகவே கிடைக்கும். நாம் பழமையிலிருந்து புதுமையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்; ஒரு யுகம் முடிந்திருக்கிறது; வெகுகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த தேசத்தின் ஆன்மா விடுதலை அடைந்திருக்கிறது. இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும், இன்னும் விரிவாகச் சொன்னால் மனித குலத்திற்கும் நம்மை அர்பணித்துக்கொள்ள உறுதிபூணுவது மிகச் சரியானதாக இருக்கும். 

*வரலாற்றின் விடியலில் இந்தியா தனது முடிவில்லாத தேடலைத் துவங்கியது.* இந்தியாவின் பல நூற்றாண்டுகள் அதன் முயற்சிகளாலும் வெற்றி - தோல்விகளின் மகோன்னதத்தாலும் நிரம்பியிருக்கின்றன.  நல்ல நேரங்களிலும் சரி, மோசமான தருணங்களிலும் சரி, இந்தியா தனது தேடல் மீதான பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை. தனக்கு பலம் தந்த கொள்கைகளை மறந்துவிடவில்லை. நாம் ஒரு மோசமான காலகட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறோம். இந்தியா தன்னை மீண்டும் கண்டுணர்ந்து கொள்ளும். 

நாம் இன்று கொண்டாடும் சாதனை என்பது, நமக்காகக் காத்திருக்கும் மிகப் பெரிய வெற்றிகளை நோக்கி வைக்கும் ஒரு அடி. அதற்கான ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நம்மிடம் அறிவும் துணிச்சலும் இருக்கிறதா? எதிர் காலம் முன்வைக்கும் சவால்களை நம்மால் ஏற்க முடியுமா?

சுதந்திரமும் அதிகாரமும் பொறுப்பை கொண்டுவருகிறது. அந்தப் பொறுப்பு, இந்திய மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் இறையாண்மை மிக்க அமைப்பான இந்த நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது. *சுதந்திரம் பிறப்பதற்கு முன்பாக நாம் எல்லா வலிகளையும் அனுபவித்தோம். இந்தத் துயரத்தின் நினைவு நம் இதயத்தைக் கனக்கச் செய்தது. அந்த வலிகளில் சில இன்னமும் தொடர்கின்றன.*

இருந்தபோதும், கடந்த காலம் என்பது முடிந்துவிட்டது. எதிர்காலம் இப்போது நம்முடன் கைகோர்க்கிறது. 
ஆனால், *எதிர்காலம் என்பது எளிதானதாகவோ, ஓய்வெடுக்கும் வகையிலோ இருக்காது.* மாறாக, தொடர்ச்சியாக முயற்சிகளைக் கோரக்கூடியதாக இருக்கும். அப்போதுதான் நம்மால் நாம் இதற்கு முன்பு எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளையும் இப்போது ஏற்கும் உறுதிமொழிகளையும் நிறைவேற்ற முடியும். 

இந்தியாவுக்கு சேவை செய்வதென்பது, துன்பத்தில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவை செய்வது. ஏழ்மை, நோய், வாய்ப்புகளில் சமத்துவமின்மை, அறிவின்மை ஆகியவற்றை ஒழிப்பது. 
*நம் தலைமுறையின் மகத்தான மனிதரின் லட்சியம் என்பது, ஒவ்வொரு கண்ணின் ஒவ்வொரு துளிக் கண்ணீரையும் துடைப்பது.* அது நம்மால் இயலாததாக இருக்கலாம். ஆனால், துன்பமும் கண்ணீரும் இருக்கும்வரை, நம்முடைய பணி ஓயாது.

ஆகவே, நாம் நம் கனவுகளுக்கு உருவம் கொடுக்க உழைக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்கானவைதான். ஆனால், உலகத்திற்குமான கனவுகளும்கூட. காரணம், எல்லா நாடுகளும் மக்களும் இப்போது மிக நெருக்கமான இணைந்திருக்கிறார்கள். தனித்தனியாக வாழ முடியும் என்பதை கற்பனைகூட செய்ய முடியாது. 

அமைதி என்பதை பிரித்துக்கொள்ள முடியாது. சுதந்திரமும் அப்படித்தான். வளமும் அப்படித்தான். இந்த உலகில் நிகழும் பேரழிவுகளும் அப்படித்தான். இந்த உலகில் யாரும் தனித்தனியாக வாழ முடியாது. 

இந்த மாபெரும் சாகசத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இணைந்து கொள்ளுங்கள் என்று இந்திய மக்களுக்கு அதன் பிரதிநிதிகளான நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சின்னத்தனமான, அழிவை ஏற்படுத்தக்கூடிய விமர்சனங்களுக்கு இது நேரமல்ல. கெட்ட எண்ணத்திற்கோ, மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கோ இது நேரமல்ல. *எல்லாக் குழந்தைகளும் நன்றாக வளரக்கூடிய சுதந்திர இந்தியா என்ற மகத்தான கட்டடத்தை நாம் கட்டியாக வேண்டும்.*
குறிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது. விதியால் குறிக்கப்பட்ட நாள். மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இந்தியா சுதந்திரமாக மீண்டும் எழுந்து நிற்கிறது. 

கடந்த காலம் என்பது நம்மோடு ஏதோ ஒரு வகையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நாம் அடிக்கடி செய்துகொண்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இருந்தபோதும், கடந்த காலம் என்பது ஒரு திருப்பு முனை. வரலாறு நமக்குப் புதிதாகத் துவங்குகிறது. நாம் அந்த வரலாற்றில் வாழ்வோம், செயல்படுவோம். மற்றவர்கள் அவற்றைப் பற்றி எழுதுவார்கள். 

இந்தியாவிலும் ஆசியாவிலும் உலகிலுமுள்ள நமக்கு, இது விதிவசத்தால் அமைந்த தருணம். *ஒரு புதிய நட்சத்திரம் உதயமாகிறது. கிழக்கில் சுதந்திரத்தின் நட்சத்திரம் உதயமாகிறது. புதிய நம்பிக்கை பிறக்கிறது. நீண்ட காலமாக கனவு கண்டுகொண்டிருந்த ஒரு லட்சியம் நனவாகிறது. இந்த நட்சத்திரம் ஒருபோதும் மறையாமலிருக்கட்டும்.* நம்பிக்கை ஒருபோதும் நிராசையாகாது இருக்கட்டும். 

நம்மை கருமேகங்கள் சூழ்ந்திருந்தாலும், நாம் இந்த சுதந்திரத்தில் திளைத்திருப்போம். நம்முடைய மக்களில் பலர் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். மிகச் சிக்கலான பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. இருந்தபோதும் *சுதந்திரம் என்பது பொறுப்பையும் சுமைகளையும் கொண்டுவருகிறது.* சுதந்திரமான, ஒழுக்கம்மிக்க மக்களாக நாம் அவற்றை எதிர்கொள்வோம். 

இந்த நாளில், இந்தச் சுதந்திரத்தை கட்டியமைத்த சிற்பி, நம் தேசத் தந்தை, இந்தியாவின் பழைய ஆன்மா உருக்கொண்டதைப் போன்று இருப்பவர், சுதந்திர ஜோதியை உயர்த்திப் பிடித்தவர், நம்மைச் சூழ்ந்திருந்த இருளை விலகச் செய்தவரை நாம் நினைத்திருப்போம். 
நாம் பல தருணங்களில் அவருடைய தொண்டர்களாக இருக்கத் தகுதியில்லாததைப் போல நடந்துகொண்டிருக்கிறோம். அவர் அளித்த போதனைகளில் இருந்து விலகியிருக்கிறோம். ஆனால், நாம் மட்டுமல்ல, பின்னால் வரும் தலைமுறைகளும் இந்த போதனைகளை நினைவில் கொள்ளும். *இந்தியாவின் மகத்தான மகனை தன் இதயத்தில் அது ஏந்தி நிற்கும். தன்னுடைய நம்பிக்கை, பலம், துணிச்சல், எளிமை ஆகியவற்றில் மகத்தான ஒரு மனிதர் அவர். எவ்வளவு பெரிய காற்றடித்தாலும், புயல் வீசினாலும் சுதந்திர ஜோதியை நாம் வீழ அனுமதிக்க மாட்டோம்.*

அடுத்ததாக நம்முடைய முகம் தெரியாத தன்னார்வலர்களை, சுதந்திரத்தின் காலாட்படை வீரர்களை நினைவில் கொள்ள வேண்டும். இந்தவித புகழையோ பரிசையோ எதிர்பாராமல், இந்தியாவுக்காக அவர்கள் சேவை செய்தார்கள். சாவையும் எதிர்கொண்டார்கள். 

அடுத்ததாக, அரசியல் எல்லைகளால் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்டு, இந்த சுதந்திரத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ள முடியாத நம்முடைய சகோதர, சகோதரிகளையும் நாம் நினைவில் கொள்வோம். அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். என்ன நடந்தாலும் நம்மைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய நல்லதையும் கெட்டதையும் நாமும் பகிர்ந்துகொள்வோம். 

எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் அந்த அழைப்பை ஏற்றுச் செல்வோமா, அப்படிச் சென்றால் நம் முயற்சிகள் என்னவாக இருக்கும். வளமான, ஜனநாயக உணர்வுள்ள, முற்போக்கான தேசத்தை உருவாக்க இந்தியாவின் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் கொண்டுசேர்க்க வேண்டும். ஏழ்மை, அறியாமை, நோய் ஆகியவற்றை போரிட்டு ஒழிக்க வேண்டும்.   எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீதி, வாழ்வின் முழுமை ஆகியவற்றை அளிக்கும் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். 

*கடினமான பணி நமக்காகக் காத்திருக்கிறது. நாம் நம் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றும் வரை நம்மில் யாருக்கும் ஓய்வு என்பதே கிடையாது.* இந்திய மக்கள் என்னவாக வேண்டுமென விதி நினைத்திருக்கிறதோ, அதை அடையச் செய்யும்வரை நமக்கு ஓய்வு கிடையாது. 

நாம் மிகத் துணிச்சலுடன் முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு மகத்தான தேசத்தின் குடிமக்கள். அந்த உயர்ந்த தரத்திற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.  நாம் எல்லோரும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சம உரிமையும் கடமையும் கொண்ட இந்தியாவின் குழந்தைகள்.  வகுப்புவாதத்தையோ, குறுகிய மனப்பாங்கையோ நாம் ஆதரிக்க முடியாது. *சிந்தனையிலோ, செயலிலோ குறுகியவர்களைக் கொண்ட எந்த தேசமும் மகத்தானதாக இருக்க முடியாது.*

உலக மக்களுக்கும் நாடுகளுக்கும் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமைதி, சுதந்திரம், ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களோடு ஒத்துழைப்போம் என உறுதியேற்கிறோம். 

இந்தியாவுக்கு, நம் நேசத்திற்குரிய தாய்நாட்டிற்கு, பழங்கால, நிரந்தரமான ஆனால் புதிதான  தேசத்திற்கு நாம் நம் மரியாதையைச் செலுத்துகிறோம். நாட்டின் சேவைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். 

ஜெய் ஹிந்த்."

(நன்றி: பி. பி.சி ஊடகவியலாளர் முரளிதரன் முக நூல்)

*செவ்வானம்*

No comments:

Post a Comment