Sunday, October 25, 2020

பேதமற்றதா (கொரோனா) பெருந்தொற்று?



 *பெருந்தொற்று- பேதம் அற்றதா...*



----------------------------------------------------

க.சுவாமிநாதன்
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

கொரானாவுக்கு சாதி - மதம் - வர்க்க பேதமில்லை என்று சிலர் சில உயிர் இழப்புகளை முன் வைத்து எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கலையுலக ஆளுமைகள் என பலரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதும், இரையாகி இருப்பதும் இக் கருத்தை வலுப்படுத்துகின்றன. சிலர் நல்ல எண்ணத்தோடு கூட இது போன்ற பதிவுகளை சமுக வலைத் தளத்தில் பகிர்கிறார்கள். சுற்றுக்கு விடுகிறார்கள். இவர்களில் நோக்கம் உள்ளவர்களும் உண்டு. அப்பாவித் தனமாக நம்புபவர்களும் உண்டு. சிலர் உள் நோக்கத்தோடு கொரொனா பரவலுக்கு மதச் சாயம் பூசினார்கள் என்பது தனிக்கதை. ஆனால் உலகம் முழுக்க உழைப்பாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களே கொரொனா நெருக்கடியின் சுமையை அதிகமாக சுமக்கிறார்கள் என்பதே உண்மை. 

*மரணத்தின் நிறம் என்ன?*

இது அமெரிக்காவில் எழுந்துள்ள கேள்வி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எது அளவு கோல்? எல்லோருக்கும் கல்வி கிடைக்கிறதா? சுகாதாரம் இருக்கிறதா? நல்ல குடிநீர் கிடைக்கிறதா? இவையெல்லாம் அளவு கோல்களாக உலக மய காலத்தில் கருதப்படுவதில்லை. மொத்த உள் நாட்டு உற்பத்தி (GDP) எவ்வளவு? எவ்வளவு வளர்ச்சி விகிதத்தை அது எட்டுகிறது என்பதே 30 ஆண்டுகளாக இந்தியாவிலும், 50 ஆண்டுகளாக மேலை நாடுகளிலும் அளவு கோல்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. 

உலக மக்கள் தொகையில் 4 % கொண்ட அமெரிக்கா உலக ஜி.டி.பியில் 13 % ஐ வைத்திருக்கிறது என்பதால் அதை உலகப் பெரும் வல்லரசாக சொல்கிறார்கள். ஆனால் கொரொனா அமெரிக்காவை புரட்டிப் போட்டுள்ளது. செப் 25,  2020 அன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்றுக்கு ஆளாகி இருப்பவர்கள் 3 கோடியே 24 லட்சம் பேர். மரணங்கள் 9, 88,000 பேர். இவர்களில் அமெரிக்க நோயாளிகள் 71 லட்சத்து 85 ஆயிரம் பேர். அமெரிக்க மரணங்கள் 2,07,000. உலக மக்கள் தொகையில் 4%... ஜி.டி.பியில் 13%... ஆனால் தொற்றுக்கு ஆளான உலக நோயாளிகளில் 22%. உலக மரணங்களிலும் 21%. இதுவே அமெரிக்காவின் நிலைமை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.  பொது சுகாதாரத்தை அந்த நாடு கை கழுவியது ஒரு முக்கிய காரணமாக அந்த நாட்டின் பிரபல பொருளாதார நிபுணர் நோம் சாம்ஸ்கி போன்றோரே சுட்டிக் காட்டியுள்ளனர். நவீன தாராள மயத்தின் கோட்பாடான "அரசு பொருளாதாரத்தில் இருந்து விலகி கொள்ளுதல்" என்பதன் அமலாக்கமே அது. 

அமெரிக்காவே பாதிக்கப்பட்டு விட்டது என்பது கொரொனாவின் "பாரபட்சமற்ற" தாக்குதலுக்கு உதாரணமாக சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கும் பொது சுகாதாரம் யாருக்கு அதிகம் மறுக்கப்பட்டதோ அவர்களே அதிகம் இலக்காகி உள்ளனர் என்பதே உண்மை. 

இதோ *சி.என்.பி.சி* செய்திக் கட்டுரை (27.05.2020) தரும் தகவல். 

*"அமெரிக்க மக்கள் தொகையில் 13 % உள்ள கறுப்பின மக்கள் கொரொனா உயிர் இழப்புகளில் 23 % ஆக உள்ளனர்... வருமான ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள், சுகாதார மறுப்பு ஆகியன ஆப்ரிக்க- அமெரிக்க மக்களை, குறைவான வருமானம் உள்ளவர்களை அதிக அளவில் கொரொனா தாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளன. இவர்கள் மத்தியில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா ஆகியன  உள்ளன."*

இதோ இன்னொரு ஆய்வு.( https://www.cidrap.umn.edu/news-perspective/2020/08/us-blacks-3-times-more-likely-whites-get-covid-19 ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் அறிக்கையின்படி வெள்ளையர்களை விட கறுப்பு அமெரிக்கர்கள் மூன்று மடங்கு தொற்றுக்கும், இரண்டு மடங்கு மரணங்களுக்கும் அதிகமாக ஆளாக வேண்டியிருக்கிறது. 

அமெரிக்காவின் மிட்சிகன் மாநிலத்தில் மக்கள் தொகையில் 14 % ஆக உள்ள கறுப்பின மக்கள் மரணங்களில் 39% ஆக உள்ளனர். வெள்ளையர் மரணங்களை விட 4 மடங்கு 5 மடங்கு என்ற அளவில் கறுப்பு மக்களின் மரணங்கள் பல பகுதியினர் மத்தியில் உள்ளது.

*ஏழ்மையும் கொரொனாவும்*

இது அமெரிக்காவின் நிலைமை மட்டுமல்ல. ஏழை மக்கள் கொரொனா தொற்றுக்கு அதிகம் இரையாவது உலகமெங்கும் நிகழ்கிறது. அமெரிக்காவின் பிரபல நாளிதழ் "தி கார்டியன்" மே 1, 2020 இதழ்

*" பிரிட்டன், வேல்ஸில் மிகவும் வறிய மக்கள் வாழும் பகுதிகளில் கோவிட் மரணங்கள் 1 லட்சத்திற்கு 55 ஆகவும், வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில் 25 ஆகவும் இருக்கின்றன... ஏழைகள் பகுதியான நியூஹாம் பகுதி ஒரு லட்சத்திற்கு 144 என்ற உச்ச பட்ச மரண விகிதத்தை கொண்டுள்ளது. லிவர் பூல் பகுதியில் 81 ஆக மரண விகிதம் உள்ளது. அப் பகுதியின் உள்ளாட்சி அமைப்பே 2010 ல் இருந்து பெருமளவு பட்ஜெட் வெட்டுக்கு ஆளான பகுதி ஆகும்.*

என்று கூறுகிறது. இங்கிலாந்தில் தொற்றுக்கு இரையானவர்களில் இனச் சிறுபான்மையினர் அதிகம் என்பது இன்னொரு கோணம். 

ஆசியாவின் குடிசைகள் எவ்வாறு கொரொனாவை எதிர் கொள்ள இயலாமல் திணறுகின்றன என்பதை *லண்டன் சர்வதேச சுற்று சூழல் மற்றும் வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின்* செர்சிலியா டகொலி என்பவர் பதிவு செய்துள்ளார். தனி மனித விலகல் எப்படி அவர்கள் வாழ்கிற பகுதிகளில், வீடுகளில் சாத்தியம் என்ற கேள்வியை அந்த ஆய்வறிக்கை எழுப்புகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் வீடற்றவர்களாக, வாழ்வதற்கு குறைந்த பட்ச தேவைகள் அற்ற இல்லங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். "கை கழுவுங்கள்" என்பதே இலவச அறிவுரையாக அரசாங்கங்களால் வழங்கப்படும் நிலையில் உலக மக்கள் தொகையில் 40 % பேருக்கு தண்ணீர் வசதிகள் வீடுகளில் இல்லை என்கிறது ஐ.நாவின் குழந்தைகள் நிதியமான *"யூனிசெஃப்"* (UNICEF). 

*"இன்னொரு கொல்லியாக " பசி*

வளர்ந்த நாடுகளின் ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் அந்த நாட்டின் விளிம்பு நிலை மக்களை அதிகமாக பாதிப்பதை போல உலக அரங்கில் நாடுகளுக்கு இடையேயான பாரபட்சங்களும் மனித குலத்தை அலைக்கழித்து வருகின்றன. 

ஜி 8 வல்லரசு நாடுகளையே கொரொனா அதிகம் தாக்கியுள்ளது. ஆனால் பின் தங்கிய நாடுகளை இன்னொரு கொல்லி அச்சுறுத்தி வருகிறது. வாஷிங்டன் போஸ்ட் இதழ் மே 14, 2020 தரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

*சர்வதேச அமைப்புகள் கடந்த சில வாரங்களில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உரிய தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், வறுமையும், பசியும் 4 கோடி பேர் உயிர்களை குடிக்கும் அபாயம் உள்ளது.... உலகின் முறை சாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் 200 கோடி பேரில் 160 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.எல்.ஓ அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களே. "*

முப்பது ஆண்டுகள் முன்னேற்றத்தை இந்த கொரொனா பறித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பலர் அன்று வேலை பார்த்தால்தான் அன்று பசி ஆற்ற முடிந்தவர்கள். 

ஆப்ரிக்க நாடுகளில் 65 % மக்கள் மிக நெருக்கமான இடங்களில் வாழ்பவர்கள். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இல்லங்களில் ஊரடங்கால் முடங்கியுள்ளவர்களில் 85% பேர் சாப்பாட்டை தவிர்க்கிறார்கள் அல்லது குறைவாக சாப்பிடுகிறார்கள் என்கிறது. 

இப்படி சோகக் கதைகள் உலகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. தொற்று பரவுவதால் பொது சுகாதாரம் பற்றிய மறு பரிசீலனை தேவை என்ற சிந்தனையும், பாரபட்சங்கள் பற்றிய விவாதங்களும், நவீன தாராளமயத்தின் கோட்பாடுகள் பற்றிய கேள்விகளும் உலகம் முழுக்க எழுந்துள்ளன.

அதிகார வர்க்கத்தின் இயலாமை, தோல்விகள் ஒடுக்கப்படும் மக்களை நோக்கியே வன்முறையாக வெளிப்படுகின்றன. 

*இன்னொரு முகம்*

குடும்ப வன்முறைகள் உலகம் முழுக்க வெடித்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பே தெரிவித்துள்ளது. இன்னும் 6 மாதங்கள் ஊரடங்கு தொடர்ந்தால் 3 கோடி குடும்ப வன்முறைகள் நிகழும்  ஐ.நா பாலின மற்றும் மறு உற்பத்தி அமைப்பு கூறியுள்ளது. இது ஒடுக்குமுறையின் இன்னொரு முகம்.

செப் 28, 1920 ல் வெளியிடப்பட்ட ஐ.நா பெண்கள் (UN Women) மற்றும் ஐ.நா வளர்ச்சி திட்ட (UNDP) அறிக்கையான "உலக பாலின பார்வை கண்காணிப்பு" கூறுவது என்ன? கோவிட் 19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பொருளாதார சமூக விளைவுகளிலிருந்து காப்பாற்ற பெரும்பாலான நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே. 42 நாடுகளில் பாலின அணுகுமுறையே இல்லை. 

உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள். இருந்தாலும் அவர்கள் ஆண்களுக்கு இணையாக நடத்தப்படவில்லை. 28 சதவீதம் பாலின சம்பள இடைவெளி சுகாதாரத் துறையில் உள்ளது. இது மொத்த பாலின சம்பள இடைவெளியான 16 சதவீதத்தை மட்டுமே அதிகம். 

பேரிடர் கால வறுமை பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. 25 முதல் 34 வயதுக்குள்ளானவர்களில் வறுமைக்கு ஆளாகிறவர்கள் 100 ஆண்கள் எனில் அதே வயதில் உள்ள பெண்கள் 118 பேர். உலக தொழிலாளர் ஸ்தாபனம் (ஐ.எல்.ஓ) மதிப்பீட்டின்படி பெண் வேலையின்மை 19 சதவீதம் அதிகம். உலகம் முழுவதும் வீட்டுப் பணியாளர்களில் 80 சதவீதம் பெண்கள். அவர்களில் 72 சதவீதம் வேலையிழந்துள்ளனர். 

*இரு கொல்லிகளும்- இந்தியாவும்*

இந்தியாவிலும் கொரொனா- பசி ஆகிய இரு கொல்லிகளும் ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தி வருகின்றன. 

இந்தியாவில் "சமுக விலகல்" என்ற வார்த்தையே தீண்டாமையை நினைவூட்டுவதாகும்.  உலக சுகாதார அமைப்பு கொரொனாவுக்கு எதிரான வழிமுறையாக அதை அறிவித்த போது இங்கே அவ் வார்த்தை எத்தகைய உணர்வுகளை ஒவ்வொர் சமுக குழுக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கும் என்பது தனி ஆய்வு. 
"தனி மனித விலகல்" என்ற சொல்லாடலையே முற்போக்கு அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

பணக்கார இந்தியா "சமுக விலகலை" கடைப்பிடிக்கும் போது ஓர் பொறுப்புள்ள குடிமகனாக தன்னை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்து கொள்கிறது. மொத்தமாக அரிசி, பலசரக்கு, காய்கறிகளை வாங்கி குவித்துக் கொள்கிறது. புத்திசாலித் தனமாக அதை செய்து விடுவதை நினைத்து குதூகலம் அடைகிறது. "இல்லத்தில் இருந்தே பணி" என்பதில் செலவுகள் குறைவதை எண்ணி பூரிப்பும் கொள்கிறது. வீட்டிற்குள் கூட விலகி விலகி நடந்து ஒழுங்கை காட்ட இரண்டு, மூன்று அறை வீடுகள் விரிந்து கொடுக்கின்றன. இது கூட மிகுந்த உயர் வருமான பகுதியினர் அனுபவிப்பதே.

மத்திய தர ஊழியர்கள், இது போன்ற பாதுகாப்பை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. பஞ்சப்படி உயர்வு ரத்து,  ஊழியர் பயன்கள் வாபஸ், தனியார் நிறுவனங்களில் ஆட் குறைப்பு ஆகியன அச்சுறுத்துகின்றன. 

"பரிதவிக்கிற இந்தியா" என்ன செய்யும்? அன்றாடம் வேலை பார்த்தால்தான் சாப்பாடு என்று இருப்பவர்கள். அன்றாடம் காய்கறி, பலசரக்கு வாங்கியே காலம் ஓட்டியவர்கள். ஒரு ஹால், ஓரத்தில் அடுப்பு, திரை மறைத்த தனி அறை... இதில் ஐந்தாறு பேர் படுத்து உறங்கி பழகியவர்கள். எப்படி தனி மனித விலகல் விதிகளை கடைப்பிடிக்க முடியும்? ஒழுக்கமற்றவர்கள், நோய் பரப்புபவர்கள் என அவச் சொற்கள் வேறு வீசப்பட்டது அவர்கள் மீது. 

தாராவியில் பரவியவுடன் எதிர்பார்த்ததுதானே... என்று தங்களின் அறிவை மெச்சிக் கொண்டவர்கள் உண்டு. வட சென்னைக் காரர்கள் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என துக்ளக் "ரமேஷ்" தொலைக் காட்சி பேட்டிகளில் அறிவுரை வழங்கினார். காசிமேடு மீன் சந்தை பற்றிய ஒவ்வாமை அவர் பேச்சில் வெளிப்பட்டது. 

விமானங்களில் வந்த நோய்க்காக அதை அண்ணாந்து பார்த்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத எங்களுக்கு ஏன் இவ்வளவு தண்டனை? என்று விவசாயத் தொழிலாளர்களும், அமைப்பு சாரா உழைப்பாளிகளும் கேட்கிறார்கள். 

*விரட்டுகிறது சாதியும் நோயும்*

புலம் பெயர் உழைப்பாளிகள் 13 கோடி பேர் மாநிலம் விட்டு மாநிலம், சொந்த மண்ணை மறந்து, உறவுகளைத் துறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் வேலை இழந்து விட்டனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்த காட்சி "வல்லரசு கனவு" கொண்டிருந்த கண்கள் மீது வெந்நீர் ஊற்றியது போல இருந்தது. உலகமயம் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள ஏற்றத் தாழ்வான வளர்ச்சியின் விளைவை நாடு அதிர்ச்சியோடு தரிசித்தது. இவர்களில் பெரும் பகுதி சாதி அடுக்குகளில் நசுக்கப்படுபவர்களே. 

மத்திய பிரதேசத்திற்கு திரும்பிய 7,30,000 பேர் பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் (09.06.2020) செய்தி பாருங்கள். இவர்களில் 60 % பேர் பட்டியல் சாதியினர், பழங்குடியினர். 38 சதவீதம் பேர் இதர பிற்பட்ட சாதியினர். இப்படி புலம் பெயர் தொழிலாளர் மத்தியில் விரிவான சர்வே மற்ற மாநிலங்களில் நடந்தேறவில்லை. அம் மாநிலத்தில் 36 % தான் பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் தொகை. ஆனால் வாழ வழியற்று வேறு மாநிலம் தேடிப் போனவர்களில் பட்டியல் சாதி, பழங்குடியினர் 60% பேர். சாதி விரட்டியது அவர்களை. நோய் திருப்பி அனுப்பியுள்ளது மீண்டும். 

இவர்கள் எல்லாம் வெளி மாநிலங்களில் கட்டுமான சித்தாள், விவசாயக் கூலி, மர வேலை, காவல்காரர், கடைப் பையன், ஒட்டல்களில் க்ளீனர் ஆக வேலை பார்த்தவர்கள். அதுவும் பறி போயுள்ளது. 

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் புகலிடம் தேடுகிற மாநிலங்களும், வர்ணாசிரம வேலைப்பிரிவினையை தயாராக வைத்திருக்கின்றன. பட்டியல் சாதியினர்க்கு என்று உடல் உழைப்பு வேலைகள் காத்திருக்கின்றன. இவர்கள் தஞ்சம் புகுந்த முகாம்களில் கூட சாதிய பாரபட்சங்களை எதிர் கொண்டனர்.

இதோ அரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வின் முடிவு. கோவிட் நெருக்கடியின் போது உயர் சாதியினர்க்கு ஏற்பட்ட  வேலையிழப்புகளை விட பிற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் இரண்டு மடங்கு அதிகம். பட்டியல் சாதி தொழிலாளர்கள் மத்தியில் மூன்று மடங்கு அதிகம். 

கிராமங்களுக்கு திரும்பிய தலித் புலம் பெயர் தொழிலாளர்க்கு அரசின் கிராமப் புற வேலைத் திட்டங்களின் பலன் கிடைக்கவில்லை; கிராமத் தலைவர்கள் தங்கள் சொந்த சாதியையே கவனிக்கிறார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆகஸ்ட் 21, 2020) செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது. 

எல்லா சாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்கள் நெருக்கடியின் வலியை அனுபவிக்கிறார்கள்.  ஆனால் அடித்தள மக்களில் பெரும்பான்மையோர், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம். அவர்கள் இரட்டைத் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். 

*20 லட்சம் கோடி யாருக்கு*

20 லட்சம் கோடி நிவாரணம் என்று மோடி அறிவித்தார். எல்லோருக்கும் ஆச்சரியம். ஏற்கனெவே பிப்ரவரி மாத பட்ஜெட்டில் 30 லட்சம் கோடி செல்வு என கூறப்பட்டுள்ளதே. இது கூடுதல் 20 லட்சம் கோடிகளா? என்றால் பதில் இல்லை. சரி. செலவுக்கு கணக்கு சொல்கிற நீங்கள் எங்கிருந்து வரவு வைப்பீர்கள் என்றால் அதற்கும் பதில் இல்லை. 

சாமானிய மக்கள் எல்லாம் சொந்த கிராமங்களுக்கு போய் இருக்கிறார்களே, அவர்களுக்கு கிராமப்புற வேலை உறுதி சட்டத்தில் வேலை தருவோம் என்கிறீர்களே,  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தானே 100 நாள் வேலை, எப்படி இவர்களுக்கு கிடைக்கும் என்று கேட்டால் பதில் இல்லை. 

நகராட்சி பகுதிகளுக்கு திரும்பி இருக்கிற புலம் பெயர் தொழிலாளர்கள் அருகிலுள்ள கிராமங்களில் வேலை உறுதி சட்டத்தின் பயனாளிகளாக இருக்க இயலாதே, அவர்களுக்கு என்ன ஏற்பாடு என்றால் பதில் இல்லை. 

சொந்த ஊர் தொழிலாளர்கள் ஆட்டோ ஒட்ட முடியவில்லை, பிளம்பிங் வேலை செய்ய முடியவில்லை, எலெக்ட்ரீசியன் வேலை பார்க்க முடியவில்லை... இப்படி வாழ்க்கைக்கு வழியில்லாமல் நிற்கிறார்களே அவர்களுக்கு வாழ என்ன வழி என்று கேட்டால் பதில் இல்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு இப்போது இவர்கள் எல்லாம் வேலை செய்யத் துவங்கியிருந்தாலும் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உழைப்பாளி மக்களுக்கு  மாதம் ரூ 7500 ரொக்க உதவி ஏன் அளிக்க கூடாது என்றால் பதில் இல்லை.

இப்படி சாமானிய மக்களுக்கு மூச்சு திணறல் வருகிறது.  

காரணம் என்ன? இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசு நவீன தாராள மயப் பாதையை விட்டு விலக தயாரில்லை. 

*வழி உண்டு மனம் இல்லை*

சென்ற ஆண்டு மட்டும் நிறுவன வரிகளில் தரப்பட்ட சலுகைகள் இரண்டரை லட்சம் கோடிகள். இதில் ரிலையன்ஸ் குழுமம் மட்டும் அடைந்த பயன் ரூ 13000 கோடி. டாட்டா 
ஸ்டீல்  மட்டும் பெற்ற பலன் ரூ 2500 கோடி. அம்பானி துணைவியார் நீடா அம்பானி நாங்கள் பசித்தவர்க்கு சாப்பாடு போடுவோம் என்கிறார். ரத்தன் டாட்டா ரூ 1500 கோடி நன்கொடை அறிவிக்கிறார். இதுவெல்லாம் யாருடைய பணம்? நாய் எலும்பை நாய்க்கே போடுவது போல இந்திய தொழிலதிபர்களின் நிவாரண அறிவிப்புகள் உள்ளன. அரசு தந்த வரிச் சலுகைகளில் இருந்து சிறு துண்டை எடுத்து வீசுகிறார்கள்.

இந்தியாவின் 63 பில்லியனர்களின் சொத்துக்கள் இந்திய பட்ஜெட் வருமானமான 24 லட்சம் கோடிகளுக்கு இணையானது. ஏன் அவர்கள் மீது செல்வ வரி போடக் கூடாது? 

ரூ 7500 ஐ மாதா மாதம் ஊரடங்கு காலத்தில் தருவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. அதற்கு அரசியல் உறுதி வேண்டும். நவீன தாராள மயம் விட்டு வில்காமல் இது சாத்தியம் அல்ல. 

இழவு வீட்டில் பொணத்தின் நெத்திக் காசை திருடுவது போல கொரொனா நெருக்கடி காலத்தை பயன்படுத்தி அரசின் பொருளாதார முடிவுகள் திணிக்கப்படுகின்றன.

அரசு நிறுவனங்களின் தனியார் மயம், "ஆத்ம நிர்பர்" அதாவது சுய சார்பு பாரதம் என்ற பெயரில் அறிவிக்கப்படுகிறது. உலக நாடுகள் - அயர் லாந்து, ஸ்பெயின் -  தனியார் மருத்துவ மனைகளை அரசு எடுத்துக் கொள்ளும் என்று அறிவிக்கும் நிலையில் இங்கே தனியார் மயம் அறிவிக்கப்படுவது விசித்திரம்தான். ஏர் இந்தியா இல்லாவிட்டால் வெளி நாட்டில் சிக்கிய இந்தியர்கள் திரும்பி இருக்க முடியாது. ஏர் இந்தியா 18 ட்ரிப்புகள் அடித்தது. அரசு வங்கிகள் மக்களுக்கு நிவாரணத்தை கொண்டு போய் சேர்த்தன. ஆனாலும் தனியார் மயம் என்று பேசுகிற அரசை என்ன சொல்வது? தனியார் மயத்தின் முதல் இரை சமுக நீதியே. இட ஒதுக்கீடு பறிக்கப்படுவது நடந்தேறும். 

வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய நேரத்தில் 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேர வேலை நாளாக மாற்ற பல மாநிலங்களில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன். ஒரே அடியில் ஒரு ஷிப்ட் வேலைகள் காலியாகி விடுமே. 

*சாதீய வன்முறைகளாய்*

பொருளாதார தளத்தில் ஏற்படும் நெருக்கடிகள் சமுக ஒடுக்குமுறைகளாகவும் வெளிப்படுகின்றன. தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட வன் கொடுமைகள், தீண்டாமை குற்றங்கள் நடந்தேறியுள்ளன. சாதி ஆணவக் கொலைகள், கொலைகள், வன்முறைகள், சொத்து அப்கரிப்புகள், கந்து வட்டி தாக்குதல்கள், பொதுப் பயன்பாட்டிற்கான உரிமைகள் மறுப்பு... இப்படி நிறைய அநீதிகள் அரங்கேறியுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் மீது கொடும் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ரவீந்தரசிங் வார்த்தைகளில் " இன்றைய அரசின், அதன் உயர் மட்டங்களில் அமர்ந்திருப்பவர்களின் சிந்தனைகள் தலித் எதிர்ப்பு கண்ணோட்டம் உடையவை. இத்தகைய மனோபாவம் உடையவர்களே மாவட்ட ஆட்சியர்களாக, காவல்துறை கண்காணிப்பாளராக, காவல் நிலைய அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள் அவர்களைப் பொருத்தவரையில் தலித்துகள் மீதான வன்முறைகள் சாதாரணமானவை" இராமர் கோவில் எழுப்பப்படும் ஃபைசாபாத் மாவட்டமும் இத்தாக்குதல்களுக்கு விதி விலக்கு அல்ல. 

இப்படி நாடு முழுமையுமே சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. 

பாலின வன்முறைகள், குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன. 

கொரொனா காலம் பெரிய சவாலை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. குழந்தை திருமணங்கள் ஊரடங்கைப் பயன்படுத்தி நடந்தேறியுள்ளன. 

"நியூ நார்மல்" என்று பேசுகிறார்கள். ஆனால் வரலாற்று சக்கரத்தை பின் நோக்கி சுழற்ற முனைகிறார்கள். உலகம் முழுக்க "நியூ நார்மல்" என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே நெருக்கடியின் சுமையை ஏற்றப் பார்க்கிறார்கள்.

"தயவு செய்யுங்கள்... மூச்சு திணறுகிறது" என்று கெஞ்சிய, முனகிய, கடைசியில் மௌனித்துப் போன கறுப்பர் ஜார்ஜ் பிலாய்டு கழுத்து மீது 5 நிமிடம் அசையாமல் அழுத்திய முழங்கால் ஓர் குறியீடே. 

அமெரிக்காவில் வெள்ளையர்களும் வீதிகளுக்கு வந்து கறுப்பர் உரிமைகளுக்காக கரம் கோர்த்தது நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது. 

வர்க்கங்களின் திரட்டல்கள் தேவைப்படுகின்றன. ஜனநாயகம், சமுக நீதி, பாலின நீதிக்கான குரல்கள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.

இத்தகைய எதிர் வினைகள்  அவசரமானது... அவசியமானது...

இதுவே கொரொனா உலகம் முழுவதற்கும் தந்துள்ள பாடம். 

*க.சுவாமிநாதன்*

No comments:

Post a Comment