Saturday, November 2, 2019

அபாரமான சாதனையும் அவதூறுப் பிரச்சாரமும்


தோழர் அமானுல்லா கான்,
தலைவர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்


நடப்பு நிதியாண்டான 2019- 20 ன் முதல் அரையாண்டில் எல்.ஐ.சி யின் செயல்பாடு என்பது நிஜமாகவே குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி ரூபாய் 89,980.22 கோடி ரூபாயை முதலாண்டு பிரிமியமாக பெற்று கடந்தாண்டு இதே காலகட்டத்து வணிகத்தை விட 42 % வளர்ச்சியை ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் எல்.ஐ.சி ஆறு சதவிகித புள்ளிகளை கைப்பற்றி ஆயுள் இன்சூரன்ஸ் வணிகச் சந்தையில் பிரிமிய வருமானத்தில் 72 % யும் பாலிசிகள் எண்ணிக்கையில் 73 % யும் பெற்றுள்ளது. சிங்கிள் பிரிமியத்தில்  77.29 % மும் குழுக்காப்பீட்டில் 82.22 % ம் பெற்று இப்பிரிவுகளில் எல்.ஐ.சி தனது ஆதிக்கத்தைன் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சற்று பின்னே இருக்கிற நான்- சிங்கிள் பிரிவில் தன் பன்கை அதிகரிக்க எல்.ஐ.சி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வணிகத்தின் இப்பகுதி குறித்து முன்னுரிமை அளிப்பதில் தீவிரமாக உள்ளது. இதன் மூலம் நாம் எதிர்பார்க்கிற முடிவுகள் வரும்.

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமைகளின் பின்னணியில்தான் எல்.ஐ.சி யின் செயல்பாட்டை பார்க்க வேண்டும். பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது. வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது. இச்சிக்கல் காரணமாக பல லட்சம் வேலைகள் பறி போயுள்ளன. கடந்த 45 ஆண்டுகளில் காணாத அளவிற்கு வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது. 30 % இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இச்சிக்கலின் காரணமாக வருமானம் மிகவும் சுருங்கி சேமிப்பிற்கான பகுதியை பாதித்துள்ளது. சந்தையில் போதுமான கிராக்கி இல்லாததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட  மோசமான பொருளாதார சூழலில் எல்.ஐ.சி யின் செயல்பாடு என்பது மகத்தானது. ஆனால் பொருளாதார மந்த நிலை என்பது இன்சூரன்ஸ்துறையையும் எட்டிப் பிடிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த சவாலான சூழலை சந்திக்கக் கூடிய விதத்தில் எல்.ஐ.சி தனது உத்திகளை வகுக்க வேண்டும்.

இக்காலகட்டத்தில் எல்.ஐ.சி ஒரு மோசமான விஷமத்தனமான, நச்சுப் பிரச்சாரத்திற்கு உள்ளானது. எல்.ஐ.சிக்கு எதிரான பொய்களும் கட்டுக்கதைகளும் சமூக ஊடகங்களில்  பரப்பப்பட்டது. எல்.ஐ.சி யில் பாலிசி பணம் பத்திரமாக இல்லை என்றும் மூழ்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற நச்சுப்பிரச்சாரத்தில் வாட்ஸப் பல்கலைக்கழகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. இதர பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்.ஐ.சி மிகப் பெரிய நஷ்டங்களை அடைந்துள்ளது என்று ஒரு இருண்ட சித்திரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படுகிற, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஊடகங்கள் முன்வைத்தன. பாலிசிதாரர்களின் நிதியை முதலீடு செய்வதில் எல்.ஐ.சி கவனமாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பங்குச்சந்தை  இழப்புக்கள் என  விதம் விதமான புள்ளிவிபரங்கள் பரப்பப்பட்டன. இந்த விஷமிகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

பாலிசிதாரர்களின் பணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிற மக்கள் நலத் திட்டங்களில் முதலீடுகள் அமைந்திட வேண்டுமென்றும் இந்திய நாடாளுமன்றம் எல்.ஐ.சிக் க்கு கட்டளையிடுள்ளது. கடந்த 63 வருடங்களாக எல்.ஐ.சி பாலிசிதாரர்களின் நிதிக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்லதொரு முதலீட்டு வருவாயையும் அளித்து அதே நேரம் தேசத்தினை கட்டமைக்கும் பணியிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. எல்.ஐ.சி பாலிசிதாரர்களின் நம்பிக்கையையும் ஒட்டு மொத்த தேச மக்களுடைய அபிமானத்தையும் பெற்றுள்ளது. அதனால்தான் மக்கள் விஷமத்தனான நச்சுப் பிரச்சாரத்தை புறந்தள்ளி விட்டனர். எல்.ஐ.சியில்தான் தங்களின் சேமிப்பும் எதிர்காலமும் பத்திரமாக இருக்கும் என்றும் நம்பினர்.

இக்காலகட்டத்தில் எல்.ஐ.சி பதிவு செய்துள்ள 42 % வளர்ச்சி என்பது காப்பீடு செய்யும் மக்கள் எல்.ஐ.சி மீது வைத்துள்ள நம்பிக்கையை மட்டும் உரக்கச் சொல்லவில்லை, அனைத்து எதிர்ப்பாளர்களுக்குமான தக்க பதிலடியும் கூட. மக்களின் உயிர்களுக்கு காப்பீடு அளிக்கும் தன் வெற்றிப்பயணத்தை தொடரும் எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனத்தின் மீது எத்தனை சேற்றை வாரி இறைத்தாலும் அது அதன் நிழலைக் கூட நெருங்காது என்பது மிகத் தெளிவாகி விட்டது.  இத்தேசத்து ஆண்களின், பெண்களின் வாழ்விலும் வாழ்க்கைத்தரத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எல்.ஐ,சி தொடரும். 

இந்தியப் பொருளாதாரத்தின் தனித்த, மிகப் பெரும் முதலீட்டாளர் எல்.ஐ.சி தான் என்பது பெருமிதமளிக்கிற ஒன்றாகும். பாலிசிதாரர் நலனை மேம்படுத்துவதற்காக கவனமாக முதலீடு செய்கிற அதே வேளையில் கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத்தேவைகளுக்கான நிதி அரசுக்கு கிடைப்பதையும் உறுதி செய்கிறது. எல்.ஐ.சி யின் முதலீட்டில் 82 % மத்திய, மாநில அரசுகளின் பத்திரங்களிலும்  இதர அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களிலும்தான் உள்ளது. எல்.ஐ.சி யின் ஒட்டு மொத்த முதலீட்டில் 18 % தான் பங்குச்சந்தையில் உள்ளது. முதலீட்டிற்காக எல்.ஐ.சி க்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கக் கூடிய உபரி என்பது மூன்றரை லட்சம் கோடி ரூபாயிலிருந்து நான்கரை லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இதிலே அறுபது ஆயிரம் கோடியிலிருந்து அறுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. 31.03.2018 அன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்த தொகை என்பது 4,59,225 கோடி ரூபாய். இது எல்.ஐ.சி யின் ஒட்டு மொத்த முதலீட்டில் 18.25 % ஆகும். பங்குச்சந்தையில் எல்.ஐ.சி தான் மிகப் பெரிய முதலீட்டாளர். நூற்றுக் கணக்கான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி யின் முதலீடு உள்ளது.

இதிலே சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் விமர்சனம் என்பது எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் பற்றி மட்டுமே அமைந்துள்ளது. 2018-19 ம் ஆண்டில் எல்.ஐ.சி தன் முதலீடுகளில் இருந்து ஈட்டிய வருமானம் 1,97,894 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில் பங்குச்சந்தையிலிருந்து ஈட்டிய வருமானம் ரூபாய் 23,621 கோடி ரூபாய். எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ரூபாய் 50,000 கோடி ரூபாய் போனஸாக அளித்துள்ளது. இதுவே எவ்வளவு வலிமையாகவும் செழிப்பாகவும் எல்.ஐ.சி உள்ளது என்பதை காண்பிக்கிறது.

எல்.ஐ.சி பங்குச்சந்தையில் நஷ்டமடைகிறது என்ற பிரச்சாரம் உள்நோக்கமுடையது. எல்.ஐ.சியின் முதலீடுகள் நீண்ட கால அடிப்படை கொண்டது என்பது தேசிய ஊடகங்களுக்கும் கார்ப்பரேட் துறைக்கும் நன்றாகவே தெரியும்.  பாலிசிதாரர்களுடனான எல்.ஐ.சி யின் ஒப்பந்தம் என்பது நீண்ட கால தன்மையுடையது. எனவே அதற்கேற்றார் போல எல்.ஐ.சி தன் முதலீடுகளை தன்னுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அடிப்படையில்  நீண்ட கால முதலீடுகளில் கவனமாக மேற்கொள்கிறது. சந்தை சரிகிற போது பங்குகளை வாங்கி விலை உயர்கிற போது விற்று பாலிசிதாரர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பது போல செயல்படுகிற சாதுர்யமான முதலீட்டாளர் எல்.ஐ.சி. இப்படிப்பட்ட சூழலில் நஷ்டம் போல தோற்றமளிப்பதெல்லாம் அர்த்தமற்றது. தலை சிறந்த நிதி நிறுவனமாக எல்.ஐ.சி உருவெடுத்துள்ள நிலையில் இப்பிரச்சாரமெல்லாம் அரசை எல்.ஐ.சி யை தனியார்மயமாக்கும் முடிவை நோக்கி தள்ளுகிற சதியின் ஒரு பகுதியே. இவர்கள் பாலிசிதாரர்களுக்குச் செய்த மோசடிகளின் விளைவாகத்தான் எல்.ஐ,சியே உருவானது என்பதை இந்த உத்தமர்கள் மறந்து விட்டார்கள். இன்று எல்.ஐ.சி யின் மதிப்பு மகத்தானதாக உள்ள நிலையில் அதனை அனுபவிக்கவே தனியார்மயமாக்க அழுத்தமளிக்கின்றனர். இச்சதி அரங்கேற நாம் அனுமதிக்கக் கூடாது.

அரசு நிதியாதாரத்திற்காக இன்று கடுமையாக தவிக்கிறது. பூர்வீக சொத்துக்களை விற்கும் திவாலான குடும்பத்தின் நிலையில் அது உள்ளது. பங்கு விற்பனைக்கான இலக்கை 50 % க்கு மேல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசுக்கு ஏராளமான லாபத்தை அள்ளித்தரும் பாரத்  பெட்ரோலியம் நிறுவனத்தை விற்கத் தலைப்படுவதன் மூலம் எரிபொருள் துறையின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் பிரச்சாரகர்கள் எல்.ஐ.சி யின் நிதியை சூறையாட அதனை தனியார்மயமாக்குமாறு அரசை வற்புறுத்துகிறார்கள். இதனை அனுமதிக்க முடியாது.

எல்.ஐ.சி ஊழியர்களைப் பொறுத்தவரை அது வெறும் நிதி நிறுவனமோ அல்லது தங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனமோ மட்டும் அல்ல, அதற்கும் மேலானது. எல்.ஐ.சி யை பாதுகாப்பது என்பது அவர்களுக்கு  கொள்கை ரீதியிலானது. உணர்கவுளோடு ஒன்றியது தேசத்தின் பொருளாதார நலனுக்காக எல்.ஐ.சி ஊழியர்கள் தங்களின் முழுமையான சக்தி கொண்டு தங்களின் நேசத்துக்குரிய நிறுவனத்தை காத்திடுவார்கள், பாலிசிதாரர்களின் நலன்களையும் பாதுகாப்பார்கள். நம் எதிரிகள் இதனை கவனத்தில் கொள்ளட்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------
    “ இன்சூரன்ஸ்  வொர்க்கர்”  நவம்பர் 2019 இதழ் தலையங்கம்

தமிழாக்கம் மற்றும் வெளியீடு


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்


No comments:

Post a Comment