Tuesday, September 19, 2017

டி.ஆரு இங்கே பாரு



பீப் சாங்கிற்கு எதிராக போராடிய மாதர் சங்கம் இந்த பிரச்சினையில் என்ன செய்தது? அந்த பிரச்சினையில் என்ன செய்தது? என்று கேட்பதே காழ்ப்புணர்வில் ஊறிப் போன சிலருக்கு பொழுது போக்காக மாறி விட்டது. அவர்கள் சொன்ன பிரச்சினையில் மாதர் சங்கம் தலையிட்டு இருக்கும், போராடி இருக்கும். அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அவர்களுக்கு அக்கறை இருக்காது. ஆனால் மாதர் சங்கத்தை திட்டி ஒரு ஸ்டேட்டஸ் போடுவதும் அதன் மூலம் சில லைக்ஸ் பெறுவதும் அவர்களைப் போலவே பொழுது போகாத சிலரின் வக்கிர கமெண்ட்ஸை பெறுவதும்தான் அவர்களின் நோக்கம்.

பீப் பாடல் எனும் உயர்தர இசை வேள்வியை நடத்திய சிம்புவை மகனாகப் பெற்ற டி.ஆரும் அவ்வப்போது இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்.

அவருக்கு இந்த பதிவு அர்ப்பணம்

டி.ஆரு, மாதர் சங்கம் இங்கே இருக்கு பாரு.

மதுரை மாவட்டம் பொதும்புவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஆராக்கியசாமி என்பவன் பல காலமாக பல சிறுமிகள் மீது பாலியல் சீண்டலும் பாலியல் வன் கொடுமையும் செய்து வந்திருக்கிறான்.

இப்பிரச்சினை பற்றி தகவல் தெரிந்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டது. போராடியது. மாவட்ட நிர்வாகம் ஆரோக்கியசாமியை பாதுகாக்க முயன்றது. மாதர் சங்கம் வழக்கு தொடுத்தது. தோழர் பிருந்தா காரத் புதுடெல்லியிலிருந்து பொதும்பு வந்தார். மாநில டி.ஜி.பி யை நேரில் சந்தித்தார். அதன் பின்பே நிர்வாகம் அசைந்தது. ஆரோக்கியசாமியை இடை நீக்கம் செய்தது. உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ஆரோக்கியசாமியை கைது செய்யவும் மாணவிகளுக்கு இடைக்கால இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டது.

அவ்வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆரோக்கியசாமிக்கு ஐம்பத்தி ஐந்து வருடம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. அதாவது அந்த மனிதன் இறக்கும்வரை கம்பி எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மேலும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது. 

இந்த வழக்கை தொடுத்தது அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம். வாதாடியது மாதர் சங்கப் பொறுப்பாளரான தோழர் உ.நிர்மலாராணி. 

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க களத்தில் உறுதியாக இருந்தது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை டி.ஆர் புரிந்து கொள்ளட்டும்.

நியாயத்தை நிலைநாட்டிய மாதர் சங்கத்தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அச்சப்படாமல் சாட்சி சொன்ன மாணவிகளுக்கும் பாராட்டுக்கள்.

இப்பிரச்சினை பற்றி அறிந்ததும் எங்கள் மதுரைக் கோட்டச்சங்கம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் வழக்குச் செலவுகளுக்காக அளித்தது. வழக்கு நடத்த தேவையான பிரமாண வாக்குமூலங்களை தயார் செய்யவும் மதுரைக் கோட்டத் தோழர்கள் உதவினார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

 

1 comment:

  1. தோழர், உங்க அக்கபோரையெல்லாம் மோடி மாதிரி சின்னப்பசங்க கிட்ட வெச்சுக்குங்க! எங்க தலைவர் தமிழன்.. எம்ஏ ஹிஸ்டரி,எம்ஹெச்டி, கூடவே ஹி கே டாக் இன் இங்கிலீஸ் தெரியுமில்லை? தெரியலைனா யூடிப் வீடியோக்களை பார்த்து தெரிஞ்சுக்கங்க.

    இப்படிக்கு டிஆர் கொலைவெறி படை.

    ReplyDelete