Sunday, September 24, 2017

"நடுங்கிக் குரைக்கிறது" ?????????????

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியாகியுள்ள முக்கியமான கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும் முதலாளித்துவ ஊடகங்களும் வட கொரியா பற்றி செய்து வரும் பல பொய்ப்பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறது.

நன்றி தோழர் எஸ்.பி.ராஜேந்திரன்



‘நடுங்கிக் குரைக்கிறது ஓர் ஞமலி’ எஸ்.பி.ராஜேந்திரன்



செப்டம்பர் 21 அன்று தீக்கதிர் ஆசிரியர் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. திருநெல்வேலியிலிருந்து வாசகர் டி.ஆறுமுகம் அவர்கள் எழுதியிருந்தார்.“இன்றைய தீக்கதிர் நாளிதழில் வடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் கொக்கரிப்பு-சிபிஎம் கடும் எதிர்ப்பு என்ற முன்பக்க செய்தி தொடர்பாக பின்வரும் விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது: ‘வடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் கொக்கரிப்பு’ என கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் சிபிஎம், சில நாட்களுக்கு முன்பு ‘அமெரிக்காவைத் தாக்குவோம்’ என வடகொரிய அதிபர் கொக்கரித்தாரே, அந்தச் செய்தியை ஏன் கண்டுகொள்ளவில்லை?”.

வடகொரியாவைப் பற்றி பலருக்கும் எழுகிற இயல்பான சந்தேகமும் கேள்வியும்தான் மேற்கண்ட கடிதத்தில் பிரதிபலித்திருக்கிறது. நாம் அன்றாடம் கவனிக்கிற ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கும் செய்திகளிலிருந்தே வடகொரியாவை புரிந்துகொள்ள முயல்கிறோம். ஆனால் ஊடகங்கள் சொல்ல மறுக்கிற - இன்றைய அமெரிக்க - வடகொரிய அரசியல் மோதல் என்கிற நாணயத்தின் மற்றொரு பக்கம் இருக்கிறது.உண்மையில் “அமெரிக்காவைத் தாக்குவோம்” என்று இதுவரையிலும் வடகொரியா சொன்னது இல்லை. ஆனால் அமெரிக்காவை தாக்குவதற்காகத்தான் வடகொரியா ஏவுகணை சோதனைகளையும் அணுசோதனைகளையும் நடத்தி வருகிறது என சர்வதேச ஊடகங்கள் இடைவிடாமல் ஊதித் தள்ளுகின்றன. அதையே நம்மூர் ஊடகங்களும் ஊதுகின்றன. யாரும் எதிர்பாராத வகையில், கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பேசுகையில், “வடகொரியாவை முற்றாக அழிப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். 

ஐநா வரலாற்றில் - பொதுச் சபைக் கூட்டத்திலேயே இறையாண்மை மிக்க ஒரு நாட்டைப் பார்த்து அழித்தொழிப்போம் என்று இதுவரையிலும் எந்தவொரு ஜனாதிபதியும் கூறத் துணியவில்லை. ஆனால் நாடுகளின் இறையாண்மையை பாதுகாக்க உறுதியேற்க வேண்டிய ஐநா சபையின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு வடகொரியாவை அழிப்போம் என கொக்கரித்ததன் மூலம் ஒட்டுமொத்த உலகையே அவமதித்தார் டொனால்டு டிரம்ப். இதற்கு பின்னர்தான், வடகொரிய ஆளுங்கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு கூடி, எங்களை அழிக்க முயன்றால் அடுத்த கணமே, அமெரிக்கா தனது இறுதி முடிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்.அமெரிக்க ஜனாதிபதி சொல்வதை மிரட்டல் என்கிறோம்; அதற்குப் பிறகு வடகொரியா சொல்வதை எச்சரிக்கை என்கிறோம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டிற்குப் பின்னால் கிட்டத்தட்ட 70ஆண்டுகால வரலாறு இருக்கிறது. 

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் - லெனின் - ஸ்டாலின் - மாவோ - கிம் இல் சுங் ஆகியோரின் சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் வழிகாட்டியாகக் கொண்டு இயங்குகிற வடகொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையில் வடகொரிய அரசு அமைந்துள்ளது. கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு எனும் சோசலிச வடகொரியா சுயசார்புடன் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை நோக்கி பயணப்பட முயற்சித்து வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், சோவியத் வீழ்ச்சியின் தாக்கங்கள்- இவை ஒருபுறம் இருந்தாலும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை அரைநூற்றாண்டுக்கும் மேலாக சுமந்துகொண்டே தற்சார்பு பொருளாதாரமாக வளர்கிறது வடகொரியா என்பதுதான் அடிப்படையான உண்மை. 

ஆளும் கட்சியின் உட்கட்சி அணுகுமுறைகள் தொடர்பாகவும் இளம் ஜனாதிபதியான கிம் ஜோங் உன்னின் அணுகுமுறைகள் தொடர்பாகவும் மேற்கத்திய ஊடகங்கள் என்ன பரப்புகின்றனவோ அதுமட்டுமே உள்ளூர் ஊடகங்களில் ஊதப்பட்டு வருகின்றன. ஆனால் மறுபுறத்தில் அமெரிக்காவின் பகிரங்கமான ராணுவ மிரட்டல்கள் குறித்தோ - ஜப்பானையும் தென்கொரியாவையும் வடகொரியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு நிரந்தரமாக ஒரு பகைமையை நீடிக்கச் செய்து வருவது குறித்தோ - வடகொரியாவை நோக்கி அமெரிக்காவின் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் எந்தநேரமும் தாக்குவதற்கு தயாராக காத்திருப்பது குறித்தோ - ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் எந்த நேரமும் வடகொரியா மீது கொடூர குண்டுவீச்சுகளை நடத்தி கொத்திக் குதற துடித்துக் கொண்டிருப்பது குறித்தோ நமது ஊடகங்கள் வாய்திறப்பது இல்லை.

இந்தப் பின்னணியில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கணக்கில் கொண்டு உலகிற்கு பல்வேறு உண்மைகளை உரைக்கும் நோக்கத்துடன் கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் செய்தித்தொடர்பு செயலகத்திலிருந்து, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான பிராவ்தா நாளேட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள பத்திரிகை செய்தி, பிராவ்தா இணைய ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தச் செய்தியை சர்வதேச ஊடகங்கள் எதுவும் வெளியிடாததன் பின்னணியிலேயே பிராவ்தா ஏட்டிற்கு கொரிய செய்தித் தொடர்பு செயலகம் அனுப்பியிருக்கிறது. அதில் ஏராளமான விவரங்களை வடகொரிய அரசு தெரிவித்திருக்கிறது. குறிப்பாக சமீப காலம் வரை - தனது அணுசோதனை முயற்சி உள்பட அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிடவும், கைவிடவும் தயாராக இருப்பதாக வடகொரியா கூறியிருக்கிறது; அதற்கு கைமாறாக, வடகொரியாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. 

ஆனால் அந்த கோரிக்கையை வழக்கம்போல அமெரிக்கா நிராகரித்துவிட்டது.வடகொரியாவுடன் ஏன் அமெரிக்கா அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். அதன் பின்னணி 1950களில் இருந்து துவங்குகிறது.1945இல் இரண்டாம் உலகப்போர், ஹிட்லரை சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால் அதை அப்படியே முடிந்துவிடாமல் தொடரும் நோக்கத்துடன் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது கொடூரமான அணு ஆயுத தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் மீள்வதற்கு முன்பே கொரிய தீபகற்பத்தில் 1950ல் மிகப்பெரும் யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான கொரிய மக்களை கொன்று குவித்தது. கொரியாவை இரண்டாகப் பிளந்தது. இதைத்தொடர்ந்துதான் கொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையில் கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு மலர்ந்தது. 

அந்தப் போரின் முடிவில் 1953 ஜூலை 27 அன்று அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு இந்த ஒப்பந்தத்தை - கொரிய தீபகற்பத்தில் நிரந்தரமாக அமைதியை உருவாக்கும் நோக்கத்துடன் - நிரந்தர அமைதி உடன்பாடாக மாற்றி கையெழுத்திட வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியது. அதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா நிராகரித்தது. அதன் நோக்கம் என்னவென்றால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் அதன் புவி அரசியல் மையமாக இருக்கும் கொரிய தீபகற்பத்தை முற்றாக தனது பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான். அமெரிக்காவின் நோக்கத்திற்கு வடகொரியா இரையாகவில்லை. அதுதான் வடகொரியா மீதான அமெரிக்காவின் தீராத ஆத்திரத்திற்கு காரணம்.கொரிய தீபகற்பத்தில் இத்தகைய பிரச்சனை நிலவிய போதிலும், இன்றைக்கு ஊடகங்கள் பரபரப்பாக பேசுகிற அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டில் - அந்த உடன்பாடு உருவான தருணத்திலேயே வடகொரியா உறுப்பினராக கையெழுத்திட்டது. 

ஆனால் 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பிறகு - சோசலிச முகாமில் இருந்த நாடுகள் மீது அமெரிக்கா மிகக்கடுமையான நிர்ப்பந்தங்களையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தது. குறிப்பாக வடகொரியாவை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிட துடித்தது. அப்போதும் கூட மேற்கண்ட அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் வடகொரியா உறுப்பினராக நீடித்தது. ஆனால், 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. “தீமையின் அச்சு” என்று பெயரிட்டு அவர் சில நாடுகளைப் பட்டியலிட்டார். அந்தப் பட்டியலில் வடகொரியாவையும் சேர்த்தார். உலகின் தீய சக்திகளாக ஈரான், இராக், வடகொரியா ஆகிய நாடுகளை வரையறை செய்தார். இந்தப் பட்டியலை வெளியிட்ட அந்த ஆண்டே இராக் மீது, மிகக்கொடூரமான யுத்தத்தை ஜார்ஜ் புஷ் நடத்தினார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அடுத்த குறி வடகொரியாதான் என்பது பளிச்சென்று தெரிந்தது. அப்போதுதான் வடகொரியா முதல்முறையாக தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன வழி என்று சிந்திக்கத் துவங்கியது. முதல்கட்டமாக அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. 

அந்த உடன்பாட்டில் ‘தனது சொந்த இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினால் வெளியேறலாம் எனும் ஷரத்து 10 விதியின் படியே பகிரங்கமாக அறிவித்துவிட்டு வெளியேறியது. அமெரிக்காவிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வடகொரியா தனது சொந்த அணுசக்தி திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்தது.வடகொரியா இந்த முடிவை எடுத்தவுடனே ஒட்டுமொத்த ஊடகங்களும் ஓலமிட்டன. அமெரிக்கா தனது மிரட்டலை இன்னும் தீவிரப்படுத்தியது. அந்தச் சூழ்நிலைமையிலும் கூட 2005ல் வடகொரியா மீண்டும் உலக மன்றத்தில் முறையிட்டது. ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என அமைதி உடன்பாட்டில் அமெரிக்கா கையெழுத்திடுமானால் உடனடியாக தனது அணுசக்தி திட்டத்தை கைவிடத் தயாராக இருப்பதாக வடகொரியா உறுதியளித்தது. 

ஆனால் புஷ் நிராகரித்தார்.இதனிடையே ரஷ்யா மற்றும் சீனாவின் முயற்சிகளின் விளைவாக அமெரிக்கா- ரஷ்யா- சீனா- வடகொரியா - தென்கொரியா - ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கும் தொடர் பேச்சுவார்த்தை நடந்தது. பத்தாண்டு காலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் அமெரிக்கா தனது பகைமை நடவடிக்கைகளையும் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் கூடிய ராணுவப் பயிற்சிகளையும் கைவிட வேண்டும் என்றும், அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தியது. ஆனால் அதை அமெரிக்கா முற்றாக நிராகரித்தது. 2015க்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு முறை ஒபாமா ஆட்சியில், அமைதி உடன்பாட்டிற்காக வடகொரியா வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஒபாமாவும் நிராகரித்தார்.

அமைதி உடன்பாடு தொடர்பான கோரிக்கைகளை மட்டுமல்ல, வடகொரியா- தென்கொரியா இணைப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முற்றாக நிராகரிக்கும் விதத்தில் தென்கொரியாவையும் அமெரிக்கா தூண்டிவிட்டது. 1972, 1990, 1993 ஆகிய ஆண்டுகளில் இந்த முயற்சிகள் தீவிரமாக நடந்தன. வடகொரிய தரப்பிலிருந்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் ஒரு கட்டத்தில் 2000ம் ஆண்டிலும், 2007லும் வடகொரிய-தென்கொரிய இணைப்பு முயற்சிகள் நிறைவேறும் என்ற சூழல் கூட ஏற்பட்டது. அந்த சமயத்தில் தென்கொரிய ஜனாதிபதிகளாக இருந்த கிம் டே ஜங் மற்றும் ரோ மூ ஹியூன் ஆகியோர் முற்போக்கான தலைவர்களாக இருந்தனர். அவர்கள் அமெரிக்க தலையீட்டையும் மீறி இணைப்பு முயற்சியில் உறுதியாக இருந்தனர். ஆனால் 2008ல் தென்கொரியாவில் அமைந்த ஆட்சி முற்றிலும் அமெரிக்க கைப்பாவை ஆட்சியாக மாறியது. 

எனவே வடகொரிய - தென்கொரிய இணைப்பு முயற்சிகளும் நடக்கவில்லை.இருநாடுகளும் வெவ்வேறு சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறுகிற நாடுகள் என்ற போதிலும் அவரவர் சித்தாந்தத்தை அமலாக்கிக் கொண்டே இருதரப்பு பொருளாதாரத்தை பலப்படுத்தும் விதத்தில் ஒரு கூட்டாட்சியாக செயல்பட முடியும் என்று மிகவும் ஜனநாயகப்பூர்வமான தீர்வினை சோசலிச வடகொரியா முன்வைத்தது. ஆனால் அத்தனையையும் சீர்குலைத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இதன் ஒட்டுமொத்த நோக்கம் என்னவென்றால், வடகொரியா என்ற நாட்டை முற்றாக அழிப்பது என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீராத கம்யூனிச வெறுப்பும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிற அதிகார வேட்கையுமே ஆகும்.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளும் சூழ்ச்சிகளும் தீவிரமடைகின்றன. தென்கொரியாவிலும் ஜப்பானிலும் அமெரிக்க ஏவுகணை திட்டங்கள் முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளன. தாட் என்ற பெயரிலான இந்த ஏவுகணை திட்டம் முற்றிலும் வடகொரியாவையும், அதைத் தொடர்ந்து சீனா மற்றும் ரஷ்யாவையும் குறிவைத்து நிறுவப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் முற்றிலும் தற்காப்புக்காக வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியது. 

அணுசக்தி சோதனைகளை தீவிரப்படுத்தியது.மேற்கத்திய ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து, வடகொரியாவால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் வடகொரியாவால் இந்த உலகிற்கே ஆபத்து என்றும் திட்டமிட்டு பொய்யைப் பரப்புகின்றன. வடகொரியா தன்னைத் தற்காத்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்பூவுலகில் தன்னையும் தனது மக்களையும் காத்துக் கொள்ள, தனது தாக்கு திறனை அதிகரித்துக் கொள்வதைத்தவிர வேறு எந்த வாய்ப்பையும் வடகொரியாவுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் விட்டுவைக்கவில்லை.

இப்போது வடகொரியாவின் பலம் அதிகரித்துவிட்டதா என்ற கேள்வியும் எழக்கூடும். ஐநாவின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு அமெரிக்க ஜனாதிபதி, வடகொரியாவை அழித்துவிடுவோம் என்று ஓலமிடுவதிலிருந்தே தெரிகிறது, வடகொரியா தனது பலத்தை அதிகரித்திருக்கிறது என்பது.இதை வடகொரியாவின் சமீபத்திய இரண்டு முக்கிய ஏவுகணை சோதனைகள் நிரூபித்துள்ளன.2017 ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் ‘குவாசாங்’ 12 என்ற வெகுரக ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. இந்த சோதனைதான் டிரம்ப் நிர்வாகத்தின் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் காரணம். கொரிய தீபகற்பத்தின் எரிமோ முனையிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பான் மீது பறந்து சென்று 2000கிலோமீட்டருக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வடகொரியா நிர்ணயித்த இலக்கில் மிகச்சரியாக விழுந்தது. பிற நாடுகளும் இதுபோன்ற சோதனைகளை நடத்தியுள்ளன. 

ஆனால் வடகொரியா நடத்திய சோதனை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளிக்கக் காரணம் இருக்கிறது. ஏனென்றால், “எங்களுக்கு தெரியாமல் வடகொரியா எந்த சோதனையும் இனி நடத்திவிட முடியாது; இனி ஏதேனும் ஏவுகணை சோதனை நடத்துவது தெரிந்தாலே - அது எங்களது பகுதியை நோக்கி நடத்தப்படவில்லை என்று தெரிந்தாலும் கூட - வானிலேயே இடைமறித்து தாக்கி வடகொரியாவின் ஏவுகணைகளை அழிப்போம்” என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியிருந்தார். அவர் அப்படி கூறிய அடுத்த வாரத்திலேயே வடகொரியா தனது சோதனையை நடத்தியது. சோதனை வெற்றி என்று அறிவித்த பிறகுதான் அமெரிக்காவிற்கே தெரிய வந்தது. அமெரிக்காவின் ரேடார்களால் வடகொரிய ஏவுகணையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜப்பானில் அமெரிக்காவின் ஏவுகணை கட்டமைப்புகள் வலுவாக நிறுவப்பட்டிருந்த போதிலும் கூட, ஜப்பானின் வானத்திலேயே பறந்து சென்றது வடகொரியாவின் ஏவுகணை. 

இது எப்படி என்று இப்போது வரையிலும் குழம்பி போய் நிற்கிறது அமெரிக்கா.இதுகுறித்து இரண்டு முக்கியமான உலகப்புகழ்பெற்ற அணு ஆயுத வல்லுநர்கள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். ‘டிபென்ஸ் ஒன்’ என்ற அமைப்பின் வல்லுநர் ஜோ கிரின்சியோன், “வடகொரியாவின் ஏவுகணை வானத்தில் 770 கிலோமீட்டர் உயரத்தில் பாய்ந்து சென்றிருக்கிறது. இந்த உயரத்தில் செல்லும் எதையும் ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட் பிஏகே 3’ ரேடார் கட்டமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாது; உண்மையிலேயே இவ்வளவு உயர்த்தில் வடகொரியா தனது ஏவுகணையை செலுத்தியிருக்கிறது என்றால் அது வியப்புக்குரியதுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.டோக்கியோவைச் சேர்ந்த பிரபல ஆயுத குழுமமான ‘நெக்சியல்’ ஆய்வு மையத்தின் நிபுணர் லான்ஸ் காட்லிங், இதே கருத்தை எதிரொலிக்கிறார்.

“ஜப்பானின் வானத்தில் மிக அதிக உயரத்தில் - அதி வேகத்தில் பாய்ந்து சென்றிருக்கிறது வடகொரிய ஏவுகணை. இங்கு அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகளோ அல்லது வருகிற ஏவுகணையை இடைமறித்து தாக்குகிற ஜப்பானின் ‘எஸ்எம்-3’ ரக இடைமறிப்பு ஏவுகணைகளோ அல்லது அமெரிக்காவின் சக்திவாய்ந்த ‘ஏஜீஸ்’ வகை இடைமறிப்பு ஏவுகணைகளோ கூட இவ்வளவு உயரத்திற்கு சென்று தாக்கும் திறன் கொண்டவை அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஜப்பானின் வானில் பாய்ந்து சென்றது பொருத்தமானது அல்ல என்றாலும், சர்வதேச விதிகளின் படி வானம் யாருக்கும் சொந்தமல்ல.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வடகொரியா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் நோக்கத்துடன் தென்கொரிய ராணுவ தளங்களிலும் ஜப்பானிய ராணுவ தளங்களிலும் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள மிக அதிநவீன ஆயுதங்களே மேற்கண்ட ஏஜீஸ் வகை ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள்தான். 

ஆனால் அவற்றால் வடகொரிய ஏவுகணைகளை தடுக்க முடியாது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆத்திரத்திற்கு கொண்டுசென்றிருக்கிறது. இதுதான் வடகொரியாவை அழிப்போம் என்று டொனால்டு டிரம்ப்பை கொக்கரிக்கச் செய்திருக்கிறது. ஆனால் கொரிய தொழிலாளர் கட்சி செப்டம்பர் 22ஆம் தேதி கூடி டிரம்ப்க்கு பதிலடி கொடுத்திருக்கிறது. கொரிய தொழிலாளர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் வடகொரிய அரசின் துணைத் தலைவருமான கிம் கி நாம் தலைமையில் கூடிய மத்தியக்குழு வெளியிட்டுள்ள மிக நீண்ட அறிக்கையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் டிரம்ப்பின் கொக்கரிப்பு பற்றி ஒரு வரி வருகிறது:“நடுங்கிக் குரைக்கிறது ஓர் ஞமலி.”

No comments:

Post a Comment