Monday, December 28, 2015

வரலாறு என்றால் புகழ்வோம். நிகழ்காலமென்றால் ?????





அண்டார்டிகா பாறையும் சாதனை மனிதரின் ஆதங்கமும்

நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் வலைப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு கர்னல் பா.கணேசன் அவர்களை நன்றாக தெரியும்.


தென் துருவத்தில் இந்தியா அமைத்த தஷின் கங்கோத்ரி ஆய்வு மையத்தின் தலைவராக செயல்பட்ட திரு கர்னல் பா.கணேசன் அவர்கள் தென் துருவத்தில் பணியில் உறைந்து கொண்டிருந்த ஒரு பாறை கொண்டு தனது சொந்த ஊரான சன்னா நல்லூரில் ஒரு பூங்கா அமைத்துள்ளார் என்ற செய்தி அறிந்ததுமே, இந்த ஆண்டு வெண்மணிப் பயணத்தின் போது அங்கே சென்று வருவது என திட்டமிட்டிருந்தேன்.

மதிய உணவு முடிந்து திருவாரூரிலிருந்து புறப்பட்ட பின்புதான் கர்னல் அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எப்படி செல்ல வேண்டும் என்று வழி சொன்னது மட்டுமல்லாமல் அந்த பூங்காவை பராமரிப்பவரை உடனடியாக அங்கே வரச் சொல்கிறேன் என்றும் சொன்னார். அது போலவே நாங்கள் அங்கே சென்ற ஓரிரு நிமிடங்களில் அவரும் வந்து விட்டார்.

தூண்களில் அமைக்கப்பட்டிருந்த அந்த தென் துருவப் பாறை மெய் சிலிர்க்க வைத்தது. அதை விட மெய் சிலிர்க்க வைத்தது கர்னல் அவர்களின் சாகசப் பயணம். தன்னுடைய சொந்த ஊரில் சிறப்பான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கிய அவரது பிறந்த மண்ணின் மீதான நேசம் பாராட்டுதலுக்குரியது.

தென் துருவப் பயணம் குறித்த சிறு வரலாறே அங்கே சொல்லப்பட்டு இருந்தது. எங்கள் தோழர்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாகவும் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

நாங்கள் அங்கே இருந்த போது கர்னல் அவர்களிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அகத் தூண்டுதல் பூங்காவின் பாதுகாவலர் கர்னல் எழுதிய நூலின் பிரதிகளை எங்களுக்கு அளித்தார்.

“நீங்கள் இப்போது நிற்கிற இடத்தில் ஒரு காலத்தில் நான் நாற்று நட்டிருக்கிறேன், களை பறித்திருக்கிறேன், பதினான்கு வயது வரை காலில் செருப்பு கூட அணிந்ததில்லை. கடின உழைப்பின் மூலமே இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறேன்” என்று உணர்வு பூர்வமாக பேசினார்.

“இந்த இடத்தில் பல வகுப்புக்களை நடத்தி பலரையும் முன்னேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை” என்ற தனது ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புறப்படும் போது பிரகாஷ் என்ற அந்த பாதுகாவலருக்கு நாங்கள் டீ சாப்பிட்டு விட்டு போகவில்லையே என்பதில் ஒரே வருத்தம்.

ஒரு அரிய அனுபவத்தின் சான்றாக உள்ள இடத்திலிருந்து புறப்படும் வேளையில் உ.வஜ்ரவேலு என்ற தோழர், அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர்

“இதுவே வட நாட்டு ஆளுங்க யாராவது செஞ்சிருஞ்சா, தலையில தூக்கி வைச்சு ஆடியிருப்பாங்க, இந்த இடமே பிரம்மாண்டமா மாறியிருக்கும். தமிழ்நாட்டு ஆளு என்பதால் இப்படி ஒரு அலட்சியம்”  

என்று சொன்னார்.

அது சரிதான் என்பதுதான் என் கருத்தும்.

இமயத்திலிருந்து கண்ணகிக்கு கோயில் கட்ட கல் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவனின் புகழ் பாடுவோம்.

அதுவே நிகழ்காலம் என்கிற போது கண்டு கொள்ள மாட்டோம்.

இதுதான் இன்றைய மரபு.

அங்கே நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கீழே





 

5 comments:

  1. karnal thiru pa.ganesan avargalukku en manamaarndha paarattukkal nandri, surendra, guntur.

    ReplyDelete
  2. பேருந்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் இதனை பார்த்திருக்கிறேன், ஆனால் இது தென் துருவத்திலிருந்து எடுத்துவந்த கல் என்பது இப்போதுதான் தெரியும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையாக உள்ளது தோழா நன்றி

    ReplyDelete
  4. இதுவே வட நாட்டு ஆளுங்க யாராவது செஞ்சிருஞ்சா, தலையில தூக்கி வைச்சு ஆடியிருப்பாங்க, இந்த இடமே பிரம்மாண்டமா மாறியிருக்கும். தமிழ்நாட்டு ஆளு என்பதால் இப்படி ஒரு அலட்சியம்”

    உண்மைதான் நண்பரே
    சத்தியமான வார்த்தை
    தங்களின் படங்களைக் கண்டு மனம் மகிழ்கின்றது
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத்தான் முதல் நன்றி. அகத்தூண்டுதல் பூங்கா செல்ல தூண்டுதல் அளித்தவரே நீங்கள்தானே

      Delete