நூற்றி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நள்ளிரவு. திண்டிவனம் அருகில் ஒரு கிராமம். அந்த கிராமத்தில் மூன்று செல்வந்தர்களின் மனைவிகளுக்கு அந்த இரவில் பிரசவ வலி எடுக்கிறது. வழக்கமாக அங்கே பிரசவம் பார்க்கும் பெண்மணி ஊரில் இல்லை. ஆனால் அந்த ஊரில் முறையான மருத்துவப் படிப்பு படித்த ஒரு அமெரிக்க மருத்துவர் இருந்தார். பிரசவ வலியில் துடித்த பெண்களுக்கு பிரசவம் பார்க்க அவர் தயாராக இருந்தார். ஆனால் அவரது உதவி மறுக்கப்பட்டது.
எங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு ஆண்மகன் பிரசவம் பார்ப்பதா? எங்களின் கௌரவம் என்னாவது என்று சொல்லி தேடி வந்த உதவியை மறுத்து விட்டார்கள் அந்த செல்வந்தர்கள். பிறகு என்னாயிற்று? பிரசவ வலியில் துடித்த அந்த மூன்று பெண்களும் ஜன்னி கண்டு இறந்து போனார்கள். அவர்களின் குழந்தைகளும் கூட.
அந்த துயரச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்க மருத்துவரின் மகள் மிகவும் வேதனையுற்றாள். தன்னைப் போலவே தன் மகளும் மருத்துவராக வேண்டும் என்று விரும்பிய தந்தையின் கருத்தை இதுநாள் வரை ஏற்காத அவரது மனம் மாறியது. தன் வாழ்நாள் முழுவதையும் இந்தியப் பெண்களுக்காக அர்ப்பணிப்பது என்று முடிவிற்கு வந்தார்.
அதனால் அவர் அமெரிக்கா திரும்பினார். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து தன்னை ஒரு முழுமையான மருத்துவராக்கிக் கொண்டு இந்தியா திரும்பினார்.
அவர்கள் பெற்றோர் அப்போது வேலூரில் இருந்தனர். அவர்களது வீட்டில் ஒரு சிறிய அறையில் தனது முதல் மருத்துவமனையை சரியாக நூற்றி பதினைந்து வருடங்களுக்கு முன்பாக 1900 ம் வருடம் துவக்கினார். ஷெல் என்ற அமெரிக்கர், தனது மனைவியின் நினைவாக கொடுத்த நிதி கொண்டு 1902 ம் வருடம் நாற்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை துவக்குகிறார்.
தான் சிகிச்சை அளிப்பது மட்டும் முக்கியமல்ல, மற்றவர்களையும் சிகிச்சை அளிக்க தயார் செய்வது மிகவும் முக்கியம் என்று கருதிய அவர் 1909 வருடம் செவிலியர் மற்றும் மருந்தாளுனர்களுக்கான பள்ளியைத் துவக்குகிறார்.
நாற்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மட்டுமல்லாது 1924 ம் வருடம், அவர் மிகவும் சிரமப்பட்டு திரட்டிய நிதி கொண்டு 267 படுக்கைகள் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையை துவக்குகிறார்.
மருத்துவப் பள்ளி 1942 ல் மருத்துவக் கல்லூரியாக பரிணமிக்கிறது. முதல் ஐந்தாண்டுகள், பெண்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1947 ல் தான் அது இருபாலர் கல்லூரியாக மாறுகிறது.
267 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனையாக மாறியிருக்கிறது. இந்தியா முழுதிலுமிருந்து நம்பிக்கையோடு சிகிச்சைக்காக நோயாளிகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் செலவினம் என்பது மிகவும் குறைவு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களும் பணியாற்றுகிற நிறுவனம் இது.
சேவை மனப்பான்மை என்பது இன்னமும் காணப்படுகிற மருத்துவமனையாக இருக்கிறது. வசதி உள்ளவர்களுக்காக கார்ப்பரேட் மருத்துவமனையின் வசதிகளுக்கு இணையான பிரிவும் உள்ளது. துல்லியமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த மருத்துவமனைக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.
மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் கூடுமானவரை சிஸேரியன் பிரசவங்கள் தவிர்க்கப்படுகிற ஒரு மருத்துவமனை. இங்கே நார்மல் பிரசவங்களின் சதவிகிதம் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதத்திற்கு மேல் இருக்கும்.
"உங்கள் ஊரிலிருந்து இங்கே வருவதைக் காட்டிலும் டெல்லி செல்வது சுலபம் அல்லவா?" என்று ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த எங்கள் தோழர் ஒருவரைக் கேட்டேன்.
"இங்கே வந்தால் நாங்கள் முழுமையாக குணமாவோம் என்பது எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருடைய நம்பிக்கை. இதுதான் எங்களின் அனுபவமும் கூட. அதனால்தான் இங்கே வருகிறோம்" என்று அவர் உடனடியாக பதிலளித்தார்.
ஆம், அந்த நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் வேலூர் நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களின் நம்பிக்கைக்குரிய அந்த மருத்துவமனை
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
அதை நிறுவியவர்
ஐடா ஸ்கட்டர்.
இன்று அவர் பிறந்தநாள்.
1960 ல் அவர் மறைந்து போனாலும் அவர் துவங்கிய மருத்துவமனை அவரது லட்சியங்களை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
பின் குறிப்பு : அவரது பிறந்தநாளன்று இன்று ரத்த தானம் செய்தது இந்த பதிவை இன்று எழுதத் தூண்டியது.
சிறப்பான பதிவு! பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஐடா ஸ்கட்டர் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteபோற்றுவோம்
குருதி தானம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் தெரியாத பல முகங்களை சொல்லுங்கள்..உங்களால் இன்று இந்த அம்மையார் அறிந்தேன்...நன்றி தோழர்..
ReplyDelete