Thursday, December 3, 2015

பொதுத்துறை சலுகையும் முப்பது ரூபாய் கருணையும்



மிகவும் கொடுமையான இந்த மழை வெள்ளம் நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. தமிழக அரசின் அலட்சியம், மெத்தனப் போக்கு, மராமத்துப் பணிகளில் அக்கறையற்ற போக்கு ஆகியவற்றை அம்பலப் படுத்திய வெள்ளம் அரசு ஊழியர்களின், அரசுத்துறைகளின் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் தனியார் துறையின் கண்டு கொள்ளாத போக்கையும் சேர்த்தே காண்பித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புகலிடங்களாக அரசுப் பள்ளிகள் கைகொடுத்துள்ளது. பணம் பிடுங்கும் எந்த மெட்ரிகுலேஷன் பள்ளியும் நிவாரண முகாமாக மாறியதாகத் தெரியவில்லை. அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் உயிரைப் பணயம் வைத்து வாகனங்களை ஓட்டுகிற போது பண்டிகைக் கால நெரிசல் நேரங்களில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகளோ பத்திரமாக முடங்கி விட்டன. மின்சார வாரிய ஊழியர்கள், உள்ளாட்சித்துறை துப்புறவு ஊழியர்கள் என அனைவரது பணிகளும் பாராட்டத்தக்கது.

இந்த நெருக்கடியான சூழலில் பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் ,சுருக்கமாக பி,எஸ்.என்.எல் நிறுவனம், தமிழகத்தின் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்திருக்கிறது. அதன் விபரங்கள் கீழே உள்ளது. 



பொதுத்துறை நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இருக்கிற ஒரே காரணத்தால் இதனை மோடியின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் பெருமையோடு அறிவிக்க முடிகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் இவரும் இவர் தலைவர் மோடியும்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த அரசும் சரி முந்தைய காங்கிரஸ் அரசும் சரி தடையாக இருப்பது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவுகிற தேச பக்தியால்தான். அப்படி இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த கடுமையான சூழலில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு என்ன சலுகை தருகிறது?

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முப்பது ரூபாய் இலவச டாக்டைம் தருகிறதாம். ஏதோ தங்கள் கஜானாவையே முழுமையாக திறந்து விட்டது போல இதை பெருமையாக விளம்பரப் படுத்துகிறது. 4 ஜி சேவைக்கான விளம்பரத்திற்காக அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு செலவு செய்கிற தொகையைக் கொண்டே அவர்களால் எவ்வளவோ சலுகை அளிக்க முடியும்! ஆனால் அவர்களின் கருணை முப்பது ரூபாயோடு முடிந்து போய் விட்டது. 



தனியார் கம்பெனிகளை புறம் தள்ளி பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க மக்கள் முன் வர வேண்டும் என்பதையே இச்சம்பவம் மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

4 comments:

  1. உயிரைப் பணயம் வைத்து வாகனங்களை ஓட்டும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்களும் நடத்துனர்களும், மின்சார வாரிய ஊழியர்கள், உள்ளாட்சித்துறை துப்புறவு ஊழியர்கள் என அனைவரது பணிகளையும் பாராட்டுவோம் போற்றுவோம்

    ReplyDelete
  2. True....well said comrate. ...service sector contribution during crisis Un imaginable. ...with the current condition of corporation buses they are put their life in risk. ..........

    Seshan dubai


    ReplyDelete
  3. பண்பான பணியாளர்கள் நீடூடி வாழ நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. தோழரே தவறான தகவலைத்தர வேண்டாம்.

    ஏர்டெல் ஒன்னும் சும்மா தரவில்லை. அது கடனாகத்தான் தருகிறது.

    பின்னர் அதற்கு செலுத்தும் கட்டணத்தில் கழித்து கொண்டுதான் நுகர்வோருக்கு சேவை அளிக்கப்படும்.. வாழ்க தனியார் சேவை...?

    ReplyDelete