பிஞ்சிலே பழுத்துப் போன இரண்டு பேரின் வக்கிரப் பாடலைக் கண்டித்து புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கலை இலக்கிய அமைப்புக்கள் கூடி வெளியிட்ட கண்டன அறிக்கையை கீழே அளித்துள்ளேன். வரும் பதினெட்டாம் தேதி அவர்கள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இந்த கண்டன அறிக்கையை அனுப்பி வைத்த தோழர் கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு நன்றிகள் பல.
‘பீப்’
பாடலை வெளியிட்ட இருவருக்கும் திரையுலகம் தடைவிதிக்க வேண்டும்
புதுக்கோட்டை கலை-இலக்கியவாதிகள் போராட்டம்
புதுக்கோட்டை டிச.15-
மலிவான விளம்பர நோக்கத்தில், பெண்களை இழிவுபடுத்தி,
‘பீப்’
பாடலை வெளியிட்ட சிம்பு-அனிருத் இருவருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி
ஊடகங்கள் வாழ்நாள் முழுவதும் தடைவிதிக்க, வேண்டுமென புதுக்கோட்டைக்
கலை-இலக்கிய வாதிகள் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு-
மரப்பாச்சி பொம்மைக்கும் துணிசுற்றிக் கொடுத்து விளையாடச் சொல்லும் பண்பாடு நிறைந்தது தமிழ்நாடு. பாஞ்சாலியைத் துகிலுரிக்கும்
காட்சியில்கூட, துச்சாதனாக நடிப்பவர், “இது நாடகம்தான் தாயே!, என்னை மன்னித்துவிடு”
என்று
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுத் தெருக்கூத்து நடத்தும் நாடு நம்நாடு!
ஆனால், திரையுலகில் பெண்களை இழிவுபடுத்திக் காட்சி அமைப்பதும், பாட்டுப்
பாடுவதும்
தொடர்வது கண்டனத்துக்கு உரியது. அதுவும் மின் ஊடகங்கள் வளர்ந்திருக்கும்
தற்காலத்தில் இந்த மறைமுக வன்முறைகள் இளைய தலைமுறையைப் பாதிப்பதுடன் இதை
இளைஞர் அனைவரும் விரும்புவதாகவும் சொல்வது தவறான வழிகாட்டுதலாகும்.
மிகக்
கேவலமான முறையில் பாடலைத் தயாரித்து வெளியிட்டதோடு, அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்தவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் “என் பாத்ரூமில் ஏன்
எட்டிப்பார்க்கிறீர்கள்?
விரும்பினால் பாருங்கள், விரும்பா விட்டால் போங்கள்“ என்று திமிறாக பேட்டி
தருகிறார் சிலம்பரசன். இது இன்னும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
தனிப்பட்ட முறையில் பெண்களை இழிவுபடுத்துவதே சட்டப்படி தவறானது, இவர்
“பொதுவெளியில் பாத்ரூம் போவேன், நீ யார் கேட்பதற்கு?”
என்பதும் சட்டப்படியே குற்றமாகும். இது நமது சமூக அமைதிக்கே பங்கம் விளைவிப்பதாகும்.
ஒரு
திரைப்படம் என்பது ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்குச் சமமானது என அறிஞர் அண்ணா
அவர்கள் சொன்னதையும், அதில் வரும் பாடல் மக்கள் மனத்தில் பெருத்த
தாக்கத்தை நிகழ்த்தவல்லது என்பதையும், திரைப்படத் துறையிலிருந்து
அரசியலுக்கு வந்த இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் நன்கறிவார்கள். எனவே,
இன்றைய இளைய தலைமுறையைச் சீரழித்து, தவறான திசைக்கு இட்டுச் செல்லும்
எதையும் அவர்கள் தலையிட்டுத் தடுப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக
நம்புகிறோம். தடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக்
கேட்டுக் கொள்கிறோம்.
இந்தப்
பாடலை எதிர்த்து, மாதர்சங்கம் வழக்குத் தொடுத்திருப்பதை வரவேற்கிறோம்.
தேவையெனில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வழக்குத் தொடரவேண்டும். சமூக
அமைதியைக் கெடுக்கும்
ஆணாதிக்க வக்கிரத்தின் தொடர்ச்சியாகவே இத்தகு பாடல்களும் காட்சிகளும்,
நவீன தொழில்நுட்பத் தேரேறி உலகை வலம்வருகின்றன. வாட்ஸ்ஆப், முகநூல், சுட்டுரை போலும் சமூக வலைத்தளங்கள்,
தமிழகத்தின்
பெருவெள்ளத்தின்போது தூரதூரத்து மக்களின் உதவிக்கரங்களை ஒன்றிணைப்பதில்
அரும்பணியாற்றியதை நாடறியும். அதே தளங்களை இப்படிப்பட்ட வக்கிரங்களுக்கும்
பயன்படுத்தும்
இதுபோலும் வணிக நோக்கச் சூழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது. சட்டப்படி
இவற்றைத் தடுக்கவேண்டும்
பாடலில் வக்கிரமான சொற்களின் உச்சரிப்புப் பாதியளவு நீக்கப்பட்டு,
அந்த இடத்தில் தணிக்கைக்கான
‘பீப்’
ஒலி நுழைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
காலங்காலமாகப்
பெண்களை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்கள்தான் அவை என்பதை
எவரும் எளிதில் ஊகித்துணரும் வகையில் இந்தஒலி மறைப்பு மிகத் தந்திரமாகச்
செய்யப்பட்டுள்ளது. நேரடியாக
அச் சொற்கள் ஏற்படுத்தக்கூடிய வக்கிரத்துக்குக் குறையாதபடியே இந்தக்
கேவலமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில்,
வக்கிரத்தைத் தூண்டி, மலிவான விளம்பரத்தின் மூலம் இழந்த தனது திரைப்பட
வணிகத்தைத் தக்கவைக்க சிம்பு செய்த இழிவான செயலே இது. கலை-இலக்கிய
வாதிகளின் படைப்புச்
சுதந்திரத்தைச் சுயநலத்தோடு தவறாகப் பயன்படுத்தும் சிம்பு போன்றவர்களை
வழக்குமன்றத்தில் சந்திப்பது ஒரு புறமிருக்க, இவர்கள் இருவரும் ஊடகங்களில்
தோன்றி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். மறுத்தால், இவர்கள்
இருவரையும் திரைப்பட-தொலைக்காட்சி- பத்திரிகை-இணைய
ஊடகங்கள் அனைத்தும் இவர்களின் வாழ்நாள் முழுவதும் தடைசெய்ய முன்வரவேண்டும்
என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கையுமாகும்.
இதனை
வலியுறுத்தி, நமது புதுக்கோட்டை நகரில், புதிய பேருந்து நிலைய மேற்கு
வாயிலருகில், வரும் 18-12-2015 வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு
கலை-இலக்கிய-சமூக ஆர்வலர்கள் குடும்பத்தோடு
ஆர்ப்பாட்டம் நடத்திடவுள்ளோம்.
எங்களோடு,
புதுக்கோட்டையிலுள்ள மாணவர், இளைஞர், திரைப்பட ரசிகர்கள், அரசுஊழியர்,
ஆசிரியர், பெற்றோர், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் குடும்பத்தோடு
பங்கேற்று நமது
பண்பாடு காக்கத் திரண்டு வருமாறு அழைக்கிறோம்.
இதற்காக
நேற்றுமாலை ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரியல் நடந்த கூட்டத்தில்
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, 18ஆம் தேதி நடைபெறவுள்ள
ஆர்ப்பாட்டத்தையும் சிறப்பாக
நடத்த ஒத்துழைக்க வேண்டுகிறொம்.
இவண் – அனைத்துக் கலை-இலக்கிய, சமூக அமைப்புகள், புதுக்கோட்டை.
புதுகையின் எதிர்ப்புக்குரல் எங்கும் முழங்கட்டும்..நன்றி பகிர்விற்கு..
ReplyDeleteபுதுகையின் எதிர்ப்புக் குரல்
ReplyDeleteதமிழகத்தின் குரலாக
உலகெங்கும் நிறைந்துள்ள
தமிழ் உணர்வாளர்களின் குரலாக
ஓங்கி ஒலிக்கட்டும்
நன்றி தோழரே!
ReplyDeleteஆஹா..எப்போதும் உங்கள் பதிவுகள் என்னை முந்திவிடுகிறது தோழர்...ஆனால் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...
ReplyDeleteBoth guys are rouges
ReplyDeleteமனித உருவில் நடமாடும் மிருகங்கள்!
ReplyDelete