எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர்
அமானுல்லாகான், சமீபத்தில் கொல்கத்தாவில் “அமைதி” என்ற தலைப்பில் ஒரு
கருத்தரங்கில் உரையாற்றினார்.
நீண்ட அந்த உரையை வாட்ஸப்பிலிருந்து வேறு வடிவத்திற்கு மாற்றும் வழி
தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது எங்கள் ஜல்பைகுரி கோட்டத் தோழர்கள், அவரது
உரையின் சாராம்சத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு வரைபடமாகவே அளித்து விட்டார்கள்.
அந்தப் படங்களையும் அதற்கான தமிழாக்கத்தையும் கீழே அளித்துள்ளேன். மிகவும்
ஆழமான கருத்துக்களை மிகவும் எளிமையாக வழங்க உதவிய ஜல்பைகுரி கோட்டத் தோழர்களுக்கு,
அதிலும் குறிப்பாக இந்த வரைபடங்களைத் தயாரித்த தோழர் அமித்கானுக்கு பாராட்டுக்களை
பதிவு செய்கிறேன்.
அமைதி என்பதற்கு போர்கள் அற்ற உலகம் என்பது மட்டுமல்ல அர்த்தம். பொருளாதார,
சமூக வேறுபாடுகளற்ற, நேர்மையான, நீதியான சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும்
அமைதி என்பதுதான் பொருள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நீதியும் சமத்துவமின்றி
அமைதி கிடையாது.
சந்தைகள்தான் முதலாளித்துவத்தின் அடிப்படை. எனவே தனது சந்தைக்காக ஒட்டு
மொத்த உலகத்தையும் கைப்பற்ற முதலாளித்துவம் அனைத்து எல்லைகளையும் தகர்த்தெறியும்.
முன்பு காலனியாக்கல் மூலமாக செய்தார்கள். இப்போது ஏகாதிபத்திய உலகமயமாக்கலை
கையாள்கிறார்கள்.
மூலதனம் அரசுகளையும் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களையும் தங்களுக்குச் சார்பாக
கொள்கைகளை வகுக்குமாறு, அவை மக்களின் நலனுக்கு எதிராக இருந்தாலும் கூட,
நிர்ப்பந்திக்கிறது. இது ஜனநாயகத்தை மதிப்பிழக்கச் செய்து தேசங்களை
பலவீனப்படுத்துகிறது.
நவீன தாராளமயமாக்கல் முறை உலகெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு
துயரத்தையே அளித்துள்ளது. இந்த பொருளாதார
அமைப்பு முறைக்குப் பதிலாக நியாயம், நீதி, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலான,
இயற்கையை மதிக்கிற மாற்று பொருளாதார முறையை முன்னிறுத்த வேண்டும். அமைதிக்கான போராட்டமும் ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான போராட்டமும் ஒரே போராட்டத்தின் இரண்டு அம்சங்களே.
சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மூலதனம்
உழைக்கும் வர்க்கத்தின் மீது போரே தொடுத்துள்ளது. நெருக்கடி உருவானதற்கு
எந்த விதத்திலும் காரணமில்லாத உழைப்பாளிகள், அந்த நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளின்
வலியை தாங்கித்தான் ஆக வேண்டும் என்று மூலதனம் உபதேசிக்கிறது.
அபரிமிதமான மூலதனக் குவியல், மூலதனத்தின் நிறுவனமயமாக்கலுக்கும்
சர்வதேசமயமாக்கலுக்கும் இட்டுச் சென்றது. இதனால் உற்பத்திக்கும் சேவைக்கும்
தொடர்பில்லாத செயற்கை வளம் பெருகியது. உற்பத்தியிலிருந்து விடுபட்டதால் மூலதனம்
சூதாட்டத் தன்மையுடையதாய் மாறியது. 2008 உலக நிதி நெருக்கடியே சர்வதேச நிதி மூலதனத்தின் ஊக நடவடிக்கைகளால்தான்.
புவி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் மனிதகுலம் ஜீவிப்பதற்கு மிகப் பெரிய
அபாயமாகி விட்டது. முதலாளித்துவ பாணியிலான வளர்ச்சிதான் சந்தேகத்திற்கிடமில்லாத
குற்றவாளி.
மனித குல முன்னேற்றத்திற்கு அமைதிதான் அடிப்படையானது. ஏகாதிபத்தியத்தையும்
அதன் போர் வெறியையும் உலகமயமாக்கலையும் எதிர்த்து தொடர்ந்து உறுதியாக போராடாமல்
அமைதிக்கான சூழலை உருவாக்க முடியாது.
மூலதனம் அரசுகளையும் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களையும் தங்களுக்குச் சார்பாக கொள்கைகளை வகுக்குமாறு, அவை மக்களின் நலனுக்கு எதிராக இருந்தாலும் கூட, நிர்ப்பந்திக்கிறது. இது ஜனநாயகத்தை மதிப்பிழக்கச் செய்து தேசங்களை பலவீனப்படுத்துகிறது.
ReplyDeleteஇன்றைக்கு நடந்து கொண்டிருப்பது இதுதானே நண்பரே
போற்றுதலுக்கு உரிய உண்மையான பேச்சு