Thursday, December 17, 2015

இன்னும் ஒரு செய்தி இங்கே....

 எங்களது தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சென்னையில் மேற்கொண்ட  தூய்மைப்பணி பற்றி  முன்னரே எழுதி இருந்தேன். அப்பணி குறித்து தீக்கதிர் நாளிதழில் இன்று வந்திருந்த செய்தி இங்கே.

கூடுதலாக சில புகைப்படங்களும் கூட








டிசம்பர் 13, 2015 காலை 9 மணிக்கெல்லாம் வேளச்சேரி பெரியார் நகரில் ‘மக்கள் சேவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்‘ என்கிற வரிகள் பொறிக்கப்பட்ட வெண்ணிற டி - சர்ட்களோடு 185 இன்சூரன்ஸ் ஊழியர்கள் 13 பெண்கள் உட்பட திரண்டிருந்தனர்.கைகளில் துடைப்பம், இரும்புச் சட்டிகள், நீண்ட கைப்பிடியுடனான பிரஷ்கள், மண்வெட்டிகள், முள்கரண்டிகள், சவுல்கள், ப்ளீச்சிங் பவுடர், கையுறை, மாஸ்க், சகதியில் இறங்குவதற்கான பூட்ஸ் ஆகியவற்றோடு வெள்ளம் பாதிக்கப்பட்ட அப்பகுதியில் களம் இறங்கியிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சவுலில் சாக்கடை கலந்த சகதியை அள்ளி தூய்மைப் பணியைத் துவக்கி வைத்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 10 பேரை பலி கொண்ட பெரியகாட்டுப்பாளையத்தில் துவங்கி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை புறநகர், மாநகர் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திருவொற்றியூரில் மார்பளவு வெள்ளத்தில் உள்ளே சென்று குடிநீர், பொருட்களை இன்சூரன்ஸ் ஊழியர்கள் விநியோகித்தனர்.பல இடங்களில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிறகு பெட்ஷீட், அரிசி, பருப்பு, எண்ணெய், சோப், குடம், கொசுவர்த்தி சுருள், பெண்களுக்கான நாப்கின் என நிவாரணப் பொருட்கள் ஊழியர்களின் நன்கொடைகள், ஊழியர்களின் உறவினர் நன்கொடைகள், நட்புவட்டத்தின் பங்களிப்பு ரூ.30 லட்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், வேளச்சேரி பெரியார் நகர் பணி வித்தியாசமானது. நடுத்தர வர்க்க மனோபாவங்களை உடைத்தெறிந்து மக்களோடு கலந்து நிற்கிற வடிவம். பெரியார் நகரின் 20 வீதிகள் சேறும், சகதியுமாய் காட்சியளித்தன. காலை வைத்தாலே பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் பறந்தன. சுகாதாரச் சீர்கேட்டின் உச்சக்கட்டம். செயலற்று நிற்கிற அரசு நிர்வாகம். தெருக்கள் முழுவதும் துர்நாற்றம்.காலையில் துவங்கிய பணி மாலை 6 மணி வரை நீடித்தது. சாக்கடை நீரை அதற்கான வடிகால் திறப்புகளில் செலுத்தினர். மண், கற்களைப் போட்டு நடைபாதையை உருவாக்கினர். பைகளில் சேறு, சகதியைச் சேர்த்து வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தினர். ப்ளீச்சிங் பவுடரை வீதிகளின் ஓரங்களிலும், செம்மை செய்த இடங்களிலும் போட்டனர். 

பொதுமக்கள் பலர் பாராட்டினர். அவர்களும் இணைந்தனர். தேநீர் கொடுத்து உபசரித்தனர். எல்லாவற்றையும் இழந்த இறுக்கத்தோடும் சிலர் இருந்ததையும் புரிந்து கொள்ள முடிந்தது.இரண்டாவது நாள் (டிசம்பர் 14) சூளைப்பள்ளத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இன்சூரன்ஸ் ஊழியர்கள் போன்று பல்வேறு இயக்கங்களும் களத்தில் இறங்கியது ஓர் போராட்ட வடிவம் போல அரசு நிர்வாகத்தால் பார்க்கப்பட்டது. 

தர்மபுரி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு கடுமையான பணிகளைச் செய்வதற்கேற்ற குறைந்தபட்ச உணவு கூட உறுதி செய்யப்படவில்லை. விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். அவர்களோடும், தோளோடு தோள் சேர்ந்து நடுத்தர வர்க்க ஊழியர்கள் களத்தில் இறங்கியதும் அக்குமுறல்களை மீறிப் பணிபுரிந்தனர். 

200 பேர் நாற்றமெடுக்கிற குப்பைகளை அள்ளத் தயாராக இருந்தும் மாநகராட்சி முதலில் லாரிகள் கொடுத்துக் கூட உதவவில்லை. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையிட்ட பின்னர் லாரி கிடைத்தது. ஒரு இடத்தில் குவிக்கப்பட்ட குப்பை மட்டுமே 3 லோடு லாரி என்றால் பாருங்களேன். அச்சாலை முழுவதும் குவிக்கப்பட்ட குப்பைகள் அள்ளப்பட்டன. குப்பைகளை கொட்டுகிற இடம் வரை லாரி டிரைவருடனே போய் திரும்பக் கொண்டு வந்து சேர்த்து நாள் முழுவதும் அப்பணி செய்யப்பட்டது.

இவ்வியக்கத்தின் அனுபவத் துளிகள் சில...* 

தூய்மைப் பணிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன் தமிழகத்தின் கடைக்கோடியில் துவங்கி மாநகரவாசிகள் வரை தன்னார்வத்தோடு முன்வந்தனர். நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாலும் சில சிரமங்கள் இருந்தன. கையுறைகள் கிழிந்து போயின. உடம்பெல்லாம் சேறு. இதை மீறியும் இப்பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.* அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி 4 மணி நேரம் தொடர்ந்து ஓர் தொண்டராய்ப் பணியாற்றினார்.* 

 இரண்டாவது நாள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், முத்தரசன் ஆகிய தலைவர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆற்றிய பணியைப் பார்த்துப் பாராட்டினர்.

* 80 வயதைத் தொட்ட சங்கத்தின் மூத்த தலைவர்கள் என்.எம்.சுந்தரம், எஸ்.ராஜப்பா, ஆர்.கோவிந்தராஜன், கே.என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் வி.டி.சோமசுந்தரம், டி.தேவபிரகாஷ், எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சவலைக் கையில் பிடித்து ஈடுபட்டதும் பாரம்பரியத் தொடர்ச்சியின் குறியீடாக அமைந்தது.* அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா உள்ளிட்ட 13 பெண்கள் மிகக் கடுமையான பணிகளைச் செய்தனர்.


வேளச்சேரி பகுதிக் குழு சிபிஎம் செயலாளர் வனஜகுமாரி கூறும்போது, 

‘ஆண்கள் கையில் எல்லாம் துடைப்பக் கட்டையைக் கொடுத்துட்டீங்களே! 

என்று பெரியார் நகர் பெண்கள் ஆச்சரியப்பட்டாங்க!’இப்படியொரு பாலின நிகர்நிலைப் பின்னூட்டம்.

ஒரு பெரியவர் சொன்னது, “எங்க தெருவுக்கு கருணாநிதி தெருன்னு பெயர் இருக்கறதால அரசாங்கம் கவனிக்கல. கருணாநிதின்னு பெயர் வச்சதுக்காவது இவங்க கவனிப்பாங்கன்னு பாத்தா அவங்களும் கவனிக்கல. நீங்கதான் வந்துருக்கீங்க!” என்று இரு துருவ அரசியல் அபாயத்தை அனுபவத்தால் உள்வாங்கிய பின்னூட்டம்.

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதனிடம் இப்பணி பற்றி கேட்ட போது, “ஜனநாயக வாலிபர் சங்கம்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேசன்.. அவங்க 10 நாளா செஞ்சுகிட்டு இருக்காங்க. இது அனுதாபத்துல செய்த பணி இல்லை. உழைப்பாளி மக்களோடு கலந்து நிற்பதுதான் தொழிற்சங்கத்தின் கடமை” என்றார்.

5 comments:

  1. அற்புதமான பணி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அரிய, அற்புதப்பணியாற்றும் தங்களுக்கும் குழுவினருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. தூய பணி தூய்மைப் பணி!வாழ்க!

    ReplyDelete
  4. இன்று இதுதான் முக்கிய பணி! பாராட்டுக்கள், நன்றி

    ReplyDelete
  5. இப்படியெல்லாம் நேரில் இறங்கி உதவி செய்யும் நல்லவர்களை பார்க்கும் போது, அவர்களிடம் இப்போதெல்லாம் சிம்புவின் பாடல் பற்றி கேள்வி கேட்கும் ஆசை தோன்றுகிறது.

    ReplyDelete