Friday, April 19, 2013

தங்க்ம் விலை குறையுது, தவிக்க வைக்குது, தலை சுற்றுது





தங்கம் விலை குறைவதால் மக்களெல்லாம் நகைக்கடை வாசலில்
நிற்கிறார்கள்,  நகை வாங்கித் தர வேண்டும் என கணவனை மனைவி
மிரட்டுவது,ரேஷன் கடையை விட நகைக்கடை கியூ பெரிதாக இருப்பது,
இப்படி பல நகைச்சுவைத் துணுக்குகள், கார்ட்டூன்கள்  வந்து கொண்டே
இருக்கிறது. நான் அதைப்பற்றி எழுதப்போவதில்லை.

தங்கம் விலை குறைவதால் இன்று விழி பிதுங்கி வங்கியிலிருந்து
வந்துள்ள கடிதங்களை கையில் வைத்து தவித்துக் கொண்டிருப்பவர்கள்
பற்றிதான்.

வங்கிகளில் நகைக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு வங்கிகள் கடிதம்
அனுப்பிக் கொண்டிருக்கின்றன. கடன் அளவை விட தங்கத்தின் 
மதிப்பு குறைந்து விட்டதால் அதை ஈடு செய்யும் அளவிற்கு பணம்
செலுத்த வேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம்.

முகநூலில் ஒரு நண்பர் இது போன்ற கடிதம் தனக்கு வந்துள்ளதாக
ஸ்டேட்டஸ்  போட்டவுடன் நானும் அலுவலகத்தில் சில ஊழியர்களை
விசாரித்தேன். தங்களுக்கும் அது போல கடிதம் வந்துள்ளதாக
மெல்லிய குரலில் சொன்னார்கள்.

ஸ்டேட் வங்கி  சேர்மன் பத்திரிக்கைகளில் சொன்னதற்கு மாறாக
வங்கிகளின் நடவடிக்கை உள்ளது. நகையின் மதிப்பில் 70 % மட்டுமே
கடனாக அளிப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை
என்றும் பெரும்பாலான நகைக்கடன்கள்  திருப்பி செலுத்தப் படுவதே
இந்தியாவின் மரபாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
வாடிக்கையாளர்களை இப்போது தொந்தரவு செய்ய வேண்டிய
தேவை ஏற்படாது என்றும் அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் அதற்கு மாறாகத்தான் வங்கிகள் நடந்து கொண்டுள்ளது.

Panic Buying  என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு.
ஒரு பொருள் விலையேறுமோ அல்லது கிடைக்காமல்
போகுமோ என்று அச்சப்பட்டு மக்கள்  முண்டியடித்துக் கொண்டு
வாங்குவதை இவ்வாறு சொல்வார்கள். பெரும்பாலும் இது
உளவியல் அச்சம்தான்.

இப்போது வங்கிகளுக்கு அந்த உளவியல் அச்சம் வந்து
விட்டது. கடந்த் ஒரு வார விலை குறைப்பை பார்க்கும் போது
தங்கம் ஒரு கிராமின் விலை ரூபாய் 2500 க்கு குறையவில்லை.
வங்கிகள் அதிக பட்சம் கடன் கொடுத்தது கிராமிற்கு 
ரூபாய் 2100 அல்லது ரூபாய் 2200 தான். ஆகவே இது வரை
கடன் மதிப்பை விட தங்கத்தின் விலை குறையவில்லை.

ஆகவே இது அவசியமற்ற  நடவடிக்கை.

இன்னொன்று நகைக்கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும்
நடுத்தர, ஏழை மக்கள்தான். வங்கிகளில் வராக் கடனாக
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் குவித்து வைத்துள்ள
விஜய் மல்லய்யா போன்ற பெரும் செல்வந்தர்களை விட
இவர்கள் நாணயமானவர்கள், நேர்மையானவர்கள். 

பெரும் பணக்காரர்கள் அடகு வைத்த நிலத்தின் மதிப்போ,
பங்குப் பத்திரங்களின் மதிப்போ குறையும் போது இது
போன்ற கடிதங்களை வங்கிகள் என்றாவது அனுப்பியது
உண்டா?  அடமானம் வைத்துள்ள தங்கம் அவர்கள் கைவசம்
உள்ள போதே இந்த நடவடிக்கை!

ஏழை, நடுத்தர மக்களை எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம்
என்ற எண்ணம் கொண்ட அரசு ஆட்சி செய்யும் போது அதன்
கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மட்டும் வேறு எப்படி
செயல்படும்?

இப்போது மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கி
விட்டது.

இப்போது கூடுதல் கடன் கொடுப்பார்களா?

3 comments:

  1. நியாயமான கேள்வி?

    ReplyDelete
  2. நாம் கட்டாமல் போனால் நம்ம நகையை ஏலம் விட்டுவிடுவான்களா?

    ReplyDelete
  3. இந்த நாயிங்கள எல்லாம் செருப்பால அடிகனும்னே காசு உள்ளவன்னா வாள ஆட்டுவனுங்க இளிச்சவாயன்ன ஓவரா போவாங்க பரதேசி பயலுங்க

    ReplyDelete