Sunday, April 14, 2013

அல்வா, தோசை, ஐஸ்க்ரீம்
பாம்பே ஆனந்த பவன் என்ற பெயருடைய வேலூரின் பிரபலமான ஒரு இனிப்புக் கடை இன்று எங்கள்  சத்துவாச்சாரி  பகுதியில் ஒரு கிளை திறந்துள்ளது. இத்தனை நாள் இல்லாமல் இன்று அந்த பெயர் பழைய நினைவுகளை கிளறி விட்டது.

1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் காரைக்குடியில் இருந்தது. அதிலும் 1978 முதல் 1982 வரை நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை படிக்கச்சென்று விட்டேன். காரைக்குடி வாழ்வு என்பது பிரதானமாக 1972 முதல் 1978 வரைதான்.

காரைக்குடியில் அந்த காலத்தில் பிரதானமான உணவு விடுதியின் பெயரும் பாம்பே ஆனந்த பவன் தான். எனது அப்பா எப்போதாவது திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வார்,. குடும்பத்தோடு என்றால் டவுன் பஸ்ஸில் சென்று ராம விலாஸம் தியேட்டரில் மதியக் காட்சி முடிந்த பின்பு பாம்பே ஆனந்த பவன் வரை நடந்து வந்து அங்கே டிபன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவோம்.

என்னை மட்டும் தனியாக அழைத்து செல்வதாக இருந்தால் சைக்கிள் பயணம்தான். சில சமயம் திரைப்படம் முடிந்து அரசியல் பொதுக்கூட்டம் கொஞ்ச நேரம் கேட்டு விட்டு வருவோம். அப்படி சிறு வயதிலேயே வந்ததுதான் அரசியல் ஆர்வமும் கூட.

பாம்பே ஆனந்த பவன் வந்தால் முதலில் அல்வா. அதை ஸ்பூனில் சாப்பிடுவதே மிகவும் பெருமையாக இருக்கும். பிறகு முறுகலான தோசை. அந்த காலகட்டத்தில் வீட்டில் முறுகல் தோசைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சட்னி மற்றும் சாம்பார் என இரண்டு சைட் டிஷ்களோடு தோசையோ இட்லியோ சாப்பிடுவது என்பதும் அப்போது ஹோட்டலில்தான் சாத்தியம். அப்போது வீட்டில் மிளகாய் பொடி மட்டும்தான். ஆனால் இன்று எத்தனை சைட் டிஷ் இருந்தாலும் மிளகாய் பொடி இல்லாமல் தோசை வயிற்றில் இறங்குவதே இல்லை. கடைசியாக அவர் காபி சாப்பிடும் போது எங்களுக்கு ஐஸ்க்ரீம்..

அந்த காலகட்டத்தில் ஐஸ் என்பது பள்ளிக்கு வெளியே விற்கும் குச்சி ஐஸ் மட்டும்தான். ஆரஞ்சு கலர் ஐஸ். சேமியா ஐஸ், எப்போதாவது பால் ஐஸ். அவ்வளவுதான். ஆனால் இங்கே பாம்பே ஆனந்த பவனில் கண்ணாடிக் கோப்பையில் ஐஸ்கிரீம் தருகையில் அது அவ்வளவு பரவசமாக இருக்கும்.

திரைப்படம் செல்வதும் பின்பு ஹோட்டல் செல்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் கிடையாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான். மறுநாள் பள்ளியில் நண்பர்களோடு பீற்றிக் கொள்ளும் அளவிற்கு முக்கிய நிகழ்வாக இருக்கும். பாம்பே ஆனந்த பவன் போய் விட்டு வந்தோம் என்று சொல்வதே ஒரு பெருமையாக இருக்கும். இப்போது காரைக்குடியில் பாம்பே ஆனந்த பவன் செயல்படுகிறதா? அதன் தரம் எப்படி உள்ளது என்பதை காரைக்குடி நண்பர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

தனியாக நண்பர்களோடு திரைப்படம் செல்லத் தொடங்கிய பின்பு இந்த அனுபவம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின்பு நின்று விட்டது. திருமணத்திற்கு பின்பு மனைவியோடு, பின்பு மகனோடு என்று புதிய சுற்று தொடங்கியது. அதுவும் இப்போது குறைந்து விட்டது.  

இப்போதும் ஹோட்டல்கள் செல்கிறோம். ஆனால் அன்று அல்வா,
தோசை, ஐஸ்க்ரீம் கொடுத்த பரவச அனுபவத்தை இன்றைய 
நான்,ப்ரைட் ரைஸ், மலாய் கோப்தா, ஆனியன் ரவாக்கள் 
தரவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு ஒரு 
காரணமும் உண்டு. அப்போது வெளியே செல்வது, 
சாப்பிடுவது என்பது அரிய  நிகழ்வு. இப்போது
அப்படி அரிதானது கிடையாது என்பதுதான்.  

இப்போது மகன் அவன் நண்பர்களோடு தனியாக திரைப்படம் செல்லத் தொடங்கி விட்டான். அவனும் ஒரு புதிய சுற்றை தொடங்குவான். 

குழந்தையாக இருக்கும் போது சாப்பிட்ட பூரி மசாலா பரவசம்
கொடுத்ததா என்பதை அவன்தான் சொல்ல முடியும். ஆனால் 
அவன் சிறுவனாக இருக்கும் போது அழைத்துச் சென்ற ஒரு
ஹோட்டல் இன்று பெயர் மாறி தரம் இழந்து போய் விட்டது. 

5 comments:

 1. vasanthabhavan hotel dosai was famous for us when we studied during 1983-85. now, where is that hotel?

  ReplyDelete
 2. பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.

  அருமை.

  ReplyDelete
 3. Yes, I remember the ice cream from Karaikudi Bombay Ananda Bhavan (BAB) too! It has been twenty years since moved out. Sunna restaurant was opened next to BAB.

  But I couldn't find that taste in any ice cream around the world. Some foods are called memory foods (like thengaaipaal kanji, keppai kali etc). BAB ice cream is one of them.

  ReplyDelete
 4. பழைய நினைவுகள் எல்லோருக்குமே இனியதாய் உள்ளது என்பதைத்தான் பின்னூட்டங்கள் சொல்கின்றன. வருகை தந்த அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 5. எங்கேயோ கொண்டுபோயிட்டீங்க.
  ஊர்கள் மாறலாம் கடைகளின் பெயர்கள் மாறலாம்.
  சிறு வயதின் நினைவுகள் என்றும் இனிமையானவே!!!

  ReplyDelete