Tuesday, April 16, 2013

பல் பிடுங்கப்பட்டு, தலையில் தட்டப்பட்ட அரசர்


உறுதியான போராட்டங்கள் என்றும் தோற்காது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டம் இது. பல்கலைக் கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதால் ஊழியர்கள் எண்ணிக்கை வெட்டப்படும், ஊதியம் குறைக்கப்படும் என்று துணை வேந்தர் அறிவித்தவுடன் தொடங்கிய போராட்டம் இது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதார நெருக்கடி என்ற தகவலே நம்ப முடியாத ஒன்றாகத்தான் தோன்றியது. புதிதாக தோன்றிய கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களே கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நேரத்தில் பழமையான அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு எப்படி வரும் நெருக்கடி?

இன்னும் கொச்சையாக சொல்ல வேண்டுமானால் பஞ்சம் பிழைக்க வந்த பல்கலைக் கழகங்களே லாபம் சம்பாதிக்கும் போது பரம்பரையாய் நடக்கும் பல்கலைக்கழகத்தில் எங்கே வரும் நஷ்டம்?

இத்தனைக்கும் அஞ்சல் வழி கல்வி என்ற மிகப் பெரிய வைரச் சுரங்கம் வேறு அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் வசம் உள்ளது. மாணவர் சேர்க்கை குறைவில்லாமல் நடக்கிறது. மருத்துவத்திற்கும் பொறியியல் கல்விக்கும் வட மாநிலங்களிலிருந்து வந்து குவிகிறார்கள்.

ஆக பணம் வருவதில் சிக்கல் இல்லை. அந்த பணம் எங்கே, யாருக்கு திருப்பி விடப்பட்டது என்பதில்தான் சிக்கல். அண்ணாமலை பல்கலைக் கழகம் ஏதோ புதைகுழிக்குள் சிக்கியுள்ளது என்பதற்கு பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே ஒரு ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட போதே தோன்றியது.

இக்கொலை தொடர்பாக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரை விசாரித்தால்தான் உண்மை தெரிய வரும் என்ற நிலைமை இருந்தாலும் அது நடக்கவில்லை. இணை வேந்தர் என சாதாரண மனிதரா என்ன? செட்டி நாட்டரசர், மிகப் பெரிய கோடீஸ்வரர். அவரிடம் சட்டங்கள் செல்லுபடியாகுமா என்ன?

இக்கொலை என்பது மறைந்திருக்கும் பனி மலையின் சிறு முனைதான் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல்கலைக் கழகத்தில் முறைகேடுகளை யார் செய்வது, வேந்தருக்கு நெருக்கமாக இருந்து யார் பணத்தை  சுருட்டுவது என்பதிலான போட்டியே கொலை வரைக்கும் சென்றுள்ளது.

இணை வேந்தர், துணை வேந்தர், பதிவாளர் போன்றவர்கள் மோசடி செய்வார்கள், மோசடியானால் ஏற்பட்ட நஷ்டத்தின் சுமையை மட்டும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஏற்க வேண்டுமென்றால் அது என்ன நியாயம் இது? அதனால்தான் அவர்கள் கொந்தளித்தார்கள். சிதம்பரம் நகரே ஸ்தம்பித்துப் போகக் கூடிய வகையில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன்  மக்களை ஒருங்கினைத்தார். அப்போராட்டம் மக்கள் போராட்டமாகவே மாறியது.

அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. முதலில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்த தமிழக அரசு பிறகு துணை வேந்தரை இடை நீக்கம் செய்தது. இப்போது பல்கலைக் கழக சட்டத்தை மாற்றி தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சரையே இணை வேந்தராக்கப் போகிறது. இனி அண்ணாமலை பல்கலைக் கழகம் குடும்ப சொத்து அல்ல. அண்ணாமலை செட்டியார் தோற்றுவித்த பல்கலைக்கழகத்தின் நோக்கத்தையும் புகழையும் சிதைத்தது அவரது வாரிசுதானே!

இதன் மூலம் செட்டிநாட்டரசர் என்ற பெருமையோடு உலா வரும் எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களின் பல் பிடுங்கப்பட்டு தலையில் தட்டப்பட்டுள்ளது. முறைகேடுகள் ஆராயப்பட்டு வெளியேறிய பணத்தை கைப்பற்றுவதும் முறைகேட்டுக்கு காரணமானவர்களை உள்ளே தள்ளுவதும்தான்.

இந்த முன்னேற்றத்திற்கு காரணம் ஆசிரியர்கள், ஊழியர்களின் போராட்டங்கள்தான். இந்த வெற்றி போராடும் சகல பகுதி உழைக்கும் மக்களுக்கும் உற்சாகமளிக்கிறது.

3 comments:

  1. போராட்டம் வெல்லும்

    ReplyDelete
  2. தேவையை விட நான்கு மடங்கு ஊழியர்கள் இருப்பதும், பல வருடங்களாக லஞ்சம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் சேர்ந்திருப்பதும்.. இது போன்ற போராட்டங்களின் மூலம் மறுவாழ்வு பெறுவது சரியாக தோன்றவில்லை!

    ReplyDelete
  3. JAYA AMMA MATTUM THAAN INTHA MATHIRI THEIRIYAMAAGA MUDIVEPPAARGAL. VOTE FOR ADMK!

    ReplyDelete