Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - இஸ்லாமிய அமைப்புக்கள் இழந்த வாய்ப்பு



விஸ்வரூபம் திரைப்படத் தடை பற்றி மாமா ஏன் எதுவும்
எழுதவில்லை என்று உன் மருமகன் கேட்கிறான் என
இன்று காலை என் அக்கா தொலைபேசியில் சொன்ன
போதுதான் கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு
மேல் வலைப்பக்கம் வரவேயில்லை என்பது 
நினைவிற்கு வந்தது.

தொழிற்சங்கப் பணிகள் மற்றும் சில சொந்த அலுவல்கள்
இவைகளுக்கு மத்தியில்
இதோ இப்போது சற்று அவகாசம்
கிடைக்க எழுத வந்து விட்டேன்.

விஸ்வரூபம் படத்திற்கு தடை தேவையா ? இல்லையா?

படம் வெளி வருவதற்கு முன்பாக, ரசிகர்கள் பார்ப்பதற்கு
முன்பாக அப்படி தடை செய்யும் அளவிற்கு என்ன அதில்
உள்ளது?

தொலைக்காட்சி விவாதங்களில் பேசப்பட்டதன் அடிப்படையில்
பார்க்கும் போது இஸ்லாமிய அமைப்புக்கள் நிதானம்
தவறியுள்ளதாகவே உணர்கிறேன். 

கதைக்களம் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும்
நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தாலிபன் தலைவர்
முல்லா ஓமர் தமிழ் பேசுவதாக காட்சி வருகின்றது.
ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுகையில்
எல்லோரும் துப்பாக்கியை உயர்த்தி மகிழ்கின்றார்கள்.
கொலை செய்வதற்கு முன்பாக தொழுது விட்டு
செல்கிறான். கண்கள் கட்டப்பட்ட சிறுவன் ஆயுதங்களை
சரியாக சொல்கிறான். 

இவையெல்லாம் எதிர்ப்பிற்கான முக்கியக் காரணங்கள்.

ஆப்கானிஸ்தானில்  இவையெல்லாம் நடக்கவில்லையா?
மதத்தின் பெயரால், இறைவனின் பெயரால் தாலிபனும்
அல்கொய்தாவும் கொடூரங்களை நிகழ்த்தவில்லையா?
சமீபத்தில் கூட ஒரு பெண்ணை கொன்று விட்டு
உற்சாகக் குரல் எழுப்பியதை பார்த்தோமே! நான் கூட
இச்சம்பவம் பற்றி பதிவு எழுதினேன். பெண்களின்
உரிமைகள் நசுக்கப்பட்டதே! படிக்க வேண்டும் என்று
ஆசைப்பட்ட மலாலா வை துப்பாக்கித் தோட்டாக்கள்
தொலைத்ததே....

ஆப்கானின் தாலிபனுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத
இயக்கங்களுக்கும் இந்தியாவில் உள்ள
அதிலும்  தமிழகத்திலும் உள்ள இஸ்லாமியர்களுக்கும்
எந்த தொடர்பும் கிடையாது என்பதை 
தமிழகத்தில் உள்ளவர்கள் எல்லோரும்
நன்றாக அறிவார்கள். ஆகவே படம் பார்த்து
யாரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சில வெறியர்களின் தவறை அந்த மதத்தின் தவறாக
தவறாக புரிந்து கொள்ளும் மக்கள் இந்தியாவில்
அதிகம் பேர் கிடையாது. 

தீவிரவாதிகளுக்கும் மற்ற அமைப்புக்களுக்கும் உள்ள
வேறுபாடுகள் புரிந்தவர்கள்தான் இந்திய மக்கள்.

ஆக இந்தக் காட்சிகள் வெளி வந்தால் ஒற்றுமை பாதிக்கப்படும்
என்பதெல்லாம் கற்பனாவாதம். 

எதிர்ப்பதற்கு மாறாக, நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க
மாட்டோம். வரலாற்று ரீதியாக உள்ள சில தவறுகளை
திருத்தி விட்டு படத்தை வெளியிடட்டும் என்று 
சொல்லியிருந்தால் சரியாக இருக்கும்.



ஏனென்றால் தாலிபன், அல் கொய்தா, முல்லா ஓமர்,
ஓசாமா பின் லேடன் என எல்லோரும் அமெரிக்காவின்
தயாரிப்புக்கள்தான்.

ஒரு அரசு தனது சுயநலத்திற்காக தீவிரவாதத்தை 
ஊக்குவித்தால் அதுவே பெரிய விலை கொடுக்க 
வேண்டியிருக்கும் என்பதற்கு இந்திரா காந்தியின்
கொலையும் இரட்டை கோபுர தகர்ப்பும் நல்ல
படிப்பினைகள்.

ஒவ்வொரு கலை வடிவத்தையும்
அது திரைப்படமோ இல்லை
கார்ட்டூனோ  ஏதோ ஒரு காரணம்
சொல்லி எதிர்த்துக் கொண்டும் தடை செய்து கொண்டும்
இருந்தால்  அந்த நாட்டில் இருப்பது ஜனநாயக ஆட்சியாக
இருக்க முடியாது. தாலிபன் ஆட்சியாக இருக்கும். 
அதற்கு இவர்கள் இடம் தரக்கூடாது.  


ஆனால் இந்த எதிர்ப்பின் மூலம் இஸ்லாமியர்களை
எதிர்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள
பலருக்கு தீனி கிடைத்து விட்டது.

இதனை இஸ்லாமிய அமைப்புக்கள் 
தவிர்த்திருக்க வேண்டும். 

படம் வெளி வரட்டும். அதன் பின்பு அதை விமர்சிப்போம்
என்ற நிலைதான் சரியாக இருக்கும். அதனை விடுத்து
நீதிமன்ற தடை நீங்கினாலும் திரையிட விட மாட்டோம்
என்பது  தவறான அணுகுமுறை.
 


4 comments:

  1. வரும் முன் காப்பதே சிறந்தது

    ReplyDelete
  2. எதிர்ப்பதற்கு மாறாக, நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க
    மாட்டோம்.

    What do you mean by this?

    ReplyDelete
  3. தீவிரவாதக் குழு பற்றிய ஒரு திரைப்படத்தை
    தடை செய்ய வேண்டும் என்று கோருவது
    அந்த நோக்கத்தின் மீதே கேள்விகளை
    எழுப்புகிறது. தாலிபன் இயக்கமோ
    அல்லது வேறு எந்த தீவிரவாத இயக்கத்திற்கோ
    நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்பதையும்
    வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

    இந்தியாவில் வாழும் பெரும்பாலான
    இஸ்லாமியர்கள் தீவிரவாதச் செயல்களுக்கு
    எதிரானவர்கள்தான். இதில் நான் உறுதியாக
    உள்ளேன்.


    ReplyDelete
  4. //ஒரு அரசு தனது சுயநலத்திற்காக தீவிரவாதத்தை
    ஊக்குவித்தால் அதுவே பெரிய விலை கொடுக்க
    வேண்டியிருக்கும் என்பதற்கு இந்திரா காந்தியின்
    கொலையும் இரட்டை கோபுர தகர்ப்பும் நல்ல
    படிப்பினைகள்//
    உண்மை.
    //இந்தியாவில் வாழும் பெரும்பாலான
    இஸ்லாமியர்கள் தீவிரவாதச் செயல்களுக்கு
    எதிரானவர்கள்தான். இதில் நான் உறுதியாக
    உள்ளேன்//
    உங்கள் உறுதி நல்லெண்ண அடிப்படையில் உருவானது மட்டுமே. அதற்கான ஆதாரம் அறிகுறி எதுவுமே கிடையாது.

    ReplyDelete