நேற்று சென்னை
புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். கடந்தாண்டு தவிர அநேகமாக ஒரு ஏழாண்டுகளாக
வருடம் தவறாமல் சென்று வருகிறேன். கணிசமான நேரத்தையும் பணத்தையும் அங்கே
செலவழிப்பேன். புத்தகக் கண்காட்சி என்பது இது நாள் வரை ஒரு சுகமான அனுபவமாகவே
இருந்திருக்கிறது.
ஆனால் நேற்றோ?
இப்படி வந்து
மாட்டிக் கொண்டோமே என்ற அவஸ்தைதான்.
நான் செய்த
இரண்டு பெரும் தவறுகள்
ஒன்று ஞாயிறு
விடுமுறை நாள் அன்று வந்தது. ஆடித் தள்ளுபடி, புத்தாண்டு தள்ளுபடிக் காலங்களில்
டி.நகர் ஜவுளிக்கடைகளுக்கு வருவது போல புத்தகக் கண்காட்சிக்கும் கூட்டம் வருவது
என்பது நல்லதுதான். மகிழ்ச்சிக்குரியதுதான். என்ன அந்த அளவு கூட்டம் வந்ததால் எந்த
ஸ்டாலுக்குள்ளும் நுழைய முடியவில்லை.
அதே போல சென்ற
நேரம் இரண்டாவது தவறு, மாலை ஐந்து மணிக்கு உள்ளே நுழைந்தது. கூட்டம் உச்சகட்டமாக
இருந்த நேரம் அது.
ஆனால் இந்த
இரண்டு தவறுகள் என்னுடையதாக இருந்தாலும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்
அமைப்பாளர்கள்தான்.
கடந்தாண்டு
வரை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருந்த பள்ளி மைதானத்தில் இவ்வளவு நெரிசல்
இல்லை. விஸ்தாரமான இடம் இருந்தது.
காம்பவுண்டிலிருந்து
கண்காட்சி அரங்கிற்குள் வருவதற்குள்ளேயே உடம்பின் சக்திகள் எல்லாம் போய்
விடுகிறது. அடுத்து உள்ளே ஸ்டால்களுக்கு அளிக்கப்பட்ட இடம் என்பதும் குறைந்து
போயுள்ளது. அதனால் உள்ளே நெருக்கடி.
அதே போல
பாதைகளும் உள்ளே மிகவும் குறுகலாகி விட்டது. அதனால் அடுத்தவர் மீது மோதாமல்
நடப்பதிலே கவனம் செலுத்தி நாம் பார்க்க வேண்டிய ஸ்டாலை தவற விட்டு விடுகிறோம்.
காட்சி
ஊடகங்கள் வாசகனின் பெரும்பான்மையான நேரத்தை களவாடிக் கொண்டு விட்டது. அப்படி
இருக்கும் போதும் ஒரு தேடலோடு வருகிற வாசகனை அவஸ்தைப்படுத்தினால் அவன் எப்படி மறு
முறை வருவான்?
இது இனி
தேறாது என்று முடிவெடுத்து ஆறே முக்காலுக்கு வெளியே கிளம்பி விட்டேன். இந்த ஜன
சமுத்திரத்திற்கு மத்தியில் நீச்சலடித்து காம்பவுண்டை வந்து அடைய இருபது நிமிடங்கள் ஆனது. பார்க்கிங்கில்
இருந்து எனது வாகன ஓட்டுனர் வெளியே வர இன்னும் ஒரு முப்பது நிமிடங்கள் ஆனது.
மொத்தத்தில்
கால் வலி மட்டுமே மிச்சம்.
பொதுவாக
புத்தகக் கண்காட்சி போய் வந்த பின்பு இரவு எத்தனை மணி ஆனாலும் வாங்கிய புத்தகங்களை
ஒரு மணி நேரமாவது புரட்டிக் கொண்டிருப்பேன். ஆனால் நேற்றோ வீட்டை அடைந்த அடுத்த
நிமிடமே உறங்கி விட்டேன்.
இது போன்ற
அனுபவம்தான் எல்லோருக்கும் கிடைத்திருக்கும்.
புத்தகக்
கண்காட்சி அமைப்பாளர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment