Wednesday, January 23, 2013

பாலியல் கொடுமைகளை இந்திய ராணுவம் தூண்டுகிறதா?





அதிர்ச்சியளிக்கிற தகவல் இது. பாலியல் கொடுமை செய்த ஒரு ராணுவ வீரர் ஒருவருக்கு ராணுவ நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.

ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் நிரூபிக்கப்பட்ட அந்த குற்றத்திற்கு மிக மிக கடுமையான தண்டனை கொடுத்து தர்மத்தையும் நியாயத்தையும் அந்த ராணுவ நீதிமன்றம் நிலை நாட்டியுள்ளது.

என்ன தண்டனை தெரியுமா?

மூன்று மாத சிறை மற்றும் ஒரு பதவி இறக்கம். லான்ஸ் நாயக் என்ற பதவியிலிருந்து சிப்பாயாக பதவி இறக்கம் செய்துள்ளது.

மரண தண்டனை, ஆண்மை நீக்கம், ஆயுட்காலம் வரை சிறை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் வெறும் மூன்று மாத சிறை என்பதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு என்ன செய்தி சொல்கிறது இந்த தண்டனை?

கவலைப்படாதே சகோதரா, உனக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று சொல்லாமல் சொல்லி உற்சாகப் படுத்துகின்றதா?

சாதாரணமாக அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஏதாவது குற்றத்திற்காக ( அது பேனா திருடிய குற்றமாகக் கூட இருக்கலாம்) பதினைந்து நாட்கள் சிறைத்தண்டனை பெற்றாலே அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

ஆனால் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருக்க வேண்டிய ராணுவத்தில் மோசமான ஒழுக்கக் கேடான ஒரு குற்றத்தை செய்த நபருக்கோ வெறும் பணியிறக்கம் மட்டும்தான் என்பது எவ்வளவு மோசமான விஷயம்?

ராணுவ சிறப்புச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பெண்களை பாலியல் கொடுமைகள் செய்கின்றனர் என்பதுதான் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள். ராணுவத்தைக் கண்டித்து மணிப்பூர் மாநிலப் பெண்கள் இம்பால் நகரில் உடைகளைத் துறந்து போராட்டம் நடத்தக் கூடிய அளவிற்கு மன ரீதியாக பாதிப்படைந்துள்ளனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தித்தானே ஐரோம் ஷர்மிளா பல்லாண்டுகளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்!

இப்படிப்பட்ட நிலையில் ராணுவம் மீதுள்ள மரியாதையை இது போன்ற தீர்ப்புக்கள் இழக்கச் செய்யும்.

இந்த தண்டனையே எதற்காக கொடுத்துள்ளார்கள் என்று எனக்கு தோன்றுகிற சந்தேகம் என்ன தெரியுமா?

“ ஆதாரங்கள், சாட்சியங்கள் என்று மாட்டிக் கொள்ளக் கூடிய விதத்திலா குற்றம் செய்வாய். இதைப் பார்த்தாவது மற்றவர்கள் புத்திசாலித்தனமாக, மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்யுங்கள்”

என்பதுதான் இந்த தண்டனையின் செய்தியாக நான் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment