Friday, November 21, 2025

REASONABLE TIME தான் பிரச்சினை ஜட்ஜய்யா . . .

 


எப்போதாவது நீதித்துறை மீது சின்னதாக மொட்டு விடுவது போல நம்பிக்கை மலர்ந்தால், உடனடியாக நம்மை செருப்பால் அடிப்பது போல "உன்னை எவன்டா எங்களை நம்பச் சொன்னது?" என்று ஒரு தீர்ப்பு கொடுத்து விடுவார்கள் நம்ம ஜட்ஜய்யாக்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு அரசு சட்ட மன்றத்தில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமலோ அல்லது மறுக்காமலோ, திருப்பி அனுப்பாமலோ நிலுவையிலேயே வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் குடியரசுத் தலைவரோ, ஆளுனரோ முடிவெடுத்தே ஆக வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரை நிர்ணயிக்க முடியுமா என்று ஒன்றிய அரசு, ஜனாதிபதி மூலமாக உச்ச நீதிமன்றத்தை அணுக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

எந்த ஒரு மசோதா மீதும் முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனருக்கோ காலவரை எல்லாம் நிர்ணயிக்க முடியாது என்பதுதான் அத்தீர்ப்பு.

இதன் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மசோதாவை நியமனம் மூலம் பதவிக்கு வரும் ஆளுனர் தன் இஷடத்திற்கு இழுத்தடிக்க ராஜபாட்டை போட்டுக் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜனநாயக முறைப்படி எடுக்கப்பட்ட ஒரு முடிவை ஆளுனர் எச்.ராசாவின் ஹைகோர்ட்டாக கருத வழி வகுக்கப்பட்டுள்ளது.

இதிலே போனா போகுது என்று ஒரு வரி சொல்லப்பட்டுள்ளது.

ஒரு நியாயமான காலவரைக்குள் (REASONABLE TIME) க்குள்  ஆளுனர் முடிவெடுக்க  வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் ஒரு வரையறைக்குள் தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.



ஐய்யா நீதிபதிகளே, நியாயமான காலவரை என்றால் என்ன என்பதையும் நீங்க சொல்லி இருக்கலாமே! மாநில அரசுக்கு நியாயமான காலவரை என்று தோன்றும் காலவரை, ஆளுனருக்கு தோன்றாதே!

மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய பின்பும் அதனை வருடக் கணக்கில் தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி நிலுவையில் வைத்திருந்ததால்தானே, பிரச்சினை உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

முன்பு அரசியலில் ஓய்வு பெற்றவர்கள் ஆளுனர் ஆனார்கள். மோடியின் ஆட்சிக்காலத்திலோ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்யவே அயோக்கியர்களை பொறுக்கி எடுத்து ஆளுனர்களாக்குகின்றனர்.

அந்த இடையூறு அரசியலுக்கு உகந்ததாகவே நீங்கள் தீர்ப்பளித்துள்ளீர்கள், என்ன செய்ய? நீங்கள் தீர்ப்பு எழுதவில்லையே, பணி ஓய்வுக்கு பிந்தைய பதவிகளுக்கான விண்ணப்பங்களைத்தானே எழுதுகிறீர்கள்.

பிகு 1 : இது நியாயமான தீர்ப்பில்லை என்று அவர்களுக்கும் தெரிகிறது. அதனால்தான் ?????????? . கேள்விக்குறிகளுக்கான விளக்கத்தை மாலை எழுதுகிறேன்.

பிகு2 : இன்னொரு மோசமான தீர்ப்பும் தரப்பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை . . .

1 comment: