Wednesday, November 19, 2025

அனுசுயா கல்விக்காக அன்புடன் உதவி

 


சபாஷ், சரியான தீர்ப்பு  என்ற தலைப்பில் நேற்று முன் தினம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத்தலைவர் தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். படிக்காதவர்கள் மேலே உள்ள இணைப்பின் மூலம் அந்த பதிவை முதலில் படித்து விட்டு கீழே எழுதியுள்ளதை படியுங்கள். 

கடந்தாண்டு மே மாதம் நான்காம்  தேதி  அன்று எங்கள் கோட்டத்தின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மகளிர் மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. எங்கள் கோட்டத்தின் பிரத்யேக புவியியல் தன்மை காரணமாக மகளிர் மாநாடு எப்போதுமே இரண்டு பகுதிகளாக நடைபெறும். 

இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மாநாடு என்பதால் ஒரே பகுதியாக திருவண்ணாமலையில் நடத்தினோம். வெள்ளி விழா மாநாடு என்பதால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் பி.சுகந்தி, எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல மகளிர் ஒருங்கிணைப்புக்குழு இணை அமைப்பாளர் தோழர் ஆர்.எஸ்.செண்பகம் ஆகியோரை அழைத்திருந்தோம்.

மாநாடு துவங்கும் முன்பாக எங்கள் அனைத்திந்திய இணைச்செயலாளர் தோழர் கிரிஜா, என்னிடமும் அன்றைய தலைவரும் இன்றைய பொதுச்செயலாளருமான தோழர் எஸ்.பழனிராஜிடமும் ஆணவக் கொலையால் கணவரை இழந்த அனுசுயா பற்றி விவாதித்தார். அவர் தன் கல்வியை தொடர விரும்புகிறார். உங்கள் கோட்டத்தால் அவருக்கு உதவ முடியுமா என்று கேட்டார்.

கோட்டச்சங்க பொது நிதியிலிருந்து கொடுப்பதென்றால் அதிகபட்சம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரம்தான் அளிக்க முடியும். தோழர்களிடமிருந்து வசூலித்தால் கூடுதலாக அளிக்க முடியும் என்றோம். மற்ற  கோட்டச்சங்கப் பொறுப்பாளர்களோடும் விவாதித்தோம். மாநாட்டிலேயே அறைகூவல் அளிக்கலாம் என்று திட்டமிட்டோம். இதிலே ஒரு சவாலும் இருந்தது.

சர்வதேச மகளிர் தினத்தன்று அனைத்து கிளைகளிலும் நிதி திரட்டி முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லம் ஆகியவற்றுக்கு உதவி செய்வோம். 2024 ம் ஆண்டில் சமூக நல உதவியாக எங்கள் தோழர்கள் 1,87,200 ரூபாய் வரை பங்களித்திருந்தார்கள். 

அதற்குள் இன்னொரு நிதி திரட்டல் என்றால் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. தோழர்கள் மீது நம்பிக்கை இருந்தது. 

அனுசுயா சந்தித்த இன்னல்கள் குறித்து தோழர் பி.சுகந்தி பேசிய போது தோழர்கள் உறைந்து போய் அமர்ந்திருந்தார்கள். அதன் பின்பாக நான் தாராளமாக நிதி தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

புதுவை 1, வேலூர் கிளை ஆகிய இரண்டு கிளைச்சங்கங்கள் அவர்களாகவே அனைத்து தோழர்களுக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து அவர்கள் பேசும் போது கொடுத்தார்கள். மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் அப்போது உடனடியாக அளித்தது ரூபாய் 30,000. அதன் பின்பு சுற்றறிக்கை விடுத்தோம். அப்போது இன்னும் ரூபாய் 32,000 வசூலானது. எங்கள் தோழர்களின் ஈர இதயத்திற்கு சான்றாய் அவர்கள் அளித்த  அத்தொகையை அனுசுயாவிற்கு அனுப்பி வைத்தோம்.




வாழ்க்கையில் மிகப் பெரிய துயரத்தை சந்தித்தவர் அனுசுயா, கணவரை இழந்தார். அவர் உயிர் பிழைத்ததே அதிசயம். ஏராளமான காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் எதிர் கொண்டவர். அவருக்கு நாங்கள் அளித்த நிதி என்பது பெரிதே இல்லை. உங்களோடு நாங்கள் நிற்கிறோம் என்று அளித்த நம்பிக்கைதான் முக்கியம் என்று கருதுகிறேன்.

ஒரு தொழிற்சங்கத்தின் பணி அந்த நிறுவனத்தின் சுவர்களுக்குள் சுருங்கிப் போவது கிடையாதே!

No comments:

Post a Comment