Wednesday, May 1, 2013

பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்

 

 
 
நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்
இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்
முடிவிற்காக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்
திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.
இன்னும் ஒரு கிளையில் தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்
இருந்தது.

திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற
தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு
இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை
அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன்.
காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று 
விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள
பாதுகாப்பு என்றார்கள்.

கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.
என்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன்.
புதுச்சேரி, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை
நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு
எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்
தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ 
எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து
அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள்.
அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு 
பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள்
நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில்
என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை
நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எறிந்து கொண்டிருந்தது
ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர்
போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர்
வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு
எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர்
சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா
நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து
கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த
அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே
ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி
துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும்
எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம்
பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு
மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால் 
செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து
தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி
சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல் 
வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக்
கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர்
கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் 
முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து
விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார்
வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது 
பார்த்தேன். ஸ்டேசனுக்கு சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும்.
வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ
மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி 
சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு
வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும்
அரசே வெட்டி விட்டது.

பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க
வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல்
போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை
தாக்குவது என்ன போராட்ட வடிவம்?

மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.
தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற
கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா
என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில் 
ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா?
உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை
படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?

குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள்
சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும்
கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?

அசம்பாவிதம் எதுவுன் நிகழாததால் என்னால் எப்படி பதிவு
எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று
சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????

 


11 comments:

  1. Excellant post.This idots never change.
    Sivass.France

    ReplyDelete
  2. கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க
    வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல்
    போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை
    தாக்குவது என்ன போராட்ட வடிவம்?/////நியாயமான கேள்வி?

    ReplyDelete
  3. சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் கல்வி சுற்றுலா சென்ற கோவை வேளாண் பல்கலை மாணவ மாணவியர் வாகனத்துடன் கொளுத்தப்பட்டனர்… இதில் மூன்று மாணவிகள் உயிரிழந்தனர்......

    இச் சம்பவத்தை ஏற்படுத்தியவர்களையும், ஏற்பட்ட காரணத்தையும் தமிழக மக்கள், குறிப்பாக இதனை மறந்தவர்கள் நினைவு கூர்வது அவசியம்.....

    இது எந்த வகையான போராட்டம்???????

    in DMK do so manny things like this that time where are you hidden ?? are you write any post ?? in madurai dinakaran 3 people were dided in fire are worry about it ??? but one things is clear for your post its you do not like pmk

    if you do one favor direct go to in Marrakkanam ask any one people the native who live their they told you the problem happed well planed by vidduthai sirruthaikkal rowddykal.

    one think you relaised that pmk mettings gather all around tamilnadu so they think themself go back their home in safe so whey they do like the shit on the way ??

    -by Veera vanniyan

    ReplyDelete
  4. இவர்களின் ஆரம்பமே மரம் வெட்டுதலில்தானே ஆரம்பித்தது! தொட்டில் பழக்கம் விடவில்லை போலும் அப்பாவி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

    ReplyDelete
  5. வீர வன்னியன் அவர்களே, மற்றவர்கள் தவறிழைக்கும் போதும் நான் கண்டித்திருக்கிறேன், கண்டிப்பேன், என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்பாதீர்கள்.

    கடைசி பத்தியில் என்ன சொல்ல வருகின்றீர்கள்?

    நிஜமாகவே புரியல.

    ReplyDelete
  6. வீர வன்னியன் மாதிரி ஆங்கிலத்தில் எழுதினால் நன்கு எல்லோருக்கும் புரியுமே ... அதை ஏன் மற்றவர்கள் செய்வதில்லை. அவர் எழுதினதில் logic-யை விட அவர் english தான் எனக்கும் ரொம்ப பிடிச்சி போச்சி .....

    ReplyDelete
  7. அரசியல் கட்சிகள் பொது மற்றும் தனியார் சொத்துக்களை நாசம் செய்யும்போது அதற்கான நஷ்ட ஈட்டை சம்பந்தப்பட்ட கட்சித் தலைமையிடம் அரசாங்கம் வசூலிக்கவேண்டும்.

    ReplyDelete
  8. //இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில் என்னால் என்றும் மறக்க முடியாது//
    அது தாங்க ஜாதி வெறி

    ReplyDelete
  9. இவ்வாறு ஒவ்வோரு சாதியும், இனக்குழுவும், மதத்தினரும் தினமும் பொது சொத்துக்களை சேதமாக்கி , மக்களை அச்சுறுத்தி வந்தால் நாடு விளங்கிடும். ஆனால் பலரும் கருதுவது போல ஒட்டுமொத்த வன்னியர்களும் பாமகவினர் என்பது போல எழுத வேண்டாம் என நினைக்கின்றேன். உண்மையில் வன்னியர்கள்ல் 10 % கூட பாமாகவுக்கு ஆதரவா என்பதே தெரியவில்லை. நிறைய வன்னியர்கள் திமுகவுக்கே வாக்களிப்பர், பலர் கலப்பு மணமும் செய்து வருகின்றனர். ஆக ! இது ஒட்டு மொத்த வன்னியர்களின் வெறித்தனம் என கருத வேண்டுவதில்லை.

    ReplyDelete
  10. உங்கள் பயம் எனக்கு நன்றாகப் புரிகிறது...

    பஸ்ஸ கொழுத்துங்கடா!

    ReplyDelete
  11. எதுவும் தமக்கு நேராதவரை வெறும் "ஐயோ பாவம் மட்டும் தான் " அதுவே தமக்கு நேர்ந்தால் "மிருகமாகவே மாறுபவர்கள் பலர்" ஆனால் தாங்கள், நிதானத்துடன் தங்களது நியாயமான கேள்வியை பதிவாக்கியதற்கு பாராட்டுக்கள்.

    ஒவ்வொரு சாதியிலயும் இந்த மாதிரி 10% வீனா போனவர்கள் இருந்தால் நம்ம நாட்டை வேற யாரும் ஒன்னும் செய்ய முடியாது!!

    (அந்நிய முதலிடு, எல்லையில் சீனா நில ஆக்கிரமிப்பு இப்படி கொஞ்சம் கொஞ்சமா போனா எப்படி..!!)

    ReplyDelete