ஏன் இந்த புலம்பல்கள்?
காத்து நிற்கும் கடமை இருப்பதால்
காவல்துறை என்று பெயர் அதற்கு.
மக்களை தாக்கும் துறையாய்
மாறி நிற்கிறது.
ஊழல்களை கண்டுபிடித்து
உள்ளே தள்ளவே ஒரு துறை,
ஊழல் செய்தவனிடம் அது
உத்தரவு வாங்கும் கொடுமை இங்கே,
மக்களைப் பார்க்காமல்
அவர் குரல் கேட்காமல்
மந்திரியானவருக்கு
பிரதம மந்திரியானவருக்கு
மக்களைப் பற்றி என்ன புரியும்?
விளையாட்டில் சூது போய்,
சூதே விளையாட்டாய்
மாறிப் போனது.
மைதான ஆட்டத்திற்கு
ஆரவாரம் அதிகமா?
வெளியில் ஆடும் ஆட்டத்திற்கு
ஆரவாரம் அதிகமா?
விளையாட்டைப் பார்ப்பதை விட
உற்சாகம் அளிக்கவென்று
நாடு கடந்து வந்தவர்களை
பார்க்கத்தானே ஆர்வம் அதிகம்.
நாடகம்தான் நடக்கிறது.
நன்றாய்த்தான் நடிக்கிறார்கள்
என்று நன்றாய் அறிந்து கொண்டும்
வாக்களிக்க நின்றாய் நீ!
புகார் கொடுக்க போனாய் நீ!
முட்டி மோதி சீட்டு வாங்கி
ஆட்டம் பார்க்கப் போனாய் நீ!
நீயாக ஏமாந்து விட்டு
ஏமாற்று உலகம் இது,
ஏமாற்றும் அரசு இது
என்றெல்லாம்
ஏன் இந்த புலம்பல்கள்?
நாடகம்தான் நடக்கிறது.
ReplyDeleteநன்றாய்த்தான் நடிக்கிறார்கள்//உண்மையே நாமும் அதில் வேடதாரிதான்