இசையுலகை ஆண்ட
இன்னொரு
இன்னிசை வேந்தனும்
இனி நம்மிடம் இல்லை.
பாசத்தையும் நேசத்தையும்
காதலையும் கம்பீரத்தையும்
தன் குரலால் சொல்லிக்கொடுத்த
டி.எம்.சவுந்தரராஜன் இப்போது இல்லை.
இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர் பாட்டு
என்பது டி.எம்.எஸ் பாடினால் மட்டுமே
தனியாக தெரியும்.
பாட்டும் நானே என்று பாடிய போது
பாடல் கற்றுக் கொள்ள தோன்றியது.
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
என்ற போது பாசம் வந்தது.
முத்துக்களோ கண்கள் என்று குழைந்த போது
காதல் உணர்வு நம்மையும் தொட்டு விட்டு போகும்.
கண்ணெதிரே தோன்றினாள் என்று அவர் பாடும்போது
இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று
நமக்கு பதைக்கும்.
மதுரையில் பிறந்த மீன் கொடியை என்று
கவிஞரின் பாட்டு என்னமோ கதாநாயகியை
வர்ணித்தாலும் டி.எம்.எஸ் நம்மை ஒரு
தமிழக உலாவிற்கே கூட்டிப் போய் விடுவார்.
எரிமலை எப்படி பொறுக்கும் என்று
கொதிக்கும்போது விலங்குகளை ஒடிக்க கை உயரும்.
யாரை நம்பி நான் பிறந்தேன் என்றாலோ
நமக்கும் வெறுப்பு வரும்.
அச்சம் என்பது மடமையடா என்ற போது
வீரம் பிறக்கும்.
என்னடி ராக்கம்மா மூலமா கிண்டல் செய்ய
கற்றுக் கொடுத்தார்.
அவரிடம் இருந்த உச்சரிப்பு சுத்தம் வேறு
எவரிடமும் கிடையாது.
ஆயிரமாயிரம் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்
அவர்களுக்கு என்றும் மரணமில்லை.
தமிழ் இருக்கும் வரை, இசை இருக்கும் வரை
நீங்களும் நிலைத்திருப்பீர்கள்.
No comments:
Post a Comment