Tuesday, May 21, 2013

கிரிக்கெட் : இனியும் அது கனவான்கள் ஆட்டமல்ல.
உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிற விளையாட்டாக இருந்தாலும் அதற்கு கனவான்களின்  ஆட்டம் ( Gentle Men’s Game ) என்ற பெயருண்டு. நாகரீகம் அற்ற ஏதாவதோ அல்லது சற்று கண்ணியக் குறைவாகவோ ஏதாவது   நிகழ்ந்தால் “ இது கிரிக்கெட் அல்ல ( It is Not Cricket ) “ என்று சொல்லக் கூடிய அளவிற்கான விளையாட்டாக கிரிக்கெட் இருந்தது. இவையெல்லாம் பொய்யாய் பழங்கதையாகி வெகு நாட்கள் ஆகி விட்டது. பழைய பெருங்காய டப்பாவின் வாசம் கூட மறைந்து விட்டது.

தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு, அதற்காக விளம்பரதாரர்கள் கொட்டிக் கிடக்கும் ரூபாய்கள் என்று எப்போது வணிகம் நுழைந்ததோ அப்போதிலிருந்தே சீர்குலைவு என்பதும் தொடங்கியது. கிரிக்கெட் விளையாடுவதில் வருவதை விட விளம்பரத்தில் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகம் என்றான பின்பு, அணியில் இடம் பிடிப்பதற்கும், அதை தக்க வைப்பதற்கும்  திறமை என்பதை விட மற்ற காரணிகளே பிரதானமாக போய் விட்டது. பிராந்திய பார்வைகளும் ஒரு முக்கியக் காரணி.

உலகமயமாக்கலுக்கு பின்பு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் வெறியர்களாக ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலரை எங்களின் கடவுள் என்று வர்ணிக்கும் அளவிற்கு மோசமாக போய் விட்டது. அதனால்தான் வரி ஏய்ப்பு செய்தால்கூட அதிலென்ன தவறு என்று கேட்கும் மனப்பான்மையும் மக்களிடம் அதிகரித்துள்ளது. சூதாட்ட புகார்களில் முன்பு சிக்கியவர்கள் கூட எந்த கூச்சமும் இல்லாமல் வர்ணனையாளர்களாக மைதானங்களில் வலம் வர முடிகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளும் எப்போதும் சர்ச்சைகள் நிரம்பியது. உலக கிரிக்கெட் அமைப்பையே கட்டுப்படுத்தும் அளவிற்கு நிதி வல்லமை கொண்டது. எந்த அரசுக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட மாட்டோம் என்று ஆணவத்தோடு சொல்ல முடிகிறது.

இந்திய கிரிக்கெட்டின் சீர்குலைவு என்பது ஐ.பி.எல் போட்டிகளின் வரவிற்குப் பிறகு அதிகரித்தது. ஏதோ ஜடப் பொருட்களை ஏலம் விடுவது போல வீரர்களும் ஏலம் விடப்பட்டார்கள். இந்த ஏல முறைக்கு வீரர்களும் உடன்பட்டது ஒரு வெட்கக்கேடு. ரிலையன்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், சன் டிவி போன்ற வர்த்தக நிறுவனங்களும் திரைப்பட நடிகர்களும் உரிமையாளர்கள் ஆனார்கள். இவர்களிடமெல்லாம் என்ன நெறிமுறையை எதிர்பார்க்க முடியும்?

ஐ.பி.எல் போட்டிகள்  ஏற்படுத்தியுள்ள கலாச்சார சீர்கேடு என்பது கண்டிக்கத் தக்கது. பெண்களை இழிவுபடுத்துவது. வக்கிர சிந்தனையை பார்வையாளர்கள் நெஞ்சத்தில் உருவாக்கக் கூடியது. மாணவர்களின் கல்வியையும் நாசமாக்குகிறது. அது மட்டுமல்ல  இந்திய ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் என்ன, நாங்கள் கல்லா கட்டுவதுதான் முக்கியம் என்று ஒரு ஆண்டு போட்டிகளையே தென் ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் சென்றவர்கள்தான் இவர்கள்.

இப்போது ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. இதிலே அதிர்ச்சி அடைவதற்கான அவசியம் எதுவும் இல்லை. விளையாட்டே சூதாட்டமாக மாறி வெகு நாட்கள் ஆகி விட்டது. மூன்று வீரர்களும் ஏராளமான தரகர்களூம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறு மீன்களாகவே தோன்றுகின்றனர். ஒரே ஒரு அணியில் உள்ள வீரர்களை மட்டும் தரகர்கள் அணுகியிருப்பார்கள் என்று நம்ப முடியாது. எங்களை அணுகினார்கள், நாங்கள் மறுத்து விட்டோம் என்று சொல்லும் துணிவு இது வரை யாருக்கும் ஏற்படவில்லை. அனைவரும்  மௌனமாகவே  இருக்கின்றார்கள். ஊழல் பெருங்கடலில் இன்னும் எத்தனை திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன என்பது இன்னும் கொஞ்ச காலம் போனால் தானாக தெரிய வரும்.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும்  அவசியமான பணிகளைக் கூட தள்ளி வைத்து விட்டு தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இழைக்கப் படுகின்ற மிகப் பெரிய துரோகமாகத்தான் அந்தப் போட்டிகளின் போக்கையும் முடிவையும் யாரோ முன் கூட்டியே தீர்மானிப்பது என்பது. இந்த மிகப் பெரிய அநீதிக்கு உள்ளானாலும் தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்கிற இந்திய ரசிகனின் பலவீனத்தையே இந்த ஊழல் பேர்வழிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியாவின் ஏனைய விளையாட்டுக்களையெல்லாம் அமுக்கிய பெருமை கிரிக்கெட்டிற்கே உண்டு. அதனால்தான் ஒலிம்பிக்கில் இன்னும் ஒற்றைப் படை  பதக்கங்களையே நம்மால் பெற முடிகிறது. ஆல மரத்தின் கீழே புல்லும் முளைக்காது என்பது போல  மற்ற விளையாட்டுக்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிப்பதேயில்லை. ஊடகங்களும் மற்ற விளையாட்டுக்களை சீண்டுவதே இல்லை.

இந்த நிலைமை மாற வேண்டுமென்றால் கிரிக்கெட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும். கிரிக்கெட் வாரியம் சீரமைக்கப்பட்டு ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட வேண்டும்.  சூதாட்ட விவகாரம்  முழுமையாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை வருகின்றவரை ஐ.பி.எல் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும். அதுதான் இந்திய விளையாட்டுத்துறை முன்னேற உதவிகரமாக இருக்கும்.


No comments:

Post a Comment