Friday, February 15, 2013

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை, முன்னும் பின்னும்



(வெளிவரவுள்ள பீப்பிள் டெமாக்ரசி ஏட்டில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட தலையங்கம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தொடர்பான மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் நிலையை தெளிவுபடுத்துகிறது)









நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுள்ள நிகழ்வு ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு இந்த கேள்விகளை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துவிடக்கூடாது என்பதற்காக விரைவாக அவர் தூக்கிலிடப்பட்டார் என்று உள்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் நீண்ட நெடிய நீதி மற்றும் சட்ட நடைமுறைகள் நடந்தேறியுள்ளன. அப்சல் குருவுக்கு 2002 டிசம்பரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆகட் 2005ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அப்சல் குருவின் மனைவி 2006 அக்டோபரில் கருணை மனுத் தாக்கல் செய்தார். 2013 பிப்ரவரி 3ம் தேதி ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக கருணை மனு நிராகரிக்கப்பட்ட விவரம் தண்டனை விதிக்கப்பட்டவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ உரிய காலத்தில் தெரிவிக்கப்படவில்லை. அப்சல் குருவை அவரது குடும்பத்தினர் கடைசி நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது மற்றும் தூக்கிலிடப்படும் தேதி குறித்த விவரம் அவரது குடும்பத்தினருக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட விதமும் இரக்கமற்ற தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலமும் ஏராளமான கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வேறு சிலரும் உள்ளனர். தேவேந்தர் பால் சிங், புல்லார் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வர் பியாங்சிங் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மற் றொரு நபரான பல்வந்த் சிங்கிற்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து அம்மூவரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தூக்குதண்டனைக்கு தடையுத்தரவு பெற்றுள்ளனர்.

ஆனால் இதேபோன்று அன்றி அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டவுடனேயே அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அரசியல் காரணங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு தமிழக சட்ட மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பஞ்சாப் வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு பஞ்சாபில் உள்ள அகாலிதள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரஜோனைவை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் பந்த் நடைபெற்ற நிலையில், மத்திய அரசினால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்சல் குருவை தூக்கிலிடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளன என் றும் தனித்த முறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றுமே காஷ்மீர் மக்கள் முடிவுக்கு வந்துள்ளனர். அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்று பாஜக மற்றும் நரேந்திர மோடி எழுப்பிய குரலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செவி சாய்த்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாட்டின் இதர பகுதியினர் நடத்தப்படுவதை விட தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக காஷ்மீரிகள் கருதுகின்றனர். காஷ்மீரில் நிலவும் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கவே இது உதவும். காஷ்மீரில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு எந்தவிதமான திட்டவட்ட நடவடிக்கையையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னெடுக்காத நிலையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விதம் அந்நியமாகும் உணர்வில் மேலும் எண்ணெய் வார்ப்பதோடு பிரிவினைவாத உணர்வை தூண்டிவிடும்.

தூக்குதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது வலுவான மற்றும் சமகால பொருத் தப்பாடுடைய ஒன்றாகும். இது தொடர்பான தனது நிலையை மறுபரிசீலனை செய்வது தொடர்பான விவாதத்தில் மார்க்சிட் கம்யூனிட் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, பாஜக மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் இனவெறி அடிப்படையில் தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக ஊதிப் பெரிதாக்கி செய்யப்படும் பிரச்சாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜகவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அவர்களது பாரபட்சமான அரசியல் தளத்தையும் அவர்களது குறுகிய அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டதுமாகும்.


நன்றி - தீக்கதிர் 14.02.2013

2 comments:

  1. NO PERSON AGAINST THE INDIA WILL BE LET OUT FREE IF HE ACTS AGAINST THE COUNTRY OR OUR PEOPLE. HANGING OF TERRORISTS IS THE ONLY WAY TO PUNISH THEM. NO HINDU NO MUSLIM NO OTHER RELIGION FOR THEM. THIS IS THE WAR AGAINST INDIA. WE SHOULD SHOW OUR OTHER SIDE OF FACE. NO EXCUSE!

    ReplyDelete
  2. Mr. Shankar !

    What happenned to Arabind Rajkhowa and other leaders of Assam Militants who publicly declared their war is against India?

    ReplyDelete