Thursday, February 14, 2013

இன்று இத்தாலி, அன்று இங்கிலாந்து ஊழலில் இது பழசு கண்ணா பழசு




எங்கள் சங்க இதழ் சங்கச்சுடரில் வெளியாகும் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக எழுதியது. 

 

அகஸ்டோவெஸ்ட்லாந்து என்ற இத்தாலி கம்பெனியிடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் 370 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப் பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளி வரும் இவ்வேளையில் இது போல முன்பு ஒரு முறை வெளியான ஹெலிகாப்டர் ஊழல் நினைவுக்கு வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்லாந்து ஹெலிகாப்டர் கம்பெனி ஒரு தனியார் கம்பெனி எண்பதுகளின் மத்தியில் திவாலாகும் நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்தக் கம்பெனியை நிமிர்த்த அன்றைய இங்கிலாந்து பிரதமர் மார்க்கெரெட் தாட்சர் முயற்சி எடுக்கிறார். வெஸ்ட்லாந்து ஹெலிகாப்டர்களை வாங்கும்படி இந்தியாவை வற்புறுத்துகிறார். இங்கிலாந்து அரசு மானியம் வழங்கும் என்றும் ஆசை காட்டுகிறார்.

ஒரு பைலட்டாக சொல்கிறேன். தரத்தில் மோசமான அந்த ஹெலிகாப்டரை இலவசமாகக் கொடுத்தால் கூட வாங்க மாட்டேன் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி வீர முழக்கம் இடுகிறார். இந்த வீரம் மூன்று மாதம் மட்டுமே நீடித்தது. பவான் ஹன்ஸ் என்ற இந்திய பொதுத்துறை ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு இருபத்தி ஒன்று வெஸ்ட்லாந்து 30 என்ற ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இதற்காக இங்கிலாந்து ஓவர்சீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் மூலமாக நானூறு கோடி ரூபாய் மானியம் வழங்கியது. இது இங்கிலாந்தில் பிரச்சினையாக வெடிக்க இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

இந்தியா வாங்கிய ஹெலிகாப்டர்களில் இரண்டு ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து நொறுங்க மீதமுள்ள ஹெலிகாப்டர்கள் மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு நியமித்த ஒரு குழு அந்த  ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு லாயக்கற்றவை என்று அறிவித்தது.

பதிமூன்று வருடங்களுக்கு பின்பு இங்கிலாந்தே அத்தனை ஹெலிகாப்டர்களையும் வெறும் இரும்புக் குப்பையாக ( Scrap ) நாற்பது கோடி ரூபாய் கொடுத்து எடுத்துக் கொண்டது.

இங்கிலாந்து மானியம் கொடுத்ததால் மிகப் பெரிய இழப்பு இந்திய அரசிற்கு ஏற்படவில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனம் மட்டும் 96 கோடி ரூபாயை இழந்தது. 

வெஸ்ட்லாந்து நிறுவனத்தை பின்பு இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் வாங்கி அகஸ்டோவெஸ்ட்லாந்து என்று பெயர் மாற்றியது. அது இப்போது விற்ற ஹெலிகாப்டர்களிலும் ஊழல் நாற்றம் அடிக்கிறது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

வெஸ்ட்லாந்து ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது. அரசு தவறான முடிவெடுத்துள்ளது என்று மிகக் கடுமையாக குரலெழுப்பிய போராளி யார் தெரியுமா?

காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் செய்து இன்று திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சுரேஷ் கல்மாடி தான் அது.

1 comment:

  1. போக போக ஊழல் என்பதே மக்களுக்கு பழகி போய் விடும் போலிருக்கிறதே

    ReplyDelete