Thursday, November 8, 2012

நேரு குடும்பத்து மருமகன்களால் காங்கிரஸ் ஆட்சிக்கு என்றென்றும் வில்லங்கமே



பெரோஸ் காந்தி ஜவஹர்லால் நேருவின் மருமகன். ராபர்ட் வதேரா சோனியா காந்தியின் மருமகன். இந்த இரண்டு மருமகன்களுமே காங்கிரஸ் ஆட்சிக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியவர்கள். எப்படி என்பதில்தான் முரண்பாடு உள்ளது.

ராபர்ட் வதேரா கதை நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஐம்பது லட்சம் ரூபாய் முதலீட்டை ஐநூறு கோடியாக மூன்று ஆண்டுகளில் மாற்றிய மாயாவி. அவருக்கு சேவை செய்வதற்காகவே ஹரியானா மாநில அரசு உட்பட பலரும் உள்ளனர். இன்று குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது. ஆனால் அவரை பாதுகாப்பதற்காக ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் காங்கிரஸ் கட்சியின் தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி வருகின்றது.

பெரோஸ் காந்தியின் கதையே வேறு.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்திய மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கின்றன. பெரு முதலாளிகள் ஏமாற்றி வருகின்றார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்சூரன்ஸ்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியவர் அவர். அரசு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் போது அதைக் கண்டித்தவர் அவர். அதனால் ஜவஹர்லால் நேரு மிகவும் சங்கடப்பட்டது உண்டு.

அதே போல் எல்.ஐ.சி உருவான பின்பு அதன் நிதியை முந்த்ராவின் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளது, அதற்கு நிதியமைச்சர் துணை போயுள்ளார் என்று சுதந்திர  இந்தியாவின் முதல் ஊழலான முந்த்ரா ஊழலை அம்பலப்படுத்தியதும் பெரோஸ் காந்திதான். அதனால் அப்போதைய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

ஊழலை அம்பலப்படுத்தியதும் நேரு குடும்பத்து மருமகன்தான்.
ஊழலில் திளைப்பதும்  நேரு குடும்பத்து மருமகன்தான்.
இது நேரு குடும்பத்து சீரழிவைக் காண்பிக்கிறது.

ஊழல் புகார் வந்ததும் ராஜினாமா செய்ததும் காங்கிரஸ் அரசில்தான்.
ஊழல் புகார் வந்தாலும் பாதுகாப்பு வளையம் அளிப்பது காங்கிரஸ் அரசில்தான்.
இது காங்கிரஸ் அரசின் சீரழிவைக் காண்பிக்கிறது.

முடிக்கும் முன்பாக குஷ்வந்த்சிங் எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து.

நாடாளுமன்றத்தில் முந்த்ரா ஊழலை அம்பலப்படுத்துகையில் பெரோஸ் காந்தி தனது உரையை இவ்வாறு துவக்கினாராம்.

“ திரு டி.டி.கே எப்போதும் என்னை பிரதமரின் மடியில் உள்ள நாய்க்குட்டி என்று நக்கலடிப்பார். தான் இந்த அரசின் ஒரு முக்கியமான தூண் என்றும் அவர் தன்னை சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு நாய்க்குட்டி தூணை என்ன செய்யுமோ, அதை நான் செய்யப் போகிறேன்”

இன்று மக்களை ஆட்சியாளர்கள் தூண்களாக கருதுகிறார்களோ?


No comments:

Post a Comment