உங்களுக்கு
மட்டும் பணம் காய்க்கும் மரம் கிடைத்த மர்மம் என்ன?
மிகச்சிறந்த
பொருளாதார மேதையாக போற்றப்படுகிற இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மிக அரிய
பொருளாதரத் தத்துவம் ஒன்றை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். “ பணம் ஒன்றும்
மரத்தில் காய்க்கவில்லை “ என்பது அவரது கண்டுபிடிப்பு. மக்களை கசக்கிப் பிழிந்து
அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற மோசமான சீர்திருத்த முடிவுகளை நியாயப் படுத்த
அவர் உதிர்த்த பொன் முத்து இந்த தத்துவம்.
மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டுமானால் பணம் ஒன்றும் மரத்தில்
காய்க்கவில்லை என்று கூறுகிறார். இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகளை அன்னியருக்கு
அகலத் திறந்து விட இந்த வாதத்தை முன்வைக்கிறார். டீசல் விலையை உயர்த்தவும்
மானியத்துடனான சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் பணம்
மரத்தில் காய்க்கவில்லை என்கிறார்.
அவர்
பொருளாதார மேதை. பொருளாதாரம் அறியாத சாமானியனுக்கு எழுகிற ஏராளமான கேள்விகளுக்கு
அவரோ அல்லது அவரைச் சேர்ந்த மற்ற பொருளாதாரப் புலிகளான ப.சிதம்பரமோ மாண்டெக் சிங்
அலுவாலியாவோ பதிலளிப்பார்களா?
இப்படி
எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்தினால் அதை வாங்குவதற்கு மக்களிடம் பணம்
எங்கே இருக்கிறது? அவர்கள் மட்டும் பணம் காய்க்கும் மரம் வைத்துள்ளார்களா என்று
கேள்வி கேட்டால் அது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. அதனால் உங்களுக்கு புரிவது
போலவே சில கேள்விகளை கேட்கிறோம்.
ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருபத்தி
ஒன்பது லட்சம் ரூபாய் அரசு கஜானாவில் இருந்து செலவு செய்தீர்களே, அந்தப் பணம் எந்த
மரத்திலிருந்து காய்த்தது?
திட்டக்
கமிஷன் அலுவலகத்தில் மாண்டெக்சிங் அலுவாலியாவின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக
மட்டும் முப்பத்தி ஐந்து லட்சம் ரூபாய்க்கு நவீன கழிப்பறை கட்டப்பட்டதே,
திட்டக்கமிஷன் அலுவலக வளாகமான யோஜனா பவனில் பணம் காய்க்கும் மரம் ஏதாவது
வளர்க்கப்பட்டுள்ளதா?
இந்தியாவின்
விளையாடுத் திறனை மேம்படுத்த காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டதாக நாம்
நினைத்தோம். ஏராளமானவர்களின் கையிருப்புதான் மேம்பட்டது. ஊழலிலே புரண்ட இருபத்தி
ஐந்து லட்சம் கோடி ரூபாய் எந்த மரத்தில் விளைந்தது?
கார்கில்
வீரர்கள் பெயரில் பாஜக கூட்டணி மட்டும்தான் ஊழல் செய்வார்களா, எங்களுக்கு அந்த
தகுதி கிடையாதா என்று மகாராஷ்டிர மாநில அரசியல்வாதிகள் ஆதர்ஷ் குடியிருப்பில்
அற்பத் தொகையில் வீடுகள் பெற்றுக் கொண்டார்களே, மரத்தில் காய்த்த பணம்
என்பதால்தான் இந்த ஊழலை உங்கள் அரசு அனுமதித்ததா?
வான்
வெளியில் ஸ்பெக்ட்ரம் , பூமிக்கடியில் நிலக்கரி, இந்த இரண்டிலுமாக சேர்த்து தேசம்
இழந்தது மூன்று லட்சத்து அறுபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய். மரத்தில் காய்க்கும்
பணம் எதற்கு அரசு கஜானாவின் இடத்தை அடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தானே அது
முதலாளிகளிடமே இருக்கட்டும் என்று முடிவெடுத்தீர்கள்?
உங்கள்
கட்சித் தலைவியின் மருமகன் ஐம்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அது மூன்று,
நான்காண்டுகளிலேயே ஐநூறு கோடி ரூபாயாக பெருகின்றது. உங்கள் மரத்திற்கு மாயாஜால
வித்தைகள் கூட தெரியுமா என்ன?
நிறுவன
வரி, சொத்து வரி, இதர வரி என்று எத்தனையோ பெயர்களில் உங்கள் பட்ஜெட்டுக்களில்
முதலாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வாரி வாரி வழங்குகின்றீர்களே, அதற்கெல்லாம் நிதி உங்களுக்கு எந்த
மரத்திலிருந்து கிடைக்கிறது?
இப்போது
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த முடிவு
செய்துள்ளீர்கள். பென்ஷன் துறையிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கப் போவதாக
அறிவித்துள்ளீர்கள். இந்திய மக்களின் சேமிப்பை பன்னாட்டுக் கம்பெனிகள்
கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு இது.
இந்திய
மக்கள் தங்களது கடுமையான உழைப்பால் சேமித்த பணம் இல்லையா இது? அது பாதுகாப்பாக
இருக்க வேண்டும் என்று அவர்களை கருதுவது கண்டு பாய்கிறீர்களே, அது ஏன்? இந்தப்
பணமும் கூட மரத்தில் காய்க்கும் பணம் என்ற எண்ணமா? அதனால்தான் அது எக்கேடு
கெட்டால் என்ன என்று அலட்சியமாக உள்ளீர்களா?
இந்திய
மக்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், பணம் காய்க்கும் மரம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவர்களை துச்சமென மதிக்கும் துர்மதியாளர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கும்
உணர்வு உண்டு, கோபம் உண்டு. அப்போது நீங்கள் மட்டுமல்ல உங்களது பணம் காய்க்கும்
மரங்களும் கூட சாம்பலாகி விடும்.
எங்களது
வேலூர் கோட்ட இதழ் சங்கச்சுடர் அக்டோபர் இதழிற்காக எழுதப்பட்டது.
//மிகச்சிறந்த பொருளாதார மேதையாக போற்றப்படுகிற//
ReplyDeleteManmohan is an overrated economist and underrated politician - Yashwant Sinha, former Finance Minister of India
இதை விட அழகாக யாரால் சொல்ல முடியும்?