Monday, April 11, 2011

மாற்றம் தேவை என்பது காலத்தின் குரல்


இந்த  பக்கத்தை  நீங்கள்  படிக்கும்  நேரம் ஏற்கனவே  குறைவாக உள்ள தேர்தல் பிரச்சார  ஆரவாரங்கள்  முழுமையாக  ஓய்ந்து போயிருக்கும். 
வாக்குச்சாவடியை நோக்கி  நாம்  செல்லத் தயாராகிக்கொண்டிருப்போம். 
ஐந்தாண்டுகளாக  நம்மை  ஆண்டவர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து 
பார்த்து  எதிர்காலத்தில்   யார் ஆட்சி செய்ய வேண்டும்  என்பதை  நிர்ணயம் செய்கின்ற நேரம் இது.  மாற்றத்தை  உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை  உணர வேண்டிய நேரமும் இதுதான். 

கடந்த ஐந்தாண்டுகளில்  தமிழகம்  எத்திசை வழியில் சென்றது  என்பதை 
சற்று  ஆராய்வோம். 

விலைவாசி உயர்வு  என்பது  அனைத்து மக்களையும்   மிகக் கடுமையாக
தாக்கிய ஒரு பிரச்சினை.  மத்தியரசும்  அதைப்பற்றிக் கவலைப்     படவில்லை.  மாநிலங்கள் மீது பழி போட்டு மத்தியரசு தப்பிக்கப் பார்த்தது.  மாநில சுயாட்சி கோரிக்கையை  வடிவமைத்ததாக பெருமைப் பட்டுக்கொள்ளும்  கட்சியோ  மத்தியஅரசின் அடாவடித்தனம் பற்றியும் 
வாய்திறக்கவில்லை. பதுக்கலை சட்டபூர்வமாக்கிய  முன்பேர ஊக வணிகம் பற்றியும்  கண்டு கொள்ளவில்லை.  நியாய விலைக்கடைகளில் 
அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு  கொடுக்கப்பட்டாலும்  அதே அளவு அரிசி 
கடத்தப்பட்டதும்  நாம் கண்ட காட்சிகள்.  

தடுமாற்றங்களின்  அரசாகவே  தமிழக அரசு திகழ்ந்தது.  மதவெறியர்கள் உருவாக்கிய கூச்சலில்   வட மாநில வாக்குகளின் அறுவடைக்காக காங்கிரஸ் அரசு, தமிழர்களின் கனவான  சேது சமுத்திரத்திட்டத்தை முடக்கியது. கோடிக்கணக்கான ரூபாய்  கடல் நீரில் மண்ணோடு மண்ணாய்  கரைந்து போனது. ஆனால்  சேது சமுத்திர நாயகன் என்று 
பெயர் சூட்டிக்கொண்டவர்களின் ஆட்சியோ  மத்தியசின் அக்கிரமத்திற்கு மௌன சாட்சியாகவே  இருந்தது.

கல்வி வியாபாரிகளின் பகற்கொள்ளையை கட்டுப்படுத்த   வந்த நீதியரசர் கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரை  பெற்றோர்  நெஞ்சில்  பால் வார்த்தது. ஆனால் அதன்  அமுலாக்கத்திற்கு  எதிரான  நீதிமன்றத் தடைக்கு  எதிராக துரும்பை கிள்ளிப்போட  அரசு  தயாராக இல்லை. பள்ளிக் கல்வியில்  நடக்கும்  கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியாத 
அரசால்  உயர் கல்வியில் நடக்கும் கொள்ளைகளை என்ன செய்ய முடியும்?  அதிலும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை  நடத்துவது  அமைச்சர் பெருமக்களாகவே இருக்கும் போது ! 

தமிழகம் முழுதுமே  கடுமையான மின்சார நெருக்கடியில் தவிக்கும் 
வேளையில், தண்ணீர்க் குடங்களோடு  பெண்கள் வீதிகளில் அலையும் 
நேரத்தில்  தடையில்லா மின்சாரம், தடையில்லா தண்ணீர், வரிச்சலுகை, சொற்ப விலைக்கு நிலம்  என்று  அனைத்து வசதிகளையும் பன்னாட்டு நிறுவனங்கள்  அனுபவிக்கின்றன.  தமிழக மக்களின்  வியர்வைத் துளியில்  இத்தனை  சுகங்களை  அனுபவிக்கிற  இப்பன்னாட்டு நிறுவனங்கள்   தனது தொழிலாளர்களை  சுரண்டுவது, சட்ட ரீதியான உரிமைகளை  மறுப்பது, உரிமைகளுக்காக போராடினால் பழி வாங்குவது, காவல்துறை கொண்டு  அடக்குமுறைக்கு  உட்படுத்துவது   போன்ற தொழிலாளர் விரோத அணுகுமுறையைத்தான்  தனது பரிசாக அளித்தது. 
பன்னாட்டுக் கம்பெனிகள் வீசிய எலும்புத்துண்டுகள்  தமிழக அரசை தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையை  ஏவ வைத்தது. தொழிலாளர் நலத்துறை  என்ற துறையே முற்றிலுமாக முடங்கிப்போன 
காலம் இது.  தமிழக அரசும் தன்  பங்கிற்கு  சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள்,  அரசு ஊழியர்கள் மீது தனது இரும்புக்கரங்களைப் 
பிரயோகித்தது.  

சமூக அவலமாக தொடரும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு  எதிராக 
ஒடுக்கப்பட்ட மக்களும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 
பல்வேறு களங்களில் போராடுகின்றபோது  சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டிய அரசோ, ஆதிக்க சக்திகளுக்கு வால் பிடித்து நின்றது, இன்னமும் நிற்கிறது. தலித் மக்களின் காவலன், சம்பந்தி என்பதெல்லாம் 
வெறும் வாய்ச்சொல்தான் என்பது அம்பலமாகி விட்ட நேரம் இது. 

இலவசத்திட்டங்கள்  தங்களின் சாதனைகள்  என்று  சொல்லிக்கொள்கிறது. ஆனால் அத்தனைக்கும் பின்னாலே  ஆட்சியாளர்கள் குடும்பத்திற்கு  ஆதாயம் உள்ளது  என்பது கசப்பான ஒரு உண்மை. ஆட்சியாளர்களின் குடும்பத்தின்  ஆக்டோபஸ் கரங்கள்  அனைத்து  துறைகளையும்  ஆக்கிரமித்து விட்டது என்பது மேலும் கசப்பான  இன்னொரு உண்மை. 

உலக அளவில்  ஊழலில்  சிகரம் கண்டது மகத்தான சாதனையல்லவா? தமிழகமே தலைகுனிந்தல்லவா நிற்கிறது? மாற்றம் வரவில்லை என்றால்   என்ன ஆகும்?  ஊழல் செய்தவர்களுக்கு  மக்களே அங்கீகாரம் 
அளித்தது போல் ஆகாதா?  

தமிழகத்தின்  உடனடித்தேவை  ஆட்சி மாற்றம். இந்த மாற்றம் தற்போது 
ஆட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சிக்கு வரப்போகின்றவர்களுக்கும்  ஒரு நல்ல பாடமாக அமையும். மக்களுக்கு 
எதிராக  செயல்படுபவர்களை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பது புதிதாக வருபவர்களுக்கும்  ஒரு எச்சரிக்கையாக அமையும்.  என்றென்றும்  நம்மோடு  இணைந்து நிற்கிற  இடதுசாரிகள்  இணைந்துள்ள  கூட்டணிக்கு  ஆதரவளிக்க வேண்டியது  நமது கடமை


ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம். மாற்றத்தை உருவாக்குவோம்.   


எங்கள் கோட்டச்சங்க  மாத இதழான 
சங்கச்சுடர்  ஏப்ரல்  மாத இதழிற்காக
எழுதப்பட்டது3 comments:

  1. மாற்றம் கட்டாயம் வேண்டும்தான்,ஆனால் மனதைத்தொட்டுச் சொல்லுங்கள் அந்த மாற்றத்தால் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு குறை நிவர்த்தி செய்யப்படுமா! ஒரு மாற்றம் வேண்டும் என்றுதானே இதை கொண்டுவந்தோம்,என்னவானது.மறுபடியும் மாற்றம் தேவை என குமுறுகிறோம்.தேவை மாற்றம் அல்ல நல்ல ஒரு தலைவன். இங்கே நம் முன் நிற்பவர்கள் எல்லாம் உருவாக்கப்பட்டத் தலைவர்கள்.தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை,உருவாகிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு தலைவனுக்காக காலம் காத்திருக்கிறது.

    ReplyDelete
  2. amma sonnangaley undi kulikial nu andha communista?

    ReplyDelete
  3. oru velai congress dmk il irundhu veliyeri admk vodu poi irundhal... communist dmk vandhiruparkal... appo unga post eppdi irukum yosichen.. siripu varudhu

    ReplyDelete