Friday, April 8, 2011

எங்கே செல்லும் இந்த பாதை ?

இந்த பாடல்   நேற்று முதல்    மனதில் ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.  சர்வதேச  மகளிர் தினத்தை  ஒட்டி  எங்கள் சங்கத்தின் மகளிர் துணைக்குழு  ஏதேனும் ஒரு சமூக நல உதவி செய்வது வழக்கம்.  எங்கள் கோட்டம் அல்லது தென் மண்டலம்  என்று மட்டுமல்ல, நாடு முழுதுமே  இது போன்றதொரு நடவடிக்கை  கண்டிப்பாக  இருக்கும்.  இந்த வருடம்  பல கிளைகளில் சர்வ தேச மகளிர் தினத்தன்றே  இப்பணி நிறைவு பெற்று விட்டது. வேலூர் மையத்தில் மட்டும்  இப்பணிக்கான நிதி வசூல் நிறைவு பெற்றிருந்தாலும் உதவி அளித்தல் என்பது மட்டும் ஏதோதோ காரணத்தால்  தள்ளிக்கொண்டே போனது. 

இதற்கு மேலும் தாமதிக்கக்கூடாது  என்று முடிவு செய்து  நேற்று   அப்பணியை  மேற்கொண்டோம்.  அன்னை தெரசா நடத்திய மிஷன் 
ஆப் சாரிட்டிசின்  கிளை வேலூரில்  உள்ளது. அந்த அமைப்பு மன நலம்
குன்றிய பெண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகின்றது. 
அவர்களுக்கு தேவையான சமையல், மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு  சென்றோம். நான்கு மகளிர் தோழர்களால் மட்டுமே 
வர முடிந்தது. 

கிட்டத்தட்ட எண்பது பெண்கள்  அந்த விடுதியில்  உள்ளனர், மன நலம் 
குன்றியவர்களும், மன நிலை பாதிக்கப்பட்ட  பெண்கள் மட்டுமே  
உள்ளனர்.  பெரும்பாலும்  குடும்பத்தால்  கைவிடப்பட்டவர்கள். 
பத்து வயதுப் பெண் முதல் எண்பது  வயது  மூதாட்டி  வரை உள்ளனர். 
அரசு ஊழியராக இருந்து மன நலம் பாதிக்கப்பட்டவரும்  உள்ளார். அரசு
ஊழியரான கணவரால் கைவிடப்பட்டவரும் உள்ளார். 


அந்த இல்லத்திற்கு செல்கையில்  இனிப்புக்களும் காரமும் வாங்கிச்சென்றோம். சிலரால்  அதை சரியாக  சாப்பிட முடியாவிட்டாலும்  அது தங்களுக்கு  கிடைக்க வேண்டும் என்பதில் 
குறியாக இருந்தார்கள். 

அந்த இல்லத்தில்  நாங்கள்  வியந்தது பல உண்டு.  

இல்லத்துவாசிகள்   மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக  இருந்த போதும் 
சுத்தமாக  பராமரிக்கப்பட்டு  இருந்தார்கள். 

சமையலறை  உட்பட  அந்த இல்லம் முழுதுமே  சுத்தமாக, ஆரோக்கியமாக  இருந்தது. 


இல்லத்து சகோதரிகள்  சொல்வதை அப்படியே  கேட்கக் கூடியவர்களாக
இருந்தார்கள். ( இல்லத்திற்கு  வருகையில் மூர்க்கத்தனமாக  பலரும் 
இருந்திருக்கிறார்கள்  என்ற தகவலை  பொறுப்பாளர் பகிர்ந்து கொண்டார்)

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  இந்த இல்லத்திற்கு  ஏதேனும் உதவி
செய்ய வேண்டும்  என்ற உணர்வோடு  திரும்பி வந்தோம். 



 


 


 


No comments:

Post a Comment