Tuesday, April 12, 2011

தமிழகத்தை பாதுகாக்க இதுதான் இறுதி வாய்ப்பு

நாளை  தேர்தல்.  தமிழகத்தின்  எதிர்காலத்தை  நிர்ணயம் செய்யப் போகின்ற  தேர்தல். ஆரவாரம் இல்லாமல்  பிரச்சாரம் முடிந்துள்ளது. 
ஆனால்  ஆரோக்கியமாக  அமைந்ததா  என்று பார்த்தால்  இல்லை என்றே  வருத்தமாக  சொல்ல வேண்டியுள்ளது.  மக்கள் பிரச்சினைகள் குறித்து, ஒரு அரசின் கொள்கைகள்  எப்படி இருக்க வேண்டும்  என்று விவாதிக்க வேண்டிய  பிரச்சாரத்தை  தரம் கெட்ட தனி நபர் தாக்குதலாக ஆளும் கட்சி மாற்றி விட்டது. 

யதார்த்தமான நகைச்சுவை நடிகராக அனைவராலும் ரசிக்கப்பட்ட 
வடிவேலுவின் விஜயகாந்த் மீதான ரசக்குறைவான பேச்சுக்களே   திமுக  முக்கியமாக முன்னிறுத்தியது  என்பது அதன் வீழ்ச்சியைக் காண்பிக்கிறது.  அதிமுக மட்டும் நடிகர்களை பயன்படுத்தவில்லையா 
என்று சிலர் வேகமாக பின்னூட்டங்களில் பாயலாம். ஜெயா டிவி 
ஜெயா புராணம்தான்  பாடியதே  தவிர  கலைஞர் டிவி, சன் டிவி  
வடிவேலு, குஷ்பூ  வை முன்னுறுத்தியது போல நடிகர்களை அதிகம் 
காண்பிக்கவில்லை. 

சரி விஷயத்திற்கு வருவோம். 
ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி ஏராளமாக முன்னரே எழுதியுள்ளோம். 
ஊழலில் சிகரம் தொட்டது மட்டுமல்ல, அது பற்றிய விமர்சனங்களை 
ஜாதியைச்சொல்லி  திசை  திருப்ப  பார்த்த ஆட்சி. ஒரு அமைச்சர் 
சிறைக்கு சென்ற பிறகும், மனைவியையும் துணைவியின் மகளையும்
மத்திய புலனாய்வுத் துறை  விசாரித்த பிறகும் முழுப் பூசணி அல்ல பூசணித் தோட்டத்தையே ஒரு கவளம் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். 
தொலைக்காட்சி கொடுததால்  குடும்பத்திற்கு வருமானம், 
காப்பீட்டுத் திட்டம் என்றால் குடும்பத்திற்கு வருமானம், 
அரிசி வழங்கினால்  கடத்தல் மூலம் வருமானம், 
குடும்பத்தில் அனைவருக்கும் பதவி, 
அதனால் அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு,
முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை என்றால் 
முதலாளிகளுக்கு ஆதரவாக, 
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் மோதல் என்றால்
ஆதிக்க சக்திகளின் பக்கமாகவே 
ஆரவார முழக்கங்கள் அரைகுறையாக நின்று போனாலும் அதைப் 
பற்றி சிறிதும் கவலை கொள்ளாத 
அரசாக மட்டுமே திமுக அரசு இருந்தது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள இயலாத அரசு, சுய நலமா, மக்கள் நலமா என்றால் சுய நலம் மட்டுமே 
மேலோங்கிய ஒரு அரசு. 

இவர்கள் மீண்டும் வந்தால்  இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக்  கருதி  இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள். 
இவரின் பிரம்மாணடமான குடும்பத்தினரைத் தவிர தமிழகத்தில் 
வேறு யாரும் எந்த தொழிலும் செய்ய முடியாது. 

அன்று 1996 ல்  ரஜனிகாந்த் சொன்னதைத்தான் சொல்ல வேண்டியுள்ளது. 

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை  அந்த ஆண்டவனே  வந்தாலும் காப்பாற்ற 
முடியாது. 
மறவாதீர்! நம் ஒரு துளி மை மூலம் இவர்கள் 
அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
 

2 comments:

  1. நல்ல பதிவு.
    விடியட்டும்.

    ReplyDelete
  2. போட்டியிடும் சாம்ராஜ்யங்களில் ஏழைகளுக்கு உணவு,நினைத்துப் பார்க்க முடியாத தொலைக்காட்சி,மருத்துவ உதவி அளித்துள்ள ஊழல் சாம்ராஜ்யமா? இல்லை கொட நாட்டிலும்,சிறுதாவூர் மாளிகைகளிலும் தங்கத்தில் புரளும் சர்வாதிகார ஊழல் ராஜ்யமா? நெடுமாறன்,வை கோ மட்டுமல்ல அனைவருமே கம்பி எண்ண வேண்டியது தானா?

    ReplyDelete