Saturday, April 16, 2011

மைக்ரோ அப்சர்வரா? ஆளை விடுங்கப்பா சாமி! உங்க சங்காத்தமே வேண்டாம்...

சட்டமன்ற தேர்தலில் நுண் பார்வையாளராக பணியாற்றச சென்ற பலரும் இப்படித்தான் புலம்பினார்கள். பாவம் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தை அப்படி. ஏப்ரல் மாதம் முதல் நாள் முதல் பயிற்சி வகுப்பு. நம்மை முட்டாளாக்குவதற்கான  முதல் கட்டம் அது என்பது பலருக்கும் புரியவில்லை. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியாக பத்து மணிக்கு வகுப்பு என்றார்கள். அடித்து பிடித்து லிப்ட் கிடைக்காமல் படியேறி மூச்சு வாங்க ஐந்தாவது மாடிக்குப்போனால்  தமிழக அரசு அதிகாரிகள் ஈ காக்காய் கூட  அங்கே இல்லை. நானூறு பேரை வரச்சொல்லி இருந்தார்கள். ஆனால் இருந்ததோ நூற்றி ஐம்பது நாற்காலிகள்தான். ஆகவே   
அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் கதைதான். மியுசிகல்  சேர் போல இடம் பிடிக்க கடும் போட்டிதான். 
அடுத்தது புகைப்படம் பிடிக்கும் படலம். முன்னர் நாங்கள் அனுப்பிய 
புகைப்படங்கள் ஆட்சியர் அலுவலக குப்பைத்தொட்டிக்கு போய் விட்டது 
போல. எங்கள் தோழர் ஒருவர் புத்திசாலித்தனமாக எல்.ஐ.சி  ஊழியர்கள் முதலில் புகைப்படம்  எடுக்கும் படி பார்த்துக்கொண்டார். எல்.ஐ.சி, எல்.ஐ.சி என்று சத்தம் போட்டு எங்களையெல்லாம்  புகைப்படம் எடுக்கும் அறைக்கு வரவைத்து விட்டார். 

புகைப்படம் எடுக்கும் அந்தப்பையனுக்கு  அதுதான் முதல் அனுபவம் 
போல. சலங்கை ஒளி சிறுவன் போல எங்களின் நிழல் மட்டும் 
தெரியக்கூடிய படத்துடனான அடையாள அட்டை பின்பு கிடைத்தது. 
அடுத்த நிறுவனத்தினர் படம் பிடிக்க சென்ற போது முதல் வரிசையில் 
உட்கார்ந்து இடம் பிடித்து விட்டோம். என் எதிரில் மைக் வேறு. 
பத்து மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் பனிரெண்டு மணிக்கு தொடங்கியது. புதிய மாவட்ட ஆட்சியர் பழனிகுமார்  மைக்ரோ அப்சர்வர்  பணி  குறித்து விவரித்தார். கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவரை  அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தவர்
என்ற மரியாதையோடு  கவனிக்கத் தொடங்கினேன். 
யதார்த்தமாகவே  இருந்தது அவரது உரை. அங்கங்கே சில தவறுகள் 
நடக்கிறது, மக்கள்தான் முக்கியம், அவர்களது வாக்கினைப் பெற்றால் 
மட்டுமே யாராலும் ஆட்சிக்கு வர முடியும். இதை அனைவரும்  புரிந்து கொண்டால்  தவறுகள் நடக்காது. ஆனால் நடக்கிறது.   அதனால்தான்
மைக்ரோ அப்சர்வருக்கான தேவை உள்ளது. தவறுகள் நடக்காமல்
பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். 

இன்று உங்களுக்கு  எந்த தொகுதி என்று மட்டும் ஆணை அளிக்கப்படும், எந்த வாக்குச்சாவடி என்பதை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணைய 
பார்வையாளர் அளிப்பார் என்று சொன்னார். முதல் நாளே எங்களுக்கு
வழங்கப்பட்ட ஆணையை படித்துப் பார்த்தேன். வேலூர் தொகுதி, கஸ்பாவில் உள்ள மாசிலாமணி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி என்று 
தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். ஆட்சியரின் கையெழுத்துதான் இருந்தது. 

வேறு பல சந்தேகங்களுக்கு விளக்கமளித்த பின்பும் சரி, கூட்டத்தை 
முடிக்கும் முன்பும் சரி மூன்றாவது முறையாக வாக்குச்சாவடி எது 
என்பது தேர்தலுக்கு முதல் நாள்தான் தெரியும் என்று சொன்ன பின் 
என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மைக் வேறு முன்பாகவே இருந்தது. 

வாக்குச்சாவடியோடு  ஏற்கனவே ஆணை கொடுத்து விட்டார்களே என்று  சொன்னதும் ஒரு வினாடி குழப்பமாக இருந்து ஆணையை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த மாவட்ட திட்ட அலுவலரை 
நெருப்புப் பார்வையால் முறைத்தார். இது தவறு. இதற்கான அதிகாரம் 
எங்களுக்கு இல்லை. வேறு ஆணை தருகிறோம் என்று சொல்லி 
கூட்டத்தை முடித்து வைத்தார். 

மாலை வாருங்கள், வேறு ஆணை தருகின்றோம் என்றார்  மாவட்ட  திட்ட அலுவலர். 

அப்போதுதான் தொடங்கியது  உண்மையான அவஸ்தை. 

அவஸ்தை நாளை தொடரும் 

1 comment:

  1. அடப்பாவமே..நல்லாத்தான் இருக்கு உங்க பொழப்பு..
    ம்ம்ம்ம்... அப்புறம்..அப்புறம்..

    ReplyDelete