Friday, April 22, 2011

அமெரிக்காவின் புதிய காதலி

இந்தியாவின்  உள் விவகாரங்களில்  அமெரிக்கா காண்பிக்கும் ஆர்வம், 
எந்தெந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்ய வேண்டும்  என்ற அதன் 
விருப்பம், அதற்காக எதையும் செய்ய தயாராக உள்ள அதன் துடிப்பு 
எல்லாம் மீண்டும் அம்பலமாகி உள்ளது. 
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசான கேரள இ.எம்.எஸ் ஆட்சியை 
கவிழ்க்க அமெரிக்க உளவு அமைப்பான  சி.ஐ.ஏ  நடத்திய சதி வேலைகள், 
அதைச்செய்ய  அவர்கள் கண்டு பிடித்த எடுபிடிகள், வீசப்பட்ட எலும்புத் துண்டுகள் குறித்தெல்லாம்  கேரளா நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் 
தனது புத்தகத்தில்  ஆதாரங்களோடு  அம்பலப் படுத்தியிருப்பார். கேரள
அரசைக் கவிழ்க்க அமெரிக்கா  ஆர்வம் காட்டியதை  அம்பலப்படுத்த 
நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. எதற்கெடுத்தாலும் துள்ளிக் குதிக்கும்  ரமேஷ் சென்னித்தலா, ஆண்டனி, ஓமன் சாண்டி வகையறாக்கள்  தோழர் தாமஸ் ஐசக் புத்தகத்திற்கு மட்டும் பதில் 
சொல்லாமல்  வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தார்கள். 

ஆனால்  மேற்கு வங்கத்தில்  அமெரிக்கா ஏற்படுத்த நினைக்கும் மாற்றம்
குறித்து அம்பலப்படுத்த நாற்பது ஆண்டுகள் தேவைப்படவில்லை. நான்கு
சுற்று வாக்கு பதிவு பாக்கி   இருக்கும் போதே  உண்மைகள் அம்பலமாகி 
உள்ளன. 

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் செய்யும் பல வேலைகள்  சந்தேகத்திற்கு இடமானது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வாங்க மாநிலச்செயலாளர் தோழர் பிமன் போஸ் ஏற்கனவே 
குற்றம் சாட்டியுள்ளார்  என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

இப்போது விக்கிலீக்ஸ்  கொல்கத்தா அமெரிக்க துணை தூதரகம் அமெரிக்க  அரசிற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டு அம்பலப் படுத்தி
விட்டது.  மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக வருவதுதான் 
அமெரிக்க நலன்களுக்கு நல்லது. இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியை 
அகற்ற இதுவே தருணம். எனவே அமெரிக்கா அவருக்கு முழுமையான 
ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுதான் அக்கடிதத்தின் சாராம்சம். 

இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க
முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் மார்க்சிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்த நடைபெறும்  சதிச்செயலில்  இப்போது அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள எடுபிடி மம்தா பானர்ஜி. அவருக்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகள்தான்  இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் உலாவிக் கொண்டுள்ளது  என்பதும் தெளிவு. 

மம்தா பானர்ஜி முதல்வரானால் ஒழுங்காக இருப்பாரா அல்லது ரவுடியாகவே தொடர்வாரா? முதலாளிகளுக்கு நன்மை கிடைக்குமா?
என்றெல்லாம் பல சந்தேகங்களை அக்கடிதத்திலேயே எழுப்பியிருந்தாலும்  மம்தாவிற்கு உதவி செய்யுங்கள் என்று முடித்துள்ளது  மார்க்சிஸ்ட் கட்சி மீது அமெரிக்கா கொண்டுள்ள 
துவேஷத்தையே  காண்பிக்கிறது. 

ஆனால் இந்த சதிகளைஎல்லாம் மேற்கு வங்க மக்கள் கண்டிப்பாக 
முறியடிப்பார்கள். 



 
 

2 comments:

  1. எதிரிகள் முறியடிக்கப்படுவார்கள்..

    ReplyDelete
  2. வாய்ப்பு என்னவோ மம்தாவிற்குத்தான்
    அதிகமாகவுள்ளது.

    ReplyDelete