Monday, April 25, 2011

இவ்வளவிற்கும் பணம் எங்கே இருக்கிறது?

வேலூரின் முகம் கடந்த மூன்றாண்டுகளில்  மிகவும் மாறியுள்ளது. 
விவேக், கிரேசி மோகன் ஆகியோரின் சுவாரஸ்யமான விளம்பரத்துடன் 
நாதெள்ளா நகைக்கடை சில  நாட்களுக்கு முன்பாக வேலூருக்கு 
வந்து விட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக டாடா கோல்ட் ப்ளஸ் 
நகைக்கடை துவக்கப்பட்டபோது  இதற்கான தேவை என்ன உள்ளது 
என்ற கேள்வியை வேலூர் மக்கள் எழுப்பினார்கள். 
கடந்தாண்டு சிநேகா, மாதவன், பிரபு  வின் விளம்பரங்களோடு அவர்களின்  வருகையோடு  ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ், 
கல்யாண் ஜ்வல்லர்ஸ்  ஆகிய நிறுவனங்கள்  பிரம்மாணடமான 
கிளைகளைத் திறந்த போது  எத்தனை நாட்கள் இவை நடக்கும் என்று 
பார்க்கலாம் என சவால் விட்டவர்கள் ஏராளம். 

ஏனென்றால்  சென்னையின் சரவணபவன் உணவகம் வேலூரில் துவக்கப்பட்ட போது ஈ ஓட்டிக்கொண்டிருந்தது . மாபெரும் அதிரடி 
விலைக் குறைப்பு என்று உள்ளூர் கேபிள் டிவியில் விளம்பரம் 
கொடுத்தும் பெரும்பாலான வேலூர் மக்கள் அந்தப்பக்கம் கால் வைக்கவேயில்லை. வேலூரின் புதிய சுற்றுலாத் தளமாக 
பொற்கோயில் உதித்த பின்புதான் சரவணபவன் பிழைத்தது. 
இப்போது பல மடங்கு விலையை உயர்த்தி விட்டார்கள். வேலூர்காரர்கள்   வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
பொற்கோயில்  பக்தர்கள்  வருவார்கள் என்ற  தெனாவெட்டுதான். 

தங்கம் ஒரு சவரனின் விலை பதினாறாயிரத்திற்கு மேலே சென்ற 
பின்பும்  இத்தனைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகின்றது.
வேலூரின் நகைக்கடைகாரர்களும்  இப்போது பிரம்மாண்டமான 
ஷோரூம்  கட்டத்துவங்கி விட்டார்கள். 

நகைக்கடைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கால் வைக்க முடியாத  பிரம்மாண்டமான  ஃபர்னிச்சர் கடைகளும்  வந்து விட்டது. மற்ற 
கடைகளை விட விலை அதிகம் என்று தெரிந்தும் "மோர்" போன்ற 
பல் பொருள் அங்காடிகளும்  எப்போதும் நல்ல கூட்டத்துடனே 
வியாபாரம் செய்கின்றன. 

இதனை வியாபாரம் பெறுகிற அளவிற்கு  மிகப் பெரிய தொழில் வளர்ச்சி
ஒன்றும் வேலூருக்கு வந்து விடவில்லை. விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை. மாவட்டத்தின்  அடிப்படை தொழில்களான
பீடி, கைத்தறி, தீப்பெட்டி, தோல் ஆகியவையும் நலிந்தே உள்ளது. 
ஆனாலும்  எப்படி இங்கே இவ்வளவு வணிகம்? 

வேறு  சில தகவல்கள்  கிடைத்தன. புதிதாக நகை வாங்குபவர்கள் ஐம்பது சதவிகிதம் என்றால் பழைய நகையை மாற்றுபவர்கள் மீதம். புதிய நகை விற்பதை விட பழைய நகையை மாற்றுவது என்பதில் 
எப்போதும் நுகர்வோருக்கு  இழப்பு, கடைக்காரர்களுக்கு கூடுதல் 
லாபம். 

கடந்து முடிந்த நிதியாண்டில்  எந்த ஒரு வங்கியும் தங்களது வைப்புத் தொகைக்கான இலக்கை அடையவில்லை. அதே போல் எல்.ஐ.சி 
உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களாலும்  இலக்கை அடைய முடியவில்லை.  அஞ்சல் சேமிப்பிற்கும் அதே கதி என்ற தகவலை 
ஒரு அஞ்சல் தோழர் பகிர்ந்து கொண்டார். 

ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை கடன் அட்டைகள் மூலமான 
பரிமாற்றங்கள் என்பது அதிகரித்துள்ளது. 

ஆக  எதிர்கால வாழ்விற்கு சேமிக்கப்பட வேண்டிய தொகை என்பது 
நுகர் பொருட்களாக மாறியுள்ளது. சேமிப்பை விட கூடுதலாய் கடன் 
பெறப்பட்டுள்ளது. 

இந்த நிலை ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல 
வேண்டும். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஆட்டி வைத்த 
1930  மிகப் பெரிய மந்தத்திற்கும் சரி, தற்போதைய சர்வதேச பொருளாதார  நெருக்கடிக்கும் சரி  சேமிப்பை விட கடன் அதிகரித்தது
என்பதும் ஒரு காரணம். 

நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற சர்வ தேச நிதி 
மூலதனத்தின் ஆசைக்கு நம்மை அறியாமல் நாமே  பலியாகிக் கொண்டிருக்கிறோம்  என்பதுதான் வருத்தமான உண்மை. 
      

 

3 comments:

  1. அட்சய திரிதியை வரப் போகிறது. இவர்கள் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் கட்டுவார்கள் பாருங்கள்.

    ReplyDelete
  2. இது எனக்கும் புரியாத புதிர்! வெளிப்படையாக வருமானம் பெருகும் எந்த வழியும் இல்லாமல் எப்படி இந்த அளவு பணப்புழக்கம்? கடன் அட்டைகள் மூலமா? யாரை பார்த்தாலும் இப்போது கொடிகளில் தான் பேசுகிறார்கள்! புரியவே இல்லை!

    ReplyDelete
  3. சரவண பவன் ஓட்டல் தற்போது இந்த குறைகால முதல்வரின் குடும்பத்தின் கையில். உதயநிதி ஸ்டாலின் தான் தற்போதைய முதலாளி.
    எங்க ஊர்ல ஒரு பிச்சைக்காரன் அழுதுகிட்டே இருந்தான்... இன்னொரு பிச்சைக்காரன் அவனைப்பார்த்து ஏம்பா அழறன்னு கிட்டான்... அதுக்கு அந்தப் பிச்சைக்காரன் " போற போக்கைப்பாத்தா நம்பத்தொழிலுக்கும் வந்துடுவார் போலிருக்கே" என்று சொன்னான். அதிக வருமானம் கிடைக்கிறது என்று தெரிந்தால் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் கருணாநிதி குடும்பத்தினர்.

    ReplyDelete