Wednesday, November 22, 2023

குஷ்பு -செலக்டிவ் பொங்கலும் சேரி லேங்குவேஜூம்

 


சகவாச தோஷம் ஒரு மனிதனை எவ்வளவு கேவலமாக மாற்றி விடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் குஷ்பு. டிமோ கட்சியில் சேர்ந்தது முதல் எத்தனை நாடகம்! எவ்வளவு பொய்கள்! எத்தனையெத்தனை தரக்குறைவான பேச்சுக்கள்!

நடிகை த்ரிஷாவை மன்சூர் அலிகான் என்ன சொன்னார் என்பதை நான் பார்க்கவில்லை. அவருடைய பழைய வரலாறு தெரிந்தவர்களுக்கு அவர் மோசமாக பேசக்கூடியவர் என்பது தெரியும். அப்படி அவர் கேவலமாக பேசியிருந்தால் நிச்சயம் அவர் கண்டிக்கப்பட வேண்டும். மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு கண்டித்துள்ளார். ஓகே.

அதனை ஒருவர் விமர்சிக்கிறார். " ஆடைகள் அகற்றப்பட்டு பெண்களை ஊர்வலமாக அழைத்துப் போன மணிப்பூர் விஷயத்தில் தூங்கிக் கொண்டிருந்த குஷ்பு, த்ரிஷாவிற்காக விழித்துக் கொண்டார்". இந்த விமர்சனம் நியாயம்தானே!

அதற்கு குஷ்பு கோபத்தில் பொங்கி எழுந்து முட்டாள்கள், குண்டர்கள் என்றெல்லாம் வசை பாடி உங்களைப் போல் என்னால் சேரி மொழி பேச முடியாது என சொல்கிறார்.


அதென்ன குஷ்பு அம்மையாரே, சேரிகளில் வசிப்பவர்கள் பேசும் மொழி என்ன அவ்வளவு கேவலமா? எங்கிருந்து வந்தது இந்த மேட்டிமை புத்தி? மனுதர்மத்தின் வெளிப்பாடுதானே உங்களின் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது! சேரிகளில் வாழும் மனிதர்கள்தானே உங்கள் படங்களை பார்த்து உங்களை உயரத்தில் அமர வைத்தார்கள்! உயரத்துக்கு போனதும் கீழே உள்ளவர்களை கேவலமாக நினைப்பீர்களா? தஞ்சை மாவட்ட மிராசுதார்கள், பண்ணையார்களின் வசவு மொழி பற்றி தெரியுமா? எனக்கு தெரியும். ஆனால்  என் வலைப்பக்கம் நாகரீகமானது.

ஆடைகள் அகற்றப்பட்டது உண்மைதானே! அதைத்தானே அவர் சொல்கிறார்! உங்கள் மகளிர் ஆணையமும் ஒன்றிய அரசும் அந்த பெண்களுக்கு என்ன நியாயம் கொடுத்தது? சரி வார்த்தையை சொன்னதற்கு பொங்குகிற நீங்கள் அண்ணாமலை படத்தின் "கடவுளே, கடவுளே" காட்சியை நினைவு கொள்ளுங்கள். ரஜினி பேசும் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த காட்சியில் நடிக்கவோ, அல்லது ரஜினி அவ்வாறு பேசக்கூடாது என்று மறுக்கவோ செய்யவில்லையே!

சரி, மன்சூர் அலி கான் பேசியது போலவே தமன்னா பற்றி ரஜினிகாந்த் உமிழ்நீர் பொங்க பேசியதை நான் பார்த்தேன். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

போலித்தனமாக பொங்குவதை விட்டுவிட்டு பெண்களுக்கு ஆதரவாக உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க முயற்சியுங்கள். 


1 comment:

  1. அவர் ஒரு நடிகை,
    நடிக்க விடுங்க!

    காகித பூ.

    ReplyDelete