Thursday, November 30, 2023

சட்ட விரோத முறை சாதித்தது.

 



உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை “எலி வளை சுரங்க முறை” தொழிலாளர்கள்தான் இறுதிக்கட்டத்தில் மீட்டார்கள் என்பதை நேற்று எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 

அது என்ன “எலி வளை சுரங்கம்” ?

 

நிலக்கரியை தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முறை அது.

 

ஒரே ஒரு தொழிலாளி மட்டும் செல்லும் அளவிற்கு துளை போடப்பட்டு அதிலே ஒருவர் இறக்கப்படுவார். அவர் உள்ளே இறங்கி நிலக்கரியை வெட்டி எடுத்து மேலே மூங்கில் கூடைகள் மூலம் அனுப்புவார். அவர் பின்பு வெளியேறுவார். மிகுந்த திறன் உள்ளவர்கள் மட்டுமே அதனை செய்ய முடியும்.

 

இந்த முறையில் அபாயம் அதிகம். போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சடைத்து இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் பசுமை ஆணையம் இம்முறையை பதினைந்து ஆண்டுகள் முன்பே தடை செய்து விட்டது. இப்படிப்பட்ட முறையில் தொழிலாளர்களை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும் அறிவித்து விட்டது.

 

கிட்டத்தட்ட 16 நாட்கள் பேரிடர் மீட்டுப்படைகள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றி சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்க பாடுபட்டனர். 12 மீட்டர் மட்டுமே முன்னேற வேண்டிய சூழலில் இயந்திரங்கள் பழுது பட வேறு வழியில்லாமல் “எலி வளை சுரங்க முறை” தொழிலாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டனர்.

 

சட்டவிரோதமென்று அறிவிக்கப்பட்ட முறைதான் கடைசியில் கை கொடுத்துள்ளது என்பது சுவாரஸ்யமான ஒன்று.

 

இரண்டு திரைப்படக்காட்சிகள் நினைவுக்கு வந்ததை சொல்லத்தான் வேண்டும். ஒன்று நெகிழ்ச்சி, இன்னொன்று காமெடி.

 

ஆழ்துளைக் கிணறில் சிக்கிக் கொண்ட சிறுமியை மீட்க  அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போன பின்பு அண்ணனை கயிறு கட்டி உள்ளே இறக்குகிற “அறம்” திரைப்படக் காட்சி நெகிழ்ச்சியானது.

 

லாக்கரின் சாவியை நீதிபதி தொலைத்திட முக்கியமான ஆவணத்தை எடுக்க போலீஸ் ஏற்பாடு செய்த திருடன் ஆர்யா லாக்கரை கள்ளச்சாவி தயார் செய்து திறக்கும் “அவன் இவன்” படக்காட்சியோ செம காமெடி.

 

பிகு : இன்னும் இரண்டு பதிவுகள். அவை சீரியசானவை.

No comments:

Post a Comment