கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி எப்படி முடிவு செய்வது???
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 
கோவிட் தடுப்பூசிகளினால் ஆங்காங்கே தடுப்பூசி சார்ந்த மரணங்கள் நிகழ்கிறது என்கிறார்களே இதை எப்படி அணுகுவது? 
நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நம் மனம் தன்னை அறியாமல் 
அந்த செயலை செய்வதால் வரும் 
சன்மானம் 
மற்றும் 
அந்த செயலை செய்யாமல் விடுவதால் சந்திக்கும் பிரச்சனை 
இவற்றை ஒருங்கே சிந்தித்து தான்  முடிவு செய்வோம் 
இதை RISK Vs BENEFIT ANALYSIS என்போம் 
உதாரணம் 
ஒருவர் சென்னையில் இருந்து மதுரைக்கு மகிழ்வுந்தில் செல்ல வேண்டும் நினைக்கிறார்  இன்னொருவர்  தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில்  செல்ல நினைக்கிறார் 
ஆனால் இந்தியாவில் சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிர் இழக்கும் வாய்ப்பு 
பத்து லட்சம் பேர்களில் 113.5 என்ற அளவில் இருக்கிறது என்பதை அறிகிறார் 
அவர் காரில் மதுரை செல்வதை உடனே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து   விடுவாரா அல்லது மதுரைக்கு கிளம்புவாரா?  அல்லது அலுவலகத்துக்கு செல்வதை நிறுத்திவிடலாமா??? 
இருவரும் தாங்கள் எடுக்கும் ரிஸ்க்கை அறிந்தே அந்த பயணத்தை மேற்கொள்வார்கள் தானே? 
அதுபோல இந்தியாவில்  இதுவரை தடுப்பூசி பெற்றவர்கள் ( மார்ச் 31,2021 வரை)  6.3 கோடி மக்கள்  இவர்களிடையே தடுப்பூசி பெற்ற 28 நாட்களுக்குள் 180 மரணங்கள் நிகழ்ந்தன 
தடுப்பூசி பெற்றவர்களுள் மரணம் நிகழ வாய்ப்பு  
பத்து லட்சம் பேர்களில் 3 என்ற அளவில் இருக்கிறது. 
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி கண்டறியப்பட்டவர்களில் மரணம் நிகழ வாய்ப்பு   பத்து லட்சம் நோயாளிகளின் 12800 பேர் என்ற அளவில் இருக்கிறது  
இப்போது இரண்டாம் அலை வெகு ஆக்ரோஷமாக பரவி வரும் நிலையில் 
மஹாராஷ்ட்ரா , குஜராத் , சட்டிஸ்கர், பஞ்சாப், டில்லி, பெங்களூர் ஆகிய இடங்களில்  ஒரு ஆக்சிஜன் படுக்கையில் இருவர் மூவர் படுத்திருக்கும் நிலையில்  மருத்துவமனைகளுக்கு வெளியே சாரை சாரையாக ஆம்புலன்ஸ்கள் படையெடுத்த வண்ணம் இருக்க   மயானத்தில் எரியூட்டக்கூட இடமின்றி மக்கள் காத்திருக்க  மயானத்தில் எரியூட்டும் இரும்புப் படுக்கை எரிந்து உடைந்து போகவென்று பல விசயங்களைக் கண்டு வருகிறோம் 
இப்படி இருக்கும் போது நம் மனம் 
Risk vs benefit analysis செய்யும் 
பத்து லட்சம் பேருக்கு போடப்பட்டால்
அரிதினும் அரிதாக மூன்றே மரணங்களை விளைவிக்கும் தடுப்பூசியை எடுப்பதா? 
வேண்டாமா? 
அல்லது 
பத்து லட்சம் பேருக்கு பரவினால் 12800 பேருக்கு மரணத்தை உருவாக்கும் கோவிட் நோய் வருமே. அதிலும் முன்பை விட வேகமாக பரவி வரும் இந்த இரண்டாம் அலையில் தொற்று ஏற்படுவதற்கான ரிஸ்க் அதிகமாக இருக்கிறதே என்ன செய்யலாம்?
இரண்டில் எது சரி? 
என்று மக்கள் முடிவுக்கே விட்டு விடுலாம்  
தடுப்பூசிகளின் விளைவால் இஸ்ரேல் தேசம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.  முதியோர்களிடையே நோய் தொற்றுப்பரவலையும் தீவிர கொரோனாவையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. 
பிரிட்டனில் தடுப்பூசி மூலம் நோய் தொற்றுப்பரவலை 67% குறைத்திருக்கின்றனர்.  
அமெரிக்காவில் தடுப்பூசிகளின் விளைவால் நான்காம் அலை கட்டுப்பாட்டில் இருக்கிறது 
இத்தகைய செய்திகள் உள்ளபடி நம்பிக்கையை அளிக்கின்றன 
சமீபத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் 83 வயதான திரு. துரைமுருகன் அவர்கள் இரண்டு தடுப்பூசியையும் பெற்றதால் சிறப்பாக குணமாகி வீடு திரும்பியிருப்பதையும் காண முடிகின்றது 
இதுவரை 12+ கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு இருக்கின்றது 
இந்த பக்கவிளைவுகள் நிகழ்வுகளை இந்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன  
எங்கும் தடுப்பூசியினால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்ததாகவோ 
குறிப்பிட்ட ஊரில் ஊசி போட்ட அனைவரும் இறந்ததாகவோ   குறிப்பிட்ட பேட்ச் தடுப்பூசியினால் அதிகமாக மரணங்கள் நேர்ந்ததாகவோ செய்திகள் இல்லை.  
பத்து லட்சம் பேரில்  113.5 இறக்க வாய்ப்புள்ள சாலை பயணங்களையே யாரும் நிறுத்துவதில்லை எனும் போது  
பத்து லட்சம் பேரில் 3 பேர் மட்டுமே இறக்க வாய்ப்புள்ள  அதே சமயம் 12800 பேரை மரணங்களில் இருந்து ஆகுமானவரை காக்கக்கூடிய தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதே சரியென்றுபடுகின்றது.   
எனவே தடுப்பூசிகள் குறித்து பரப்பப்படும் பொய் செய்திகளை விட்டு வெளியே வந்து உண்மைகளை அறிந்து நீங்களே உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். 
நன்றி 
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை
பிகு : இன்று அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் முதல் டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இதனை பகிரும் தார்மீக உரிமை இருப்பதாக கருதுகிறேன்.

 
 
நானும் தடுப்பூசி ஏற்கனவே போட்டுக்கொண்டுள்ளேன் நண்பரே
ReplyDeleteஇத்தருணத்தில் மிகவும் அவசியமான பகிர்வு
ReplyDeleteஉண்மையான கருத்து. வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன். உங்களை வாழ்த்த எனக்கு வயதுண்டு. என் வயது 71. அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteஅருமையான விளக்கம். வதந்திகளை புரந்தள்ளி தடுப்பூசி போட்டு உயிர் காப்போம்.
ReplyDelete