Sunday, April 18, 2021

விவேக்கின் இறுதிச்சடங்கும் நிறைவேறாத இன்னொரு . . .

 


மூத்த தோழர் கா.சின்னையா பகிர்ந்து கொண்ட இந்த பதிவு, விவேக்கின் இறுதிச்சடங்குகளை அவர் மகள் செய்ததை மட்டும் கூறவில்லை.

இன்னொருவரின் ஆசையை நிறைவேற்ற விடாமல் தடுத்த மோசமான நிகழ்வையும் சொல்கிறது.

விவேக் படங்களில் சொன்னது போல நூறு பெரியார்கள் இன்னும் தேவைப்படுகின்றனர்.

Vidya Subramaniam page..
//நேற்று மாலை நான் டிவி போடும்போது பாலிமரில் நடிகர் விவேக்கின் இறுதி காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அவரது பெண் தன் தோளில் பானை சுமந்து தகப்பனின் உடலை வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டதும் ஏனோ கண்ணீர் பீறிட்டது எனக்கு. கூடவே சுப்ரமணியத்தின் மரணமும் நினைவுக்கு வந்ததை ஒதுக்க முடியவில்லை.

விழுப்புரத்தில் இறந்தவரின் மரணச் செய்தி எங்களுக்குத் தெரியவே இரண்டு நாளாயிற்று. உடல் டீகம்போஸ்ட் ஆகியிருக்க, முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலை. நான் அதிர்ச்சியில் இறுகிப் போயிருந்தேன். வித்யாதான் ஒவ்வொருவருக்காகத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள். நடுவில் நான் அவளை அழைத்தேன்.

"நீதான் அப்பாக்கு எல்லாம் பண்ணணும்"

"செய்யறேன். ஆனா என்னை பண்ண விடுவாளா?"

"பண்ணிதான் ஆகணும். நா எல்லார்ட்டயும் சொல்றேன்." என்று கூறிவிட்டு சுருண்டு படுத்தேன். அழவில்லை. மனசு இறுகிப் போயிருந்தது.

மரணச் செய்தியின் அதிர்ச்சியினால், நாற்பத்து நான்கு வயதில் ஏற்கனவே இருந்த மெனோபாஸ் பிரச்சனை அந்த நிமிடம் தலைதூக்க, பெருமளவில் நானே பதறுமளவுக்கு உதிரப்போக்கு துவங்கியது எனக்கு. நிற்க முடியவில்லை. உடலின் உதிரமெல்லாம் வழிந்து போனாற்போல் உடற்சோர்வு, நடுக்கம். யார் யார் வந்தார்கள், யாரிடம் என்ன பேசினோம்...எனப்புரியாத அளவுக்கு ஒரு அரை மயக்க நிலை. உதிரம் சிந்தவே பிறந்தவள் பெண். பதினாலு வயதில் ஆரம்பித்து, பின்னர் பிரசவங்களில் குடம் குடமாய் இரத்தம் சிந்தியது போக, பாலாக மாறி குழந்தைக்கு உணவாகும் உதிரம், மெல்ல வயதேறி நாற்பதுகளுக்கு மேல் மெனோபாஸில் நினைத்தால் கொட்டும் உதிரம் என..... உடல்ரீதியாய்ப் பெண் படும்பாட்டை அறிந்தவர் எவரும் அவளை ஒருபோதும் உதாசீனம் செய்ய மாட்டார்கள். இத்தனைக்கும் நடுவில்தான் அவள் பல சாதனைகள் புரிகிறாள்.

மறுநாள் மாலை வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நிற்க, சுப்பிரமணியத்தின் மத்திய புலனாய்வுத் துறையின் சார்பில் வாசலிலேயே ஆம்புலன்ஸ் முன் துப்பாக்கி ஏந்தியவர்களின் அஞ்சலி நடக்க, நான் வித்யாவிடம் ரெடியா இரு என்றேன்.

மன்னி அவளோட நானும் போறேன் என்று கிளம்பினாள் தோழி இந்திரஜா(நடிகை). 19 வயது பெண்ணை மயானத்திற்கு அனுப்பி வைத்தேன். உடன் சென்றவர்களிடம் விவரமாகச் சொல்லியும் அனுப்பினேன்.

எட்டுமணியாயிற்று எல்லோரும் வீடு திரும்ப. வந்ததும் குளித்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு இந்திரஜா கிளம்பிச் செல்ல, நான் வித்யாவிடம் தேங்க்ஸ்டி என்று சொல்லிவிட்டு உதிரப்போக்கின் காரணமாக நிற்கக்கூட முடியாமல் சுருண்டு படுத்தேன். அம்மா பயந்து போய் குணாளம்மனுக்கு குங்குமம் சார்த்துவதாக வேண்டிக் கொண்டாள். அடுத்த இரண்டு நாட்களும் காரணமின்றி உறக்கம் அதிகம் வர, வித்யா மருத்துவரிடம் ஆலோசித்தாள். வீட்டுக்கே வந்து பிளட் டெஸ்ட் செய்ய டயபடிக் என்பது உறுதியாயிற்று. அதிர்ச்சியில் பான்க்ரியாஸ் பாதிக்கப்பட்டாலும் சட்டென ஷுகர் தாக்குமாம். அப்பா அத்தைக்கு இருப்பதால் வாய்ப்பு அதிகமிருந்தது. அது சற்று முன்னமேயே வந்துவிட்டது. சரி இதையும் எதிர்கொள்வோம் என்று தேற்றிக் கொண்டேன்.

துக்கம் விசாரிக்கறேன் என்று பலரும் வந்தார்கள். அழுதார்கள். நான் அழவில்லை. என் முன் அழுதவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினேன். பெண்களின் சோகத்தைப் போக்கும் வகையில் அவர்களோடு ஸ்க்ராபிள் விளையாடினேன். சிரித்துப் பேசினேன். அடுத்து வாழ்வை எப்படி எதிர் கொள்வது என்று யோசனையோடு அடுத்து நடக்க வேண்டிய கர்ம காரியங்கள் குறித்து பேசி வேண்டிய பணத்தைக் கொடுத்தேன்.

பதிமூன்று நாள் காரியம் குறைவின்றி நடந்தது. இருபதாவது நாள் அம்மாவும் கிளம்பிச்செல்ல, வீட்டில் நானும் என் பெண்களும் மட்டுமே. மேலும் பத்து நாட்களாகியிருக்கும்.

"அம்மா நா ஒரு விஷயத்தை உங்கிட்ட சொல்லாம் மறைச்சுட்டேன்" என்றாள் ஒருநாள் இரவு வித்யா தயங்கியபடி.

என்ன விஷயம்?

"அப்பாக்கு நா எதுவும் பண்ணலை. கணேஷ் மாமாதான் பண்ணினா".

நான் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தேன். "என்னடி சொல்ற? நா அவ்ளோ தூரம் சொல்லியனுப்பினேனே...."

"என்னை யாரும் பண்ண விடலைம்மா. என் பேச்சை யாருமே மதிக்கலை. என்னோட வந்த ஒருத்தர் கூட எனக்காக அங்க சப்போர்ட் பண்ணலை".

நீ எப்டிடி விட்டுக் கொடுத்த? பிடிவாதமா பண்ண வேண்டியதுதானே?

"அந்த சாஸ்திரிகள் ரொம்ப கேவலமா பேசினார்மா. பொம்மனாட்டிகள் பண்ணப்படாதுன்னார். ஏன் பண்ணப்படாதுன்னு கேட்டேன். உன்னால புருஷா மாதிரி மேல்சட்டையை அவுத்துப் போட்டுட்டு காரியம் பண்ண முடியுமான்னு கேட்டார். அவர் அப்டி கேட்டதும் என்னால கோவத்தை அடக்க முடியலை. எங்கப்பாக்காக நா அதையும் செய்ய ரெடியாராக்கேன். ஆனா உங்களால ஒழுங்கா மந்திரம் சொல்ல முடியுமான்னு திருப்பிக் கேட்டேன். இந்தப் பொண்ணு அதிகப் பிரசங்கித்தனமா பேசறது...யாரானம் இவளை அந்தண்ட இழுத்துண்டு போங்கோன்னு கத்தினார். மாமா உட்பட எல்லாரும் சேர்ந்து என்னை சமாதானப் படுத்தி கூட்டிண்டு போய்ட்டா. என்னால எதுவுமே பண்ண முடியல. மாமா பண்றதை வேடிக்கைதான் பார்க்கமட்டும்தான் முடிஞ்சுது. அவள் சொல்லிவிட்டு அழ,.....நான் சிலையாய் அமர்ந்திருந்தேன். வேதம் படித்த ஒரு மனிதரால் தந்தையை இழந்த ஒரு இளம் பெண்ணிடம் இத்தனை வக்கிரமாகக்கூடப் பேச முடியுமா? வேதம் சொல்லும் வாயிலிருந்து சாக்கடையும் கொட்டுமா? அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் வெடித்துக் கிளம்ப ஒரு மாதம் கழித்து சுப்ரமணியத்திற்காக நான் வாய்விட்டு கதறியழுதேன்.

நமக்கு பிள்ளையில்லைன்னு வருத்தமுண்டா உங்களுக்கு? ஒருநாள் சிரித்தபடி அவரிடம் கேட்டதற்கு, "ஒரு வருத்தமும் இல்ல? நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். நமக்கு ஏதானம் ஆச்சுன்னா கொள்ளிபோட ஒண்ணுக்கு ரெண்டு பொண்கள் இருக்கறப்போ எனக்கென்ன வருத்தம்? "

சாரி சுப்ரமண்யா! நாங்க தோத்துட்டோமா இல்ல ஏமாந்துட்டோமான்னு தெரியலை. உனக்கு இதைக்கூட பண்ண முடியலை. சாரி...வெரி சாரி....

நான் கரைந்து அழுதேன். தூங்காத இரவு அது. (இன்றுவரை அந்த வேதனையும் வலியும் இருக்கத்தான் செய்கிறது.)

"சாரிமா என்னால எதுவுமே பண்ண முடியலை." வித்யா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். நான் அவளிடம் சொன்னேன். "போகட்டும். என் விஷயத்துல ஏமாந்துராதே. உன் உரிமை அது." என்று.

விவேக்கின் பெண் தன் தகப்பனுக்கு காரியங்கள் செய்தது மிகப்பெரிய மன நிறைவைத் தந்தது.

பெண் மகாசக்தி. அதை நன்கு உணர்ந்தும்கூட அதன் காரணமாகவே அவளை உதாசினம் செய்வோரும் எக்காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்பதிவு யாரும் அழுவதற்காக அல்ல, சிந்திப்பதற்காக.
Vidya subramanian


No comments:

Post a Comment