Monday, April 12, 2021

எப்படி தவற விட்டேன்?



இந்த வருடம் சென்னை புத்தக விழாவில் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகம். ஆனால் வாங்க தவறி விட்டேன் என்பது இன்று ஒரு வாட்சப் குழுவில் நூல் அறிமுகம் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன்.

விரைவில் வாங்க வேண்டும். படிக்க வேண்டும்.

 *வாரம் ஒரு நூல்*


11.4.2021

நூல் அறிமுகம்: 
*ராஜசங்கீதன்*
(தாரைப்பிதா முகநூல் பக்கத்திலிருந்து)

*யாத்வஷேம்!*

*நேமிசந்திரா*

தமிழில்...நல்லதம்பி

பொதுவாக கம்யூனிஸ்ட்டுகளை நக்கலாக பார்க்கும் பார்வை உண்டு. குறிப்பாக அவர்களின் போராட்ட குணம் பற்றிய பார்வை. *'எதுக்கெடுத்தாலும் போராடிக்கிட்டு இருப்பதும் போராட கூப்பிடறதும்'* என்கிற நக்கல் பார்வை. அதே நக்கல் பார்வையை மோடியும் *'போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்'* என கம்யூனிஸ்டுகளை விளிக்கும்போது நம்மை நக்கல் அடிப்பவர்கள் அவர்கள் அறியாமலே எந்த பக்கத்தில் நிற்கிறார்கள் என்பதை கண்டு கொள்ள முடியும். கண்டிருப்பார்கள். புரிந்திருப்பார்கள். ஏளனம் மட்டும் குறையாது.

*ஏன் போராட வேண்டும்?* தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடித்து விடலாமே? எதற்கு எல்லாவற்றுக்கும் போராட வேண்டும்?

இக்கேள்விகளுக்கு
*யாத்வேஷம்* நாவல் பதிலளிக்கிறது.

ஹிட்லரின் ஜெர்மனி கொடூரங்களிலிருந்து தப்பும் ஒரு யூத தந்தையும் மகளும் இந்தியாவில் தஞ்சம் அடைகிறார்கள். அவர்கள் வந்து சேரும் இடம் பெங்களூர். இருவரும் தப்பிவிட்டாலும் ஒரு பெரும் அகச்சிக்கலுடன் உழலுகிறார்கள். யூத மகளின் தாய், அக்கா, குழந்தை தம்பி ஜெர்மனியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவந்த குற்றவுணர்வும் அவர்களுக்கு என்னவாகி இருக்கும் என்கிற பரிதவிப்பும் ஹிட்லர் ஆடும் குரூரங்களும் அலைக்கழிக்கிறது. உச்சமாக யூத பெண்ணின் தந்தை இறந்து விடுகிறார். பெங்களூர் குடும்பம் ஒன்று அவரை தத்து எடுக்கிறது.

உறவு இன்றி, நாடு இன்றி, மக்கள் நேயமின்றி முற்றாக வேறோடு பிடுங்கி வேறு நிலத்தில் நடப்படும் நிலை. யூத பெண் தன் துயரங்களை அடக்கிக் கொண்டு இந்திய தன்மைக்கு பொருந்தி விடுகிறாள். இந்திய குடும்பத்தில் இருக்கும் இளைஞனுடனே திருமணம் முடிகிறது. குழந்தை பெறுகிறார்கள். குழந்தை வளர்ந்து வேலைக்கு செல்லும் வயதை எட்டுகிறான். மொத்தமாக இந்திய பெண்ணாகவே மாறி விடுகிறாள். ஆனாலும் மனக்குறை தீரவில்லை.

இறுதிகாலத்தை எட்டும் தறுவாயில் மனதின் ஆழத்திலிருந்து வளர்ந்து விருட்சமாகி இருக்கும் தன் உறவுகளுக்கு என்ன ஆனது என்ற கேள்வியை தேடி யூத பெண் செல்கிறார். அவருக்கு என்ன நடந்தது, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாவலின் பிற்பகுதி விவரிக்கிறது.

நாவலின் நாயகிக்கு இருக்கும் முக்கியமான கேள்வி ஒன்றுதான். *லட்சக்கணக்கில் யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தபோது அதே ஊரின் பிற மக்களால் எப்படி ஏதுமே நடக்காதது போன்ற இயல்பு வாழ்க்கையை வாழ முடிந்தது* என்கிற கேள்வி. ஜெர்மனி மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளும் உலக நாட்டு அரசுகளும் உலக மக்களும் வெறுமனே நின்று எப்படி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க முடிந்தது என்கிற கேள்விக்கான பதிலைத்தான் தேடுகிறார்.

அக்கேள்விக்கான பதிலில் நம் *ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஹிட்லரை* கண்டடைகிறார். அந்த ஹிட்லர் அனைவருக்கும் வேடிக்கை பார்க்க கற்றுக் கொடுக்கிறான். போராட விழைபவரை முட்டாளாக பார்க்கச் சொல்கிறான். ஒடுக்கப்படுபவரையும் சுரண்டப்படுபவரையும் ஆதரவின்றி அநாதையாக நிறுத்தி குறைந்தபட்ச ஆதரவுக்கும் ஏங்க வைக்கிறான்.

ஜெர்மனியின் யூதர்கள் இஸ்ரேலின் பாலஸ்தீனர்கள், இந்தியாவின் இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் கறுப்பினத்தவர், இந்தியாவில் தலித்கள், பழங்குடியினர் மற்றும் உழைக்கும் வர்க்கம் என உலகளவில் ஒடுக்கப்படும் அனைவருக்கும் அந்தந்த நாட்டு அரசுகள் வழங்குவது இத்தகைய தனிமையைத்தான். இத்தகைய ஒடுக்குமுறையைத்தான். 

உலகெங்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக *அதிகார பிரதிபலன் எதிர்பாராமல் மெய்யான மக்கள் நேயத்துடன் எழும் குரல் இடதுசாரிகளுடையது மட்டும்தான்*. அதனாலேயே அவர்கள் நக்கலடிக்கப்படுகின்றனர். அந்த நக்கலுக்கு பின் ஆளும் வர்க்க அரசின் அரசியல் இருக்கிறது.

நாவலின் முக்கியமான கேள்வியாக *'எப்படி வேடிக்கை பார்க்க முடிந்தது'* என்கிற கேள்விக்கு *'உன் நாட்டை நேசி. உன் அரசை சந்தேகி'* என நாவலே பதிலுமளிக்கிறது. 

நாவலின் சிறப்பு பகுதியாக அது எழுதப்பட்ட விதம் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 வருடங்களாக இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு களம் தேடியும் இந்தியாவில் யூதர்களை தேடி அலைந்தும் தரவுகளை திரட்டி எழுதியிருக்கிறார் எழுத்தாளர் *நேமிசந்திரா.* நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு ஆற்றொழுங்கில் அமைந்துள்ளது.

நாவலுக்கான யோசனை உதித்த சுவாரஸ்யத்தை விவரிக்கும் எழுத்தாளர் 1995ல் நாவலை எழுத தொடங்கியிருக்கிறார். அதற்கான காரணமாக இந்தியச் சூழலில் எது அமைந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எழுதப்பட்ட விதத்தின் கடைசி பக்கத்தின் கடைசி வரிகள் இப்படி முடிகின்றன:

*'அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி, நின்று பார்த்தது உலகம்*. இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், *'அகிம்சையே உயர்ந்த தர்மம்'* என்று முழங்கும் இந்தியாவில் கூட, *'நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்'*. நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது'.

*நம்முடைய ஒரு நக்கல் சொல், கண நேர அமைதி கூட எவருக்கேனும் அநாதரவுதன்மையை வழங்கி விடுமெனில் நாமே ஹிட்லர்*. *அதை முறியடிக்கும் ஒவ்வொரு கணமும்* *நாமொரு இடதுசாரி*. இதில் உங்களுக்கு நிச்சயம் முரண் இருக்கும். அதனால்தான் *யாத் வஷேம்* உங்களுக்கான புத்தகமாகிறது.

வாசித்து விடுங்கள். 

*செவ்வானம்*

1 comment:

  1. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்பது போல், அடிமைத்தனம் என்று முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு யார் விடை தருவார்?.. இடது சாரிகளால் மட்டும் இது இந்த உலகில் சாத்தியமா?.. அதுவுமில்லாமல் ஏது வழி?...கொரோனா போன்ற வைரஸைவிட்டு இந்த பூமி தன்னைத் தானே மீண்டும் கற்காலத்திற்கு கொண்டு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை... மீண்டும் மனித நேரத்துடன் உயிர்தெழுவோமா என்று தான் தோன்றுகிறது நண்பரே...? அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete