Sunday, January 3, 2021

பெண்மை போற்றும் வேள்பாரி


 மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் அற்புத நூல் "வேள்பாரி" எப்படி பெண்மையை போற்றுகிறது என்ற கோணத்தில் எழுதப்பட்டுள்ள சிறந்த அறிமுகம்.

மதுரை கோட்டத் தோழர் பா.ரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வேள்பாரி யின், பறம்பு மக்களின் போர்த்தந்திரங்கள்,  போர்க்காட்சிகள் குறித்து பிரத்யேகமாக எழுத வேண்டும் என்று ஒரு ஆவல் பிறந்துள்ளது. அதற்காக மூன்றாவது முறையாக வேள்பாரியை படிக்க வேண்டும்.



*வாரம் ஒரு நூல்*

3.1.2021

*நூல் அறிமுகம்*

*வீரயுக நாயகன் வேள்பாரி*

*ரஞ்சனி பாசு*

*மதுரை*

*பெண்மை போற்றுதும்*



-------

*“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,*
*எந்தையும் உடையேம்;* *எம் குன்றும் பிறர் கொளார்;*
*இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,*
*வென்று எறி முரசின் வேந்தர் எம்*
*குன்றும்* *கொண்டார்;* *யாம் எந்தையும் இலமே!”*
(திணை - பொதுவியல் துறை – கையறுநிலை)

மேற்குறிப்பிட்ட புறநானூற்றுக் கவிதை வரிகள் தான் தமிழ் வாசக மனதுக்கு வேள்பாரி பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொடுத்த வரிகள். தமிழிலக்கியத்தில் பதிவான முதல் அகதிகளின் குரல் இதுவே. பறம்பு மலையையும், தலைவனாகிய பாரியையும் இழந்து அவருடைய மகள்கள் பாடியவை. கடையெழு வள்ளல்களில் ஒருவராகவும், முல்லைக்குத் தேர் தந்த பாரிவள்ளலாகவும் பொதுவான வாசிப்பில் பாரியைக் குறித்த தகவல்களாக இவற்றை மட்டுமே அறிந்திருந்தேன். இதைக் கடந்து, வேள்பாரி பற்றிய தொடர் என்ற அறிவிப்பினைப் பார்த்த போது என்னவாக இருக்கும், தொடர் எழுதும் அளவிற்கு என்ன உள்ளடக்கம் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் உருவானது. முதல் அத்தியாயத்தில் *“மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது”* என்று கவித்துவ ரசனை தோய்ந்த கபிலரின் அறிமுகமும், கபிலரைக் கேள்விக் கணைகளால் திக்குமுக்காட வைத்த, காதலியைப் பார்க்க ஒரு நாளைக்கு இருமுறை குன்றுகளைத் தாண்டிச் செல்லும் வீரன் நீலனின் அறிமுகமும் ஆர்வத்தைத் தூண்டின. *நூலாசிரியர் சு.வெங்கடேசன்* அவர்களின் பச்சையம் மிகுந்த வரிகள் காட்டின் வாசனையை வாசகருக்கும் கடத்தி விட்ட மாயத்தை 111 அத்தியாயங்கள் முடித்த பின்னரும் வியந்து கொண்டே இருக்கிறேன். 
*“சொல்ல ஒருபாடு விஷயமிருக்கிறது…”* என்று சு.வெங்கடேசன் முன்னர் ஒரு பேட்டியில் பகிர்ந்தது நினைவில் எழுகிறது. இந்நெடுந்தொடர் குறித்தும், இதன் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்தும் எழுத ஒருபாடு விஷயமிருந்தாலும்,  *வீரயுகநாயகன் வேள்பாரி* யில் பெண்மையின் சிறப்புகள் சித்தரிக்கப்பட்டதைப் பற்றிய என் பார்வையை சுருக்கமாக  பதிவு செய்கிறேன்.

*இருவேறு சமூக அமைப்புகள்:*

ஒரு வரலாற்றுப் புனைவை வாசிக்கும் பொழுது எழுத்தாளரின் மொழியின் வழியே பல்லாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நிலம் நம் மனதில் விரிகிறது. மக்களின் வாழ்க்கை முறை, உணவு, இருப்பிடம் சார்ந்த பலவற்றைக் குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. சமூக அமைப்பு குறித்தும், பொருளாதார ஏற்பாடுகள், அரசியல் அதிகார வடிவம் என இம்மூன்று தளங்களிலும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க அடிப்படை அம்சங்களை காத்திரமாக வடிவமைப்பதின் வழியே தான் அப்புனைவு நம்பகத்தன்மை பெறுவதாக மாறுகிறது. வேள்பாரி இந்த அடித்தளத்தை மிகக் கச்சிதமாகப் பெற்ற புனைவாகும்.

சங்ககாலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக, தன் அக உலகின் எண்ணப் பெருக்கினைக் கவிதைகளாக வடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு 41 பெண் கவிஞர்களின் கவிதை வரிகள் தமிழிலக்கியத்தில் சான்றாக உள்ளன. முன்னுரையில் நூலாசிரியர் *“இனக்குழு சமூக வாழ்வு முடிந்து உடமைச் சமுகம் மேலெழுகின்ற காலத்தை மிகத் துல்லியமாகவும் மிக விரிவாகவும் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம்”* என்று குறிப்பிடுகிறார். ஒரு வகையில் வேள்பாரி சங்க இலக்கிய காலத்தின் மையக் குறியீடு என்றே சொல்ல முடியும் என்றும் கூறுகிறார்.
அரண்மனைப் பதுமை
பாண்டிய இளவரசன் பொதிய வெற்பனுக்கு, பெருவணிகன் சூல்கடல் முதுவனின் மகள் பொற்சுவையை திருமணம் செய்யும் நிகழ்வு, அதையொட்டி நடைபெறும் வணிகம் சார்ந்த பகடையாட்டங்கள், அரசியல் கணக்குகள் தான் வேள்பாரியின் மையமான நிகழ்வு. பெண் தேடும் போது உயரக் கணக்கு, செல்வக்கணக்கு, வணிக வருமானக் கணக்கு என்று பல கணக்கீடுகளில் தான் திருமணம் முடிவாகிறது. ஆடலரங்கத்தில், பாண்டியப் பேரரசின் பத்துப் பெரிய அடையாளங்களுக்கான திருப்பெயர்களை வரிசைப்படுத்தி கட்டியங்காரன் கூறுகிறான். சொல்லப்படாத ஒரு அடையாளமாகத் தான் பெண்கள் அரச குடும்பத்தில் வாழ்ந்து மறைகிறார்கள். இழந்த காதலை பெருஞ்சுமையாக தனக்குள் சுமந்திருக்கும் பொற்சுவையின் வலியை உணராத வாசகரும் உண்டோ? அவள் வைகையைப் பார்த்தபடி *“ஓடும் நீருக்குள் உறங்கும் நதி”* தான் பெண் என்பது எழுத்தாளரின் முத்திரை.

மணமக்களுக்கான வேனிற்கால மாளிகையும், கார்கால மாளிகையும், பாண்டரங்கமும் ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை செலுத்தி உருவாகிறது. அதன் ஒவ்வொரு அடியிலும், கலைத்திறன் மிளிர்கிறது. ஆனால், இளவரசன் மனைவியிடம் அதிகமாகக் காதல் கொண்டு விடக்கூடாது என்று பேரழகி நீலவள்ளியை அழைத்துவரும் அரசியலும் நிகழ்கிறது. பெண் மனதுக்கும், உணர்வுகளுக்கும் அரண்மனைக்குள் என்ன பெறுமதி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பூக்களும் கனிகளுமாகப் பெண்கள் தம் இனத்தைப் பெருக்குபவளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கூட பலாவும், மாதுளையும் தட்டில் வைக்கப்பட்டது எனக்கூறும் போது, சுகமதியுடன் சேர்த்து நாமும் நடுங்கித்தான் போகிறோம். இளவரசன் தன் வழித்தோன்றலை உருவாக்கும் வேளையைக் கணித்து, அப்பொழுது தான் அவன் பள்ளியறை நுழைகிறான். பெண்ணுடல் மீதான ஆதிக்கத்திற்கு, அரண்மனையில் அளவேது?

மையூர்கிழாரின் பரிசாக வந்த காமன் விளக்கின் சிறப்புகளை பொற்சுவை மட்டுமே நுணுக்கமாக உணர்ந்து, ரசித்து, உருவாக்கிய காராளியை சந்திக்க விழைவதே பெரும்புலவர் கபிலரிடம் பெற்ற அவளது கல்வியறிவின் சாட்சி. அவள் அரண்மனைப் பதுமை இல்லை என்பதை உணர்த்தும் காட்சியும் அதுவே.

வனத்தின் பறவைகள் நீலன் - மயிலா காதல் இணையரைத் துவக்கத்திலேயே தெரிந்து கொள்கிறோம். முதல் அத்தியாயத்திலேயே *“பெண்ணின் இதழ் இவ்வளவு சுவையேறி இருக்கிறதே, எப்படி?”* எனக் கபிலரிடம் கேட்கிறான் நீலன். மயிலாவோ, கபிலரை வழிமறித்து காதலனைப் பிரிந்து இருப்பதன் வேதனையை வெளிப்படுத்துகிறாள். கதைகளின் வழி முருகன் - வள்ளியின் காதல் கதை விரிகிறது. வேடர் குலமும், கொடிக்குலமும் இணைந்தது கவிதையான கணம்.

ஏழிலைப்பாலையின் மொத்தப் பூக்களும் தனக்குள் இருந்து மலர்ந்தவை என்று வள்ளி மயங்கி நிற்பது காதலின் உச்சம். சிலாக்கொடியில் பிணைக்கப்பட்ட சந்தனமரக்கிளைகளின் நறுமணமும், வேங்கை மரத்தின் ஈரமும், காதலைக் கொண்டாட்டமாக்கிய தருணம் ரசனைக்குரியவை. பொதினி மலை குலமகள் ஆதினியை, வேளிர் குலத்தலைவன் பாரி மணம் புரிவதும் கூட, காதலின் வெளிப்பாடேயன்றி, அரசியல் பகடையாட்டம் அல்ல என்பது கவனத்துக்குரியது. தனக்கானவனைக் கண்டு விட்டால் மயில் கொன்றை மரத்துக்கு மாலை சூட்டி மகிழ்வர் பொதினி மலைப் பெண்கள் என்ற செய்தி, பெண் உணர்வுகளுக்கு செய்த மரியாதை. திரையர் குலத்துப் பெண் தூதுவையை வேளிர் குல சூலிவேள் தன் வீரத்தை நிரூபித்து, காதலைப் பரிசாகப் பெறுவது காலம் கடந்த கதை.

அங்கவையும் உதிரனும் காதலிப்பதற்கு வசதியாக கபிலரைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு உதிரனை நியமிக்கும் பாரியின் தந்தைமை அழகு. கொற்றவைக்கூத்தில் புதிய இணையர்கள் தீக்களி பூசி ஆடிய போது அங்கவையைக் கண்டதினால் உணர்ச்சிவயப்படும் பாரி, சந்தன வேங்கை மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று அங்கவை சொல்லும் போது, அவளிடம் தோற்று தாயாகவும் உணரும் தருணம் நெகிழ்ச்சி. நாளை என் பேரக்குழந்தையின் கண்கள் நாகர்குடி அடையாளத்துடன் நீலவளையம் பூத்திருக்கும் என்று காதலைக் கொண்டாடும் குடும்பத்தலைவன், குலத்துக்கே தலைவனாய் இருப்பது பெரும் வரமல்லவா? சிறகு நாவல் பழங்களின் பொழிவும், இரவில் ஒளி உமிழும் இராவெரி மரமும், வெண்சாரையின் கூடலும் என்றும் நினைவில் நிற்கும் காதற் காமத்தின் சின்னங்கள்.

அறிவின் விரிவு

பெருவணிகரின் மகளாக, பேராசான் கபிலரின் மாணவியாக வளர்ந்த பொற்சுவையின் அறிவின் விரிவு பிரமிப்பூட்டுகிறது. மழைநீர் மட்டுமே அருந்தும் சக்கரவாகப் பறவையை நேசிக்கிறாள். அவளின் சொற்கள் அறிவில் தோய்ந்தவையாகவே வெளிப்படுகின்றன. *“எது இலக்கியம், எது காதல் என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது”* என்பது தீர்க்க அறிவின் வெளிப்பாடு. சுகமதியும் பொற்சுவையின் அறிவிற்கு ஈடுகொடுத்து உரையாடும் திறன் பெற்றவளாக இருக்கிறாள். பொற்சுவையின் கூர்மதிக்கு, பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். கபிலர் தன் திருமண நிகழ்விற்கு வராமல், பறம்பு நாட்டுக்குப் போயிருப்பார் என்று யூகிக்கிறாள். நறுமணக்கலவையை, அதன் கடுமணம் காரணமாக ஆண் உருவாக்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். 

காமன் விளக்கின் சிறப்பறிய வெங்கல் நாட்டிற்கு பயணப்பட்டாலும், போரின் பாதிப்புகளைக் குறித்து கவலையுறுகிறாள். நிலமொரண்டி எனும் காதல் மலரின் சிறப்பை காராளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள, கலைத்திறனை மதித்து அவன் இருப்பிடம் நோக்கி செல்கிறாள்.

திசைவேழரை நோக்கி,” கோள் கணிக்கும் பேராசான் கொலை நிலத்தில் பரண் ஏற எப்படி ஒப்புக் கொண்டீர்" எனக் கேள்வி எழுப்பும் துணிவு அறிவின் ஆற்றல் தான். கபிலரைக் காண பல்லக்கில் செல்லும் இறுதிப்பயணத்திலும், தன் நுண்ணறிவால் செயல்பட்டு, ஈங்கையனை வீழ்த்துகிறாள். 

புதினம் முழுவதிலும் அரச குடும்பத்து மகளிர் எந்த விதமான கதாபாத்திரமாகவும் வரவில்லை என்பது ஆச்சரியமே.

நீலனுடன் காதல் கொண்ட வேளையிலும் கபிலரின் வரவை உணர்ந்து கூறிய மயிலா, காதலனுடன் பயணித்த வேளையில், அவன் மயக்கமுற்ற போதிலும், தனி ஒருவளாக அவனை எதிரிகளிடம் காத்து, நெடுங்காடர்களைப் பற்றி அவதானித்து, படையினரைப் பற்றிய முழுமையான தகவல்களைக் கடத்திய அங்கவை, ஒற்றைப் பச்சிலையால் மதங்கொண்ட யானையை அமைதிப்படுத்திய பறம்பின் பெயரறியாப் பெண், காட்டெருமையை கால் நரம்பில் தாக்க வேண்டும் என்று நுட்பம் சொல்லும் திரையர் குல முதுபெண், நெருப்பு சூழ்ந்த காட்டில் நாகங்கள் தப்பிப் பிழைத்ததைக் கண்டறிந்து, அவ்வறிவைப் பெற தானே தீக்களி பூசி நெருப்பில் இறங்கிய நாகர் குடியின் முதுமகள், காதலனைப் பறி கொடுத்த வஞ்சினம் தீர செம்பா கிள்ளியைப் பழிவாங்குதல், குலநாகினிகளின் பேரறிவு என பறம்பில் ஒவ்வொரு பெண்ணும் பேரறிவின் சேகரமாக நடமாடுகிறார்கள். 

பறம்பின் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, காதலைக் கொண்டாட்டமாக, பெண்களின் ஆளுமையைப் பெருமிதமாகப் போற்றி வாழ்கின்றனர். உடைமைச் சமுதாய அரச குடும்பங்கள் பெண்களைப் பகடைக்காய்களாகப் பார்க்கிறார்கள். கபிலரிடம் போர் துவங்கும் முன், பாரியின் மகளை மூவேந்தரில் ஒருவருக்கு மணமுடிப்பது என்ற முன்மொழிவைக் கூறி, மண உறவை அரசியலாக்கும் இழிசெயலைக் கூசாமல் செய்கிறார்கள். மான்கள் இணைசேரும் கார்கால இரவில், பாழி நகருக்கு தேரில் செல்ல மாட்டான் பாரி என்பதும், முல்லைக் கொடி படர்ந்த தேரை அவற்றுக்கான பரிசாக விட்டு நகர்வதும் பாரியை பெருந்தலைவனாக உணர்த்துகின்றன.

சு.வெங்கடேசன் அவர்களின் முதல் புதினமான காவல் கோட்டம் முழுவதிலும் பெண் கதாபாத்திரங்கள் ஆளுமை மிக்கவர்களாக, அறிவிற் சிறந்தவர்களாக உலவினர். வேள்பாரியிலும் அது தொடர்கிறது. மனித குல வரலாற்றில் விவசாயத்தைக் கண்டு பிடித்ததும், உணவுப் பொருட்களை பதப்படுத்துவதைக் கண்டுபிடித்ததும் பெண்ணறிவே. நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு ஆண் உணவு என்றும், நீரில் வேக வைக்கப்பட்ட உணவுகளுக்கு பெண் உணவு என்றும் பெயர் என்று இரண்டாம் அத்தியாயத்தில் ஆசிரியர் கூறுகிறார். *ஆண் அவசரத்தின் அடையாளம்*, *பெண் பக்குவத்தின் அடையாளமாகவும் ஆனாள்* என்று.

ஆணும் பெண்ணுமான இருசக்திகளின் இணைந்த காதல் தான் இயற்கையின் ரகசியம். அது தான் மனித குலம் தழைக்கவும் காரணமாகிறது. பெண்ணின் ஆளுமை போற்றப்படும் சமூகங்கள், நாகரிகத்தில் முன்னேறியவை என்பதற்கு சங்ககால தமிழ்ச்சமூகம் மானுடவியலில் மிகப் பெரிய அடையாளம். வேள்பாரி புதினம் அந்த அடையாளத்தை முத்திரையாக்கி இருக்கிறது.

*பெண்மை போற்றுதும்!! பெண்மை போற்றுதும்!!*

*செவ்வானம்*

No comments:

Post a Comment